பெண் சிரித்தால் என்னதான் அர்த்தம்? இதில் என்ன பொருள் வேண்டிக்கிடக்கிறது,ஏதாவது நகைச்சுவை படித்திருப்பார்கள்,அல்லது யாராவது ஜோக் சொல்லியிருப்பார்கள்,இல்லாவிட்டால் மட்த்தனமாக நடந்துகொள்வதைபார்த்திருப்பார்கள்.வேறு என்ன அர்த்தம் இருக்கப்போகிறது?
அப்படியானால் ”பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரித்தால் போச்சு” என்று சொல்கிறார்களே ஏன்? புகையிலையை விற்பவர்கள் காற்று புகாமல் மூடி வைப்பார்கள்.திறந்து வைத்தால் அதன் மணமும்,காரமும் போய்விடும்.வாங்குபவர்கள் மீண்டும் கடைக்கு வரமாட்டார்கள்.
பெண் சிரித்தால் அப்படி தகுதி போய்விடுமா? நகைச்சுவை என்பதே மனிதனுக்கு மட்டும் உள்ள விஷயம்.மிருகத்தை மனிதனாக்குவது நகைச்சுவைதான்.ஆனால்,பெண் மட்டும் சிரிக்க்க்கூடாதா? ஒரு பெண் சிரித்துவிட்டாலே குணக்கேடுள்ள பெண் என்று அர்த்தமாகுமா?
ஒரு பெண் வீதியில் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்.வாலிபர்கள் சிலர் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களை கடக்கும்போதோ அல்லது சற்று தூரம் சென்று திரும்பிப்பார்த்தோ அப்பெண் ஒருவனை பார்த்து சிரித்துவிட்டு போனால் அவன் என்ன நினைப்பான்? ஆமாம் அவன் பெண் தன்னை விரும்புகிறாள் என்று நினைத்து காதலுக்கு பிள்ளையார் சுழி போடுவான்.
ஆண்களும்,பெண்களும் இருக்கும் இட்த்தில் கொஞ்சம் ஆபாசமாக பேச ஆரம்பிக்கிறான் ஒருவன்,செக்ஸ் ஜோக் சொல்ல ஆரம்பிக்கிறான்.அப்போது பெண் ஜோக் சொன்னவனை பார்த்து சிரித்தால் அவன் என்ன நினைப்பான்? ஆண்கள் ஆபாசமாக பேச ஆரம்பித்துத்தான் பெண்களின் மனநிலையை கணிக்கிறார்கள் என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.இந்த மாதிரி நேரங்களில் ஒரு பெண் இறுக்கமாக இருக்கவேண்டும் என்பதைத்தான் சிரிச்சா போச்சு என்றார்களோ?
” சீறிவரும் பெண்ணை நம்பு ,சிரிக்கும் பெண்ணை நம்பாதே!” ஆட்டோவில் இருக்கும் பொன்மொழி.இதென்ன சமாச்சாரம்? ஆட்டோவில் போகும்போது அவன் பார்வையும்,நடவடிக்கையும் கொஞ்சம் சிரிப்பது போல் இருந்திருக்கும்.சிரித்துவிட்ட்தே என்று இவன் சந்தோஷப்பட்டு ஏதாவது சொல்ல,செருப்பு வந்து விழுந்திருக்கும்.அதனால் பொன்மொழி வந்து விட்ட்து.
அவர்களூடைய தாயும்,சகோதரிகளும் சிரிக்கவே மாட்டார்களா? வீட்டில் தடை போட்டிருந்தாலும் போட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.இன்னொரு சிரிப்பு இருக்கிறது.ஒரு பெண் அலுவலகத்துக்கு வராமலே இன்னொருவரை வருகைப்பதிவேட்டில் கையொப்பம் போடச்சொல்லிவிட்டார்.தாமதமாக வருவதற்காக! அதிகாரிக்கு தெரிந்து விட்ட்து.
பெண்ணை அழைத்து விசாரித்தபோது பெண் அதிகாரியை பார்த்து சிரித்தார்.அதிகாரி என்ன நினைத்தாலும் பெண்ணின் நோக்கம் சிநேக பாவம்தான்.எதிரே ஒரு பெண் சிரிக்கும்போது கோபம் மட்டுப்படும் என்று நினைப்பதுதான்.ஒருவேளை இதுதான் கள்ளச்சிரிப்பா? அதிகாரி கொஞ்சம் நல்ல டைப்பாகவும் இருக்கவேண்டும்.
பெண்கள் சந்தோஷமாக சிரிக்கும் வீடே தெய்வம் வாழும் வீடு என்று எனக்கு தோன்றும்.அத்தகைய குடும்பத்தில்தான் குழந்தைகள் நல்ல நிலைக்கு வருவார்கள்.முன்னேற்றமும் இருக்கும்.சிரிப்பு மனதில் உள்ள எல்லா குப்பைகளையும் அடித்துச்செல்லும் பெருவெள்ளம்.
|
No comments:
Post a Comment