Monday, June 20, 2011

என் வீட்டு சிட்டுக்குருவி: The House Sparrow

எங்க வீட்டு சிட்டுக்குருவிகளைப் பத்தி பேசணும்னு நான் நினைச்சு, நினைச்சு தள்ளிப் போட்ட விசயத்தைப் எழுத உட்காருவதற்கான நேரம் இன்னக்கி காலையிலதான் அமைஞ்சிருக்கு. கிட்டத்தட்ட என்னோட வேலை இடத்தில நானும் இவைகளை எட்டு வருஷத்திற்கு மேலா பாத்துக்கிட்டு வாரேன்.

என்னய மாதிரி இல்லாம இந்த சிட்டுக்குருவிகள் பாட்டுக்கு அமைதியா எதைப் பற்றியும் கிஞ்சித்தும் அலட்டிக்காம தாவித் தாவி கிடைக்கிற உணவு விசயங்களை கொத்தி எடுத்திட்டு அங்கிட்டும் இங்கிட்டுமா தலையையாட்டி பார்த்திட்டு இருக்கும். தடிமாடு மாதிரி நான் அதன் வழியில நின்னா கொஞ்சம் நகருவனான்னு பார்க்கும் இல்லன்னா பொசுக்கின்னு தலைக்கு மேலே அடப் போப்பா அப்படின்னு பறந்து கூரையில கட்டி வைச்சிருக்க கூட்டில அமர்ந்து உணவு வழங்கிட்டு சிறிது நேரம் உள்ளரயே இருந்திட்டு மீண்டும் இரை தேட கீழே இறங்கிடும்.

அந்தக் கூடு நான் முதன் முறையாக வைத்துப் பார்த்த இடத்திலேயே அப்படியே இருக்கிது. அந்த அமைப்பில என்ன ஒரே ஒரு வித்தியாசம் பார்த்திருக்கேன்னா, கொண்டு வந்து சேர்க்கும் நார்களின் நிறத்தைக் கொண்டு அவை புதிதாக சேர்க்கப் பட்டிருக்கிறது எனவும், கூட்டின் நீளம் நீட்டப் பட்டிருக்கிறது என்றும் அறிந்து வைத்திருக்கிறேன். மற்றபடி வாகுவாக அதன் கூட்டை மிக்க சிரத்தையுடன் செங்கல் சுவற்றிற்கும் நீட்ட வாக்கில் ஓடும் இரும்பு கம்பிக்கும் இடையில் அமைத்து வைத்திருக்கிறது. அந்தக் கூடு என் தலைக்கு நேர் மேலாக இருக்கு, அங்க நின்று கொண்டிருக்கும் பொழுது நில நேரங்கள்ல அவைகளுக்கிடையேயான உரையாடல் சற்றே பலமாக இருக்கும் கீழே நின்று ரசிக்கும்படியாக. பல நேரம் மிக்க அமைதியாக இருந்துவிடுவதுமுண்டு.

என்னோட கூரையில அடையிற குருவி இனம் வந்து வீட்டுச் சிட்டுக்குருவி (the house sparrow -passer domesticus). எனக்கு இவைகளைப் பத்தி எழுதணும்னு ஆர்வம் வந்ததிற்குக் காரணமே இத்தனை வருஷமா இதே இடத்தில் பார்க்கிறேனே, இதுக எத்தனை தலைமுறையா இருக்கும்? அப்படி தலைமுறை தலைமுறையா வந்தா, இதுக எத்தனை வருஷம் வாழுது? எத்தனை முறை வருஷத்தில முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிது? எப்படி பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே அதுகளோட குஞ்சுகள் மிகச் சரியா அதே கூரையை கண்டுபிடிச்சு வந்து குடும்பம் நடத்துது? அப்படி இப்படின்னு பெரும்பாலும் நான் மொக்கையா இருக்கும் பொழுது இது போன்ற கேள்விகள் மண்டைக்குள்ளர குடைஞ்சதுனாலே இங்க பதிவா கொண்டு வர அளவிற்கு ஆயிப்போச்சு.


சிட்டுக்குருவிகள் ஒரு காலத்தில் நீக்க மற மனித குடியேற்றம் எங்கெல்லாம் அரங்கேறியதோ அங்கெல்லாம் நோக்கத்தோடோ அல்லது திட்டமிடாமலோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான் வாழும் இடத்தில் இது போன்று நகரங்களையொட்டி தட்பவெப்பம் கொஞ்சம் இதமாக இருக்கும் பொழுது மனித வாழ்விடங்களை சார்ந்து வாழ்வதாக அமைத்துக் கொண்டும், குளிர்காலத்தில் கிராமங்களை ஒத்த இடங்களுக்கும் குடி பெயர்ந்து விடுவதாக தெரிகிறது.


இந்த சிட்டுக்குருவிகள் இனம் வந்து பனை மரத்தில கூடு கட்டி வாழுமில்ல முடைவான் குருவி (the weaver bird) அத்தோட இனம்தானாம்.

இந்த புகைப்படத்தில நீங்க பார்க்கிறது ஒரு ஆண் குருவி. ஆண்/பெண் என அடையாளப் படுத்தி பார்க்கிறது ரொம்பச் சுலபம். ஆண் குருவி நல்லா வண்ணமயமா இருக்கும், செங்கல் நிறம் மற்றும் கருமை நிறக் கோடுகள் அதன் இறக்கையின் மீதும், அலகிற்கு பக்கத்தில் கருமையான ஒரு திட்டும், அலகிற்கு மேலே முன் மண்டையின் மீது சாம்பல் நிறமாகவும் இருக்கும். பெண் குருவிகள் நிறம் குறைச்சலாவும், சாம்பல் நிறத்திலும் இருந்து போகும். இதோட ஆரோக்கியம் அதன் நெஞ்சுப் பகுதியில் இருக்கும் அந்த கருமையான திட்டைக் கொண்டும் அறியலாமாம். நல்லா அடர்த்தியா இருந்தா, ஆரோக்கியமாக இருப்பதாகவும், இனவிருத்தி செஞ்சிட்டும் இருக்காருன்னும் தெரிஞ்சிக்கோங்க.

அதோட அலகு இந்த நாட்டில குளிர்காலத்தில கருமை நிறமாகவும், மிதமான வெப்ப காலங்கள்ல மஞ்சளாவோ அல்லது பிரவுன் நிறத்திலோ இருக்கும்.


வருஷத்திற்கு ரெண்டு, மூணு முறை முட்டையிடும் போல, ஒவ்வொரு முறையும் 2-5 முட்டை வரைக்கும் இட்டு 14-16 நாட்கள் அடைகாக்குதாம். இது பொதுவா ஏப்ரல்-ஆகஸ்ட் மாதம் வரைக்கும் நடை பெறுவதாக தெரிகிறது. கட்டற்ற சுதந்திரத்தோட சுத்தித் திரியற சிட்டுக்குருவிகள் குறைந்தது ஐந்து வருடங்கள் வாழ்வதாகவும், கூண்டில அடைச்சு வாழ வைச்சிப் பார்த்ததில பத்து வருஷம் வரைக்கும் கூட நீட்டிச்சதா சொல்லிக்கிறாங்க. ஆனா, என்னயப் பொருத்த மட்டில அதில உடன்பாடு இல்ல, எத்தனை வருஷம் மூச்சு விட்டுக்கிட்டு திரிஞ்சோங்கிறது முக்கியமில்ல; எத்தனை மணி நேரம் வாழ்ந்தோங்கிறதிலதான் விசயம் இருக்கின்னு நினைக்கிற ஆளு நான். அதுனாலே அதோட வன வாழ்க்கை ஐந்து வருஷமே இனிப்பா இருக்கும் அதுகளுக்கும்; எனக்குமின்னு தெரியுது.

ஆனா, இது போன்ற ரொம்ப சாதாரணமா நாம கண்ணுற்று வந்த பல பறவைகளின் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமா ஒடுக்கப்பட்டு, இப்பெல்லாம் நல்லா கண்ணை கசக்கிட்டு பார்த்தாத்தேன் தட்டுப்படுதுங்கன்னு கவனிச்சிட்டு வாரவங்களுக்குத் தெரியும். உலகம் முழுக்கவுமே இப்போ சிட்டுக்குருவிகள் 7.5% குறைஞ்சிடுச்சின்னும், பறவைகளின் ரெட் புக் இவைகளை அபாயத்தில் இருக்குங்கிற லிஸ்ட்லயும் சேர்த்து வைச்சிருக்கிது.

போன வருஷம் பறவை பார்த்தல் அப்படிங்கிற பதிவில இந்த செல் ஃபோன் டவர்களின் பெருக்கம் இது போன்ற பறவைகளின் இருத்தலை குறைச்சிடுச்சான்னு ஒரு பேச்சு வந்து ஒரு பின்னூட்டத்தின் மூலமா பேசினோம், அதனையும் இங்கே இணைக்கிறேன் ஆர்வமுள்ள மக்கள் எஞ்சாய்! ...


நண்பர் செந்தழல் ரவியும் அடைக்கலங் குருவிகள் என்ற தலைப்பில் சில வருடங்களுக்கு முன்பு ரொம்ப ஃபீல்வோட சிட்டுக்குருவிகளின் ஆண்மையிழப்பிற்கான காரணத்தை அலசியிருக்கார். அங்கும் சென்று வாங்க!



...இயற்கை நேசி|Oruni said...

கல்வெட்டு,

//செல்போன் டவர் மற்றும் அது ஏற்படுத்தும் நுண்ணலைகள் பறவைகள் மற்றும் சிறு பூச்சிகளின் இருப்பை அதிகம் பாதிப்பது உண்மையா? சிட்டுக்குருவிகள் நிறைய தென்படுவது இல்லை இப்போது.//

நல்லதொரு கேள்வியுடன் வந்திருக்கீங்க. இது ஆழமாக அலசப் பட வேண்டிய ஒரு விசயமிங்க. அதுவும் மனிதச் சமூகத்தின் மாறிப்போன வாழ்வு முறையில, கிலோவுக்கு இவ்வளவுன்னு எடை வைத்துக் கொடுக்குமளவிற்கு அலைபேசிகளின் பெருக்கம் அவைகளை சென்றடைய வைப்பதற்கான நுண்ணலை டவர்கள்; அதனையொட்டிய நுண்ணலைகளின் தாக்கம் இன்னமும் நம் புலன்களுக்கு எட்டாத அளவில் சுற்றுப்புறச் சூழலை சிதைச்சிட்டு வருதுன்னே அடிச்சுக் கூறலாம் ...

சிட்டுக்குருவி மட்டுமா? எது போன்ற பறவைகளை நாம் அடிக்கடி இது போன்று நவீன வளர்ச்சிகளுக்கு முன்பு கண்ணூற முடிந்திருக்குமோ (உதாரணத்திற்கு அந்த ப்ராமினி பருந்து, புல்புல் மற்றும் புறா மாதிரியான) அவைகளையெல்லாம் இப்பொழுது எங்கே பார்க்க முடிகிறது அவ்வளவு எளிதாக?

எனக்கு என்னவோ நம்முடைய மாறிப்போன கட்டடங்களின் புற அமைப்பும், சிந்தி சிதறும் தானியங்களின் தட்டுப்பாடு மற்றும் பயன்படுத்தப்படும் உரங்களின் தாக்கம் என நவீனப் படுத்தப்பட்ட எல்லாமே அவைகளை துடைத்தெறிந்து கொண்டு வருகிறதோ என எண்ணச் செய்கிறது. முன்னாலே இப்படி ஒரு பதிவு போட்டுருந்தேன் அவைகள் மற்ற என்ன என்ன காரணங்களால் காணாமல் போகலாமின்னு... "வெர்மின்" விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...

யானைகளில் (அல்ட்ரா சோனிக்) நம் காதுகளுக்கு எட்டாத ஒலியெழுப்பி அவைகளுக்குள் கம்யூனிகேஷன் செய்து கொள்வதாக அறிகிறோம்... அப்படியெனில் அவைகளின் உலகமே வேறாகத்தானே இருக்க முடியும் அவைகளின் புலன்களின் மென்மையும், அறியும் திறனையும் கொண்டு பார்க்கும் பொழுது.

அப்படியாக இருக்கையில் இது போன்ற மின்னலைகளும், நுண்ணலைகளும் அவைகளின் வாழ்வு முறையில் இடையூறு விளைவிக்காமல் இருக்க முடியாது. பறவைகளில் வலசை போதலே இது போன்ற துருவ மின்காந்த அலைகளை கொண்டே என்பதும் அறியப்பட்ட நிலையில் இருக்கிறது. விசயம் இப்படி இருக்கையில் இது போன்ற அதிகரித்து வரும் electro magnetic radiation பல வகைகளில் நம்மையும், நம்மை சுற்றியுள்ள சூழலையும் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாகப் படுகிறது.

பூச்சி வகைகள் இதனைக் காட்டிலும் அவைகளின் உலகம் இன்னமும் நுட்பமானது... எனவே சிக்கலும் இறுக இணைத்துதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

இங்கே ஒரு ஆர்டிகில் படித்தேன் இதன் விகாரம் கொஞ்சம் பெரிதாகவே விளக்கப்பட்டுள்ளது...Killing Fields - Electromagnetic Radiation ...

No comments:

Post a Comment