கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவரை ஆசிரியர்கள் திட்டி, மிரட்டியதால், மனமுடைந்த மாணவர், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸாருக்கு தெரியாமல் மாணவன் பிணம் எரிக்கப்பட்ட நிலையில், பள்ளி ஆசிரியர்கள் மிரட்டியது குறித்து, இறந்த மாணவர் எழுதிய ஏழு பக்க கடிதம் சிக்கியுள்ளது. சம்பவம் குறித்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம், நிலவாரப்பட்டி இருசாயி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் - விமலா தம்பதியின் இரண்டாவது மகன் சீனிவாசன் (18). இவர், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 கணக்கு பிரிவில் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை சீனிவாசன் பெற்றோர், அண்ணன் சத்தியமூர்த்தி ஆகியோர் வெளியில் சென்றனர். வீட்டில் சீனிவாசன் மட்டும் தனியாக இருந்துள்ளார். மதியம் 2.30 மணிக்கு வீடு திரும்பிய தாய் விமலா, வீடு திறந்து கிடப்பதை கண்டு, உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டு உத்தரத்தில் சேலையில் தூக்கு போட்டு சீனிவாசன் தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், மாலை 5 மணிக்கு நிலவாரப்பட்டி மயானத்தில் மாணவன் சீனிவாசன் உடலை எரித்து விட்டனர். நேற்று, சக மாணவ, மாணவியர் மற்றும் உறவினர்கள், சீனிவாசனின் ஸ்கூல் பேக், பெட்டி ஆகியவற்றை திறந்து பார்த்தபோது, இறக்கும் முன் சீனிவாசன் எழுதிய ஏழு பக்க கடிதம் கிடைத்தது.
அக்கடிதத்தில், "என் சாவுக்கு, என் பெற்றோரோ, என் குடும்ப உறவினர்களோ காரணம் இல்லை. என் முடிவை எழுதியவர்கள், நான் பயிலும் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள். கணித ஆசிரியர் செந்தில், இயற்பியல் ஆசிரியர், வேதியியல் ஆசிரியர், தமிழ் ஐயா ராமலிங்கம் என, எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் மாணவர் எழுதியிருப்பதாவது: நான் 10ம் வகுப்பு வரை, தாசநாயகன்பட்டி அரசு பள்ளியில் படித்து வந்தேன். மேல்நிலைக் கல்வியை பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தேன். அரசு பள்ளி என்றால், அனைவருக்கும் அலட்சியம் தான். நான், 12ம் வகுப்புக்கு சென்று மூன்று நாட்கள் தான் ஆகிறது. எங்கள் கணக்கு ஆசிரியர் நடத்தும் பாடம் எங்களுக்கு புரியாது. இவர் தான் எங்களுக்கு, 11ம் வகுப்புக்கும் கணக்கு பாடம் நடத்தினார்.
அப்போது இருந்தே எங்களுக்கு புரியும்படி மெதுவாக நடத்தவும் என, பல முறை கேட்டு வந்தோம். பல முறை கேட்டும், அவர் சரியாகவே நடத்தவில்லை. கடந்த 16ம் தேதி நடத்திய கணக்கு பாடம் எங்களுக்கு புரியவே இல்லை. கணக்கை புரியும்படி நடத்தும்படி கேட்டதால், என்னை முறைத்துவிட்டு போர்டில் இருப்பதை எழுது என, சொல்லி விட்டு சென்றார். கணக்கு பாடத்தை புரியும்படி, மெதுவாக நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுக்க, வகுப்பு மாணவர்களிடம் கையெழுத்து வாங்கினேன். மாலை பள்ளி முடிந்து நண்பன் ஜீவாவும், நானும் வந்து கொண்டிருந்தோம்.
அப்போது, வேதியியல் ஆசிரியர் என்னை அழைத்து, "படிக்க வந்தா, படிக்கிற வேலையை மட்டும் பார். தேவையில்லாத வேலையை பார்க்காதே' என, கோபமாக திட்டினார். "நீ உன் வகுப்பில் எல்லோர் முன்னாடியும், கணக்கு புரியவில்லை என, சொன்னியாமே; என் வகுப்பில் அப்படி செல்லிப் பார்; என்ன நடக்கும் பார்' என, மிரட்டினார். "கணக்கு நடத்தும் போது சந்தேகம் கேட்க கூடாதா? எங்கள் வகுப்பில் உள்ள அனைவருக்கும் கணக்கு புரியவில்லை' என, கூறினேன். அடுத்த நாள், 17ம் தேதி மதியம் கம்ப்யூட்டர் ஆசிரியர் என்னை அழைத்து, "கையெழுத்து ரிப்போர்ட் வாங்கி இருக்கியாமே; வகுப்பு ஆசிரியரான என்னிடம் ஏன் சொல்லவில்லை' என, கேட்டார். அப்போது, இயற்பியல் ஆசிரியர், "நீ என்ன பெரிய இவனா? மூடிக்கிட்டு உக்காந்து டெஸ்ட் எழுது' என, திட்டினார். பின்னால் வந்த தமிழ் அய்யா ராமலிங்கம், "நீ என்ன பெரிய ரவுடியா? இது என்ன காலேஜா? இது அரசு பள்ளி. உன்னை பள்ளியில் சேர்த்து கொண்டதே பெரிசு. இந்த லட்சணத்தில் நீ இப்படி ரவுடித்தனம் பண்ற. உனக்கு புரியவில்லை என்றால், "டிசி' வாங்கிக் கொண்டு உனக்கு பிடித்த வாத்தியார் இருக்கிற பள்ளிக்கு சென்று படி' என்றார். "நான் கையெழுத்து வாங்கியதை, ஹெச்.எம்.,மிடம் கொடுக்கலாமா?' என, கெமிஸ்ட்ரி ஆசிரியரிடம் கேட்டேன். ஆனால், அவரோ எல்லா ஆசிரியரிடமும் சொல்லி, திட்டு வாங்கி வைத்து விட்டார்.
மாலை 3.30 மணிக்கு தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டு, வீட்டுக்கு வந்து கடிதத்தை எழுதுகிறேன். என் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால், என்னை நினைத்து அப்பா, அம்மா அழக்கூடாது. இனி, மனித பிறவி எனக்கு வேண்டாம் என, வேண்டுகிறேன். அரசுப் பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் மேம்படுத்தவும், சிறப்பான கல்வி அளிக்க வேண்டும் என, கல்வி அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன். என் மரணம் மூலம் அரசு பள்ளியில் சிறு மாற்றம் ஏற்படாதா?, இனி என் மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்க போகிறார்களோ தெரியவில்லை. திறமையான ஆசிரியர்கள் நிறைய பேர், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மேல்நிலை வகுப்புக்கு தகுதியான ஆசிரியர்களை போட வேண்டும். இதற்கு முதலமைச்சர் நிரந்தர தீர்வு காண வேண்டும். இக்கடிதத்தை, சி.இ.ஓ.,விடம் ஒப்படைக்கவும். என மரணத்துக்கு பிறகு சட்டம், தன் கடமையை செய்ய வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த கடித விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார், தற்கொலை செய்து கொண்ட மாணவன் சீனிவாசன் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், மல்லூர் போலீஸில் புகார் செய்ய மாணவனின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது. நேற்று, இரவு 8 மணிக்கு, மகன் மரணத்திற்கு காரணமான, பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சீனிவாசனின் தந்தை சேகர், மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரனிடம், சீனிவாசன் எழுதி வைத்திருந்த, 7பக்க கடிதத்தையும், இணைத்து புகார் செய்தார். இது குறித்து போலீஸார் கூறியதாவது: போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மாணவன் சீனிவாசன் உடலை எரித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இறப்பதற்கு முன் சீனிவாசன் எழுதி வைத்த கடித்தை, அரசு தரப்பு வக்கீல்களிடம் காட்டி, அவர்கள் தரும் ஆலேசானைபடி ஆசிரியர்களிடம் விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையை துவக்கியுள்ளனர்.
|
No comments:
Post a Comment