முந்தைய அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை நிறுத்துவதால் கிடைக்கும் 6,000 கோடி ரூபாய் நிதியை, புதிய திட்டங்களுக்கு செலவிட அ.தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை முடிந்துவிட்டதாலும், இந்தாண்டுக்கு நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களை, புதிய அரசு நிறுத்திவிட்டதாலும், புதிய அரசுக்கு நிதிச்சுமை குறைந்துள்ளது.தி.மு.க., அரசு, இலவச கலர் "டிவி' திட்டத்துக்கு ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு, 509 கோடி, பேரூராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு 70 கோடி, நமக்கு நாமே திட்டத்துக்கு 50 கோடி, சமத்துவபுரங்கள் அமைக்க 75 கோடி, இலவச காஸ் திட்டத்துக்கு 140 கோடி, நடுநிலைப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்க 50 கோடி, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு 750 கோடி ரூபாய் என, ஒவ்வொரு ஆண்டும் செலவழித்து வந்தது.
இவற்றில், காஸ், சமத்துவபுரங்கள், நமக்கு நாமே, கலைஞர் காப்பீடு, கலர் "டிவி' போன்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இது தவிர, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நடுநிலைப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்குதல் போன்ற திட்டங்கள் முடிவடைந்து விட்டன. எனவே, ஆண்டுதோறும் இவ்வகையில் செலவழித்து வந்த தொகை 3,000 கோடி ரூபாய் வரை மிச்சமாகி உள்ளது.
இது தவிர, புதிய தலைமைச் செயலகம் வளாகம் கட்ட இந்த நிதியாண்டில் 244 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சென்னையில் கோட்டூர்புரத்தில் கடந்தாண்டு, 179 கோடி ரூபாயில் நூலகம் கட்டியது, புதிய பஸ்கள் வாங்க 250 கோடி, கிராம சாலைகள் மேம்பாட்டுக்கு 350 கோடி, பள்ளி குழந்தைகளுக்கு, "டிக்ஷனரி' வழங்க 10 கோடி ரூபாய் போன்ற செலவுகளை, புதிய அரசு மேற்கொள்ள வேண்டியதில்லை.
கடந்த நிதியாண்டுடன் பல்வேறு திட்டங்கள் முடிந்ததால், அந்த நிதியை வைத்து, இந்த ஆண்டில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை முந்தைய அரசு செயல்படுத்தியது. இதன்படி, இந்த நிதியாண்டில் இத்திட்டத்துக்கு 2,250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இது தவிர, பேரூராட்சிகளில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர, 375 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தப்பட்டது. வீடு வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டு, பசுமை வீடுகள் கட்டித் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முந்தைய அரசு திட்டங்களுக்காக செலவழித்து வந்த நிதி, தற்போது மிச்சமாகி உள்ளது. இதை வைத்து, புதிய திட்டங்களை, புதிய அரசு செயல்படுத்த உள்ளது.ஏற்கனவே, முந்தைய அரசு, பொது வினியோகத் திட்டத்தில் ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி, மளிகை பொருட்கள், பருப்புகள் போன்றவற்றை வழங்க, 4,000 கோடி ரூபாயை மானியமாக வழங்கி வந்தது.
அதே திட்டங்களை புதிய அரசு தொடர்ந்த போதிலும், இலவச அரிசி திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால், கூடுதலாக 500 கோடி ரூபாய் மானியம் வழங்க வேண்டியிருக்கும். இது தவிர, படித்த பெண்கள் திருமணத்துக்கு 50 ஆயிரம் ரூபாயுடன், தாலிக்கு தங்கம் வழங்குதல், மீனவர்களுக்கான உதவித் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்துதல், முதியோர் உதவித் தொகையை 1,000 ரூபாயாக உயர்த்துதல் போன்ற திட்டங்களை, புதிய அரசு செயல்படுத்த துவங்கியுள்ளது.முந்தைய அரசும் இத்திட்டத்துக்கு 1,421 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. தற்போது, மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கிய 200 ரூபாயை, மாதம் 400 ரூபாயாக உயர்த்தியுள்ளது. எனவே, புதிய அரசுக்கு கூடுதலாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் மாதம் 300 ரூபாய் வழங்க வேண்டியிருக்கும்.
இதுதவிர, செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து, இலவச லேப்-டாப், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டங்களை, புதிய அரசு செயல்படுத்த உள்ளது. இவற்றை, முந்தைய அரசு செலவழித்த நிதியை மிச்சப்படுத்துவதால், ஓரளவு சமாளிக்க முடியும். எனினும், பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு கூடுதல் தொகை ஒதுக்க வேண்டியிருக்கும். எனவே தான், பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்த போது, லேப்-டாப் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி உதவியை கோரியுள்ளார். எனினும், தற்போதுள்ள நிதி ஆதாரங்களை கொண்டு, புதிய திட்டங்களை அ.தி.மு.க., அரசு செயல்படுத்த முடியும். தற்போதுள்ள நிலையில், பெட்ரோல் விலை 67 ரூபாயாக உயர்ந்துள்ளதால், அதில் 27 சதவீதம் விற்பனை வரியாக தமிழக அரசுக்கு கிடைக்கிறது. இதனால், அரசின் வருவாய் உயர்ந்துள்ளது என்பதும், தமிழக அரசின் நிதி வலுவாக இருப்பதற்கு காரணம்.
|
No comments:
Post a Comment