டெபிட் கார்டின் பயன்பாடு குறித்தும், பணப் பரிவர்த்தனையின்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், இதற்கு வங்கிகள் வழங்கும் நடைமுறைத் தீர்வுகள் குறித்தும் வங்கி வட்டாரத்தில் உள்ள சில அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் கொடுத்த டிப்ஸ்கள் இதோ...!
எங்கே வாங்குவது?
சேவிங் பேங்க் அக்கவுன்ட் வைத்திருக்கும் எல்லோருக்கும் எல்லா வங்கிகளும் டெபிட் கார்டை கொடுக்கின்றன. முன்பெல்லாம் டெபிட் கார்டு பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், இப்போது கணக்கு தொடங்கும்போதே டெபிட் கார்டையும் அதற்கான 'ரகசிய எண்’ணையும் கொடுத்து அசத்துகின்றன பல வங்கிகள்.
சில நேரங்களில் ஏ.டி.எம்-ல் பணம் வெளிவராது. ஆனால், நம் கணக்கில் பணம் எடுக்கப் பட்டதாக ரசீது வந்துவிடும். இப்படி நடந்தால் பதறத் தேவையில்லை. உடனே உங்களது வங்கியின் சேவைப் பிரிவைத் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம். இருக்கும் இடம், பணப் பரிவர்த்தனை நடந்த தேதி, நேரம், நீங்கள் பயன்படுத்திய ஏ.டி.எம். எந்த வங்கியினுடையது என்கிற தகவல்களை சொன்னால் போதும்; வங்கி அதை சரி பார்த்து, தவறு நடந்திருந்தால் நமக்கான பணத்தை கொடுத்துவிடும். இந்தப் பணம் ஏழு நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்பது ஆர்.பி.ஐ.யின் லேட்டஸ்ட் உத்தரவு.
கார்டு மாட்டினால்...?
ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட கார்டுக்குரிய ரகசிய எண்ணை குறித்து ஏதாவது குழப்பம் இருந்தால் உடனே 'கேன்ஸல்’ பட்டனை அழுத்தி, கார்டை வெளியே எடுத்துவிடுவதே நல்லது. அதிலும் வெளியூருக்கு போன சமயத்தில் ஏதோ ஒரு ரகசிய எண்ணை போடும் தவறை செய்யக்கூடாது. காரணம், வெளியூர் ஏ.டி.எம்.மில் நம் கார்டு மாட்டினால் திரும்ப பெற அலைய வேண்டியிருக்கும். வெளியூர் செல்லும் சமயங்களில் முடிந்த வரை ஸ்வைப் வசதி (கார்டை உள்ளே சொருகிவிட்டு உடனே எடுத்துவிடும் வசதி) கொண்ட ஏ.டி.எம். மெஷினை பயன்படுத்தலாம். ஒருவேளை, ஏ.டி.எம்.-ல் கார்டு மாட்டினால், உடனே சேவை மையத்துக்குத் தொடர்பு கொண்டு புகார் செய்து, நம் கார்டை வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி 'பிளாக்’ செய்வது அவசியம். இதன்பிறகு புகார் கொடுத்து, அந்த கார்டுக்கு சொந்தக்காரர் நாம்தான் என்கிற ஆதாரத்தை கொடுத்தால் அடுத்த சில நாட்களில் கார்டு திரும்ப கிடைத்துவிடும். தொலைந்த கார்டுகளை சரிபார்த்துக் கொடுக்க வங்கிகள் 100-200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன.
ஆன்லைனில்...!
ஒரு வாடிக்கையாளர் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும்போது, தனது பிறந்த தேதி, பான் கார்டு நகல், இ-மெயில் மற்றும் மொபைல் நம்பரை கொடுத்திருந்தால், அந்த வங்கியின் இணையத்திற்கு சென்று, இ-பேங்கிங் அக்கவுன்டை தொடங்கிக் கொள்ளலாம்.பொதுவாக ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போது, கார்டு நம்பர், பெயர், கார்டின் முடிவுக் காலம், சி.வி.வி நம்பர் போன்ற தகவல்களும், பணம் பெறுபவர்களின் வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயரும் ஆன்லைனில் கேட்கப்படும். அதை சரியாக பூர்த்தி செய்தால் மட்டுமே பணப் பரிமாற்றம் சரியாக நடைபெறும். அதில் சில பிழைகள் இருந்தால், பணப் பரிமாற்றம் தடைபடுவதோடு, பணமும் நம் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுவிடும்.
|
No comments:
Post a Comment