Thursday, November 24, 2011

கற்பழிக்க முயன்ற பூசாரிக்கு தண்டனை

கிருஷ்ணகிரி அருகே ஒரு கிராமத்தில் நடந்த விஷயம் இது.உறவினர் பெண் ஒருவரை அவரது கணவர் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த கோயில் பூசாரி ஒருவர் இரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.அந்த பெண் சப்தமிட்டு தப்பித்து விட்டார்.

நல்ல வேளை அந்த பெண் கல்லாகபோக யாரும் சாபமிடவில்லை.காவல் நிலையத்தில்புகார் செய்தார்கள்.அதற்குப்பிறகு நடந்த சம்பவம்தான் பெண்ணின் சமூக தகுதி நிலையை நமக்கு உணர்த்தும் ஒன்று.ஆமாம் இந்தியா இது போன்ற கிராமங்களில்தான்வாழ்கிறது.

கிராமத்தில் பெரியவர்கள்,முக்கியஸ்தர்கள் எல்லாம் கூடி பஞ்சாயத்துபேசினார்கள்.சினிமாக்களில் வரும் பஞ்சாயத்து போலத்தான்! பூசாரிக்கு 42,000 ரூபாய் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள்.ச்சே இவ்வளுவுதானா? சரி என்ன இருந்தாலும் கோவில் பூசாரி இல்லையா?
போகட்டும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் தனது தொழிலை சமீப காலமாகவிட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.ஆனால் மேற்கண்ட விஷயம் கட்டப்பஞ்சாயத்து அல்ல.கிராமங்களில் மரபாக இருந்து வரும் ஒன்று தான்.நீதிமன்றத்தின் மிகப்பழைய வடிவம் இந்த பஞ்சாயத்துக்கள்.


கிராமங்களில் இரண்டு பேருக்கு அல்லது இரண்டு குடும்பத்துக்கு பிரச்சினை என்றால் அதற்கென்று உள்ள பெரியவரிடம் புகார் கொடுப்பார்.அவர் குறிப்பிட்ட நாளில் பஞ்சாயத்தை கூட்டுவார்.பக்கத்து கிராமங்களில் இருந்து கூட பெரிய மனிதர்கள் அழைக்கப்படுவார்கள்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்பார்கள்.ஒருவர் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது என்று அடிக்கடி யாராவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.ஆனாலும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.ஒரு வழியாக இரண்டு தரப்பும் உணர்ச்சியை கொட்டியிருப்பார்கள்.
தீர்ப்புக்கு இருதரப்பும் கட்டுப்படுவதாக உறுதியளிக்க வேண்டும்.சற்று நேரத்திற்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.அதன் பிறகு கொஞ்சம் பிகுபண்ணிக்கொண்டு முக்கியஸ்தர்கள் கொஞ்சம் தூரமாக போய் விவாதிப்பார்கள்.ஊர் மக்கள் ஆவலோடு காத்திருப்பார்கள்.பின்னர் தீர்ப்பு வெளியாகும்.தீர்ப்பைவிமசித்துக்கொண்டே ஆட்கள் கலைந்து செல்வார்கள்.

கிராமங்களில் வழங்கும் இந்த தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.இல்லாவிட்டால் கஷ்டம்.ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடவும்,ஒத்துழைப்பு இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.ஆனால் இன்றும்இப்படியெல்லாம் சாத்தியம் என்பதுதான் புரியவில்லை.


No comments:

Post a Comment