Friday, June 10, 2011

காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன்

காதல் மனைவியின் இரண்டாவது திருமண வரவேற்பில் கலந்து கொண்ட முதல் கணவனின் கண்களை பெண்ணின் அண்ணன் கைகளால் தோண்டி எடுத்த கொடூரச் செயல் கர்நாடகத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியாவைச் சேர்ந்தவர் ரகு (24), ஜிம் இன்ஸ்ட்ரக்டர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுஷாவை (23) காதலித்தார். ரகுவிடம் வசதியில்லை என்ற காரணத்தால் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ள அனுஷா வீட்டில் மறுத்தனர். இந்நிலையில் ரகுவும், அனுஷாவும் வீட்டைவிட்டு ஓடிப்போய் தர்மஸ்தலாவில் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ஊர் திரும்பியவுடன் அனுஷா குடும்பத்தார் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். ரகுவையும் நைய்யப் புடைத்தனர். அனுஷாவுடன் சேர ரகு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. ஒரு முறை 30 பேர் கொண்ட கும்பல் அவரைக் கொலை செய்ய முயன்றது. ஆனால் ரகு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இனியும் அனுஷாவுடன் சேர்வோம் என்ற நம்பிக்கையை இழந்த ரகு தனது தாயுடன் பெங்களூருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுஷா வீட்டில் உள்ளவர்கள் ரகுவை செல்போனில் தொடர்பு கொண்டனர். அனுஷாவுக்கு திருமணம் நடக்கப்போவதாகவும், கடைசியாக ஒரு முறை வந்த பார்க்குமாறும் நல்லவிதமாக பேசியுள்ளனர்.

இதை நம்பி ரகு தனது நண்பர்கள் ராமு, நிதேஷ், கிஷோர் ஆகியோருடன் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணத்தில் கலந்து கொள்ள சென்னபட்டனா சென்றார். அவர்கள் புது மணத் தம்பதிகளை வாழ்த்தினர்.

பின்னர் தான் தங்களுக்கு வலைலவிரிக்கப்பட்டதையே அவர்கள் உணர்ந்தனர். அந்த 4 பேரையும் அனுஷா அண்ணன் அன்ஜன் கௌடாவின் ஆட்கள் தாக்கினர். ரகுவையும், ராமுவையும் ஆட்டோவில் ஏற்றி ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு சென்றனர்.

அங்கு அன்ஜன் கௌடா இனி என் தங்கையின் மீது உன் பார்வை படக்கூடாது என்று கூறி ரகுவின் இரண்டு கண்களை பிடுங்கி எடுத்துள்ளார்.

ரகுவை போலீசார் பெங்களூரில் உள்ள நாராயண நேத்ராலயாவில் சேர்த்தனர். அந்த மருத்துவமனையின் சேர்மன் புஜங்செட்டி ரகுவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டார்.

ரகுவின் வலது கண் 100 சதவீதமும், இடது கண் 95 சதவீதமும் சேதமடைந்துவிட்டது. இதனால் அவருக்கு பார்வை

திறன் இருக்காது என்று புஜங்செட்டி தெரிவித்தார்.




ராம்நகர் தனிப்படை அனுஷாவின் மாமாவை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள அன்ஜன் உள்ளிட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment