தமிழக மாணவர்களைத் தாக்கும் அடுத்த புயல்!
''டாக்டர் ஆகி, என்னை மாதிரி ஏழைகளுக்கு எல்லாம் சேவை செய்வதுதான் என் லட்சியம்''
இனி இந்த வார்த்தைகளை ஒரு கிராமப்புற மாணவன், பள்ளிக்கூட நாடகங்களில் மட்டும்தான் பேச முடியுமா... நிஜத்தில் அது அத்தனை எளிதான விஷயமில்லையா? என்கிற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது... இந்திய மெடிக்கல் கவுன்சிலின் அதிரடி முடிவு.
'எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். மற்றும் எம்.டி. போன்ற மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு (நேஷனல் எலிஜிபிலிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட்) நடத்தப்படும்' என்று அறிவித்திருக்கும் அகில இந்திய மெடிக்கல் கவுன்சில், 'முதற்கட்டமாக பட்ட மேற்படிப்புக்கு (எம்.எஸ். மற்றும் எம்.டி.) அடுத்த கல்வியாண்டிலிருந்து (2012-2013) நுழைவுத் தேர்வு நடக்கும்' என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு வெளியானதுமே, '2007-08 கல்வியாண்டில் இருந்து தமிழகத்தில் நுழைவுத் தேர்வுமுறை அகற்றப்பட்டு விட்டது. இப்படியான பொது நுழைவுத்தேர்வு முறை கிராமப்புறத்தில் இருந்து படித்து வரும் மாணவர்களுக்கு மிகவும் சிரமமானதாக இருக்கும். தமிழகத்தில் நடமுறைப்படுத்தப்படும் 69% இடஒதுக்கீடும் பிரச்னைக்குள்ளாகும். எனவே, பொது நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு கொடுங்கள்’ என பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
ஆனால், மேற்கொண்டு தமிழக அரசோ... இங்கிருக்கும் பெரிய அரசியல் கட்சிகளோ, சமூக அமைப்புகளோ இந்த விஷயத்தை கையில் எடுத்து அழுத்தமாக குரல் கொடுக்காததால்... பிரச்னையின் தீவிரம் மத்திய அரசுக்கு உறைக்கவில்லை. 'வருகிற ஜனவரியில் நுழைவுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், இடஒதுக்கீடு, சமச்சீர்கல்வி, கல்விக் கட்டணம் என்றெல்லாம் தமிழக மாணவர்களைப் படுத்தி எடுத்தது... எடுத்துக் கொண்டிருப்பது போல, இந்த விஷயமும் கடைசி நேர டென்ஷனைக் கூட்டிவிடுமோ?' என்று பெற்றோரும் மாணவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இத்தகைய சூழலில்... 'நுழைவுத் தேர்வு' என்பது அமல்படுத்தப்பட்டால் விளையும் பாதகங்கள், இதற்காக மாநில அரசு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசினார் கல்வியாளர், பேராசிரியர் கல்யாணி.
''இது, தமிழ்நாட்டில் பொதுப்பள்ளிகளில் படிக்கும் 85% மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய பெரும் பிரச்னை! இந்தப் பொதுத் தேர்வு முழுக்க ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் நடக்கும். நாடு முழுவதும், மொத்தம் இருக்கிற 300 மருத்துவக் கல்லூரிகளில், 40 ஆயிரம் மெடிக்கல் ஸீட்டுகள் இருக்கின்றன. இந்தியாவை எடுத்துக் கொண்டால்... இந்தியைத் தவிர வேறு தாய்மொழி கொண்ட மாணவர்களின் சதவிகிதம்தான் அதிகம். ஆங்கில மீடியத்தில் படிப்பவர்கள் 15 சதவிகிதம் இருக்கிறார்கள். ஆக, இந்தி மற்றும் ஆங்கிலம் வழியாக படிக்காத, மாணவர்கள்தான் இங்கே அதிகம். அவர்களுக்கெல்லாம் இந்த நுழைவுத் தேர்வு பாதகமாகவே இருக்கும்'' என்று எச்சரிக்கை செய்தவர்,
''ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ-வை ஜூனியர் காலேஜ் என்பார்கள். அந்த ஜூனியர் காலேஜ் மாணவர்களுக்கு முதல் வருடம், இரண்டாம் வருடம் என இரண்டு வருடங்களுமே அரசு, பொதுத் தேர்வை நடத்தும். அதனால் மாணவர்கள் இரண்டு வருடப் பாடங்களையும் முழுமையாகப் படித்திருப்பார்கள். தமிழ்நாட்டில், ப்ளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வு கிடையாது. அந்த மதிப்பெண்கள் கணக்கிலும் எடுக்கப்படுவதில்லை. அதனால், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பலவும், தங்களின் மாணவர்கள் ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக, ப்ளஸ் ஒன் பாடத்தில் பாதி பாடங்களை நடத்தாமல், அந்த ஆண்டிலிருந்தே ப்ளஸ் டூ பாடத்தை நடத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். அதனால்தான் 'ஐ.ஐ.டி’ நுழைவுத்தேர்வில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் வெற்றி பெறுகிறார்கள். தமிழகத்தில் வருடம்தோறும் அதிகபட்சம் 200, 300 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள்.
நுழைவுத் தேர்வு கட்டாயம் என்றால், அதற்கான பிரத்யேக பயிற்சி இல்லாமல், மாணவர்களால் எளிதில் மதிப்பெண்கள் பெற முடியாது என்பது உண்மை. 'உங்கள் குழந்தைகளை தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு நாங்கள் தயார்படுத்துகிறோம். 100% வெற்றி நிச்சயம்' என்றெல்லாம் சொன்னபடி மழைக் காளான்களாக தனியார் கோச்சிங் நிறுவனங்கள் உருவாகி, பல ஆயிரங்களைக் கட்டணமாக வசூல் செய்வார்கள். இதைக் கட்ட முடியாத ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் தகுதி இருந்தும்... 'எம்.பி.பி.எஸ்’ படிப்பை எட்டி நின்று பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் 69% இட ஒதுக்கீடுக்கும் இந்த பொது நுழைவுத் தேர்வால் இடையூறு ஏற்பட்டு, மீண்டும் சமூக நீதி, அநீதியாக்கப்படலாம்!'' என்று வருத்தப்பட்ட கல்யாணி, நிறைவாக...
''எதிர்ப்புகளை மீறி, பொதுநுழைவுத் தேர்வுமுறை வந்துவிடும் என்றால்... அதை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வதற்கு அவர்களைத் தயார்படுத்த, தமிழக அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும். ப்ளஸ் டூவுக்கு நடத்தும் பொதுத் தேர்வை 'ப்ளஸ் ஒன்’னுக்கும் நடத்த வேண்டும். கேள்வித்தாள்கள் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசிடம் பேசி உறுதிப்படுத்த வேண்டும். அதுதான் தாய்மொழியில் படிக்கும் ஏழை மாணவர்களின் டாக்டர் கனவை நனவாக்க உதவும்!'' என்று வழிகாட்டினார்.
இந்த விஷயம் பற்றி கவலையோடு நம்மிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த குடும்பத் தலைவி அகிலா, ''ஏழைகள், மற்றும் நடுத்தர வர்க்கத்தோட பெரிய சொத்தே படிப்புதான். ஆனா, சமீபகாலமா கல்வி சர்ச்சையான விஷயமாவே இருக்கு. கல்விக் கட்டண பிரச்னை தீரல... பல பள்ளிகள்ல சமச்சீர் கல்வி புக்ஸ் கொடுக்கவே இல்ல... இப்படி பல பிரச்னைகள் வரிசை கட்டி நிக்குது. இதுக்கு இடையில 'மெடிக்கல் என்ட்ரன்ஸ்'னு புது பூதம் கிளம்பி வந்து பயமுறுத்துது. இதை வெச்சே கோச்சிங் கிளாஸ் வியாபாரம் சூடு பிடிக்கும். பிள்ளையோட படிப்பாச்சேனு அவங்க 'கேக்கற ஃபீஸை அழ’ வேண்டியிருக்கும். நேஷனல் லெவல்ல போட்டியிடணுமாங்கிற பயத்துலயே நிறைய பேர் கலந்துக்கமாட்டாங்க. பொதுத் தேர்வுல வாங்குற மார்க்கை வெச்சே இடத்தை முடிவு பண்ணாம... எதுக்காக எல்லாத்தையும் பிரச்னை ஆக்கறாங்களோ'' என்று விரக்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், 'இன்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி மற்றும் கலை அறிவியல் கல்லூரி போன்றவற்றுக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என்று அடுத்தக்கட்ட அறிவிப்பை வெளியிட்டு கிலி கிளப்பியிருக்கிறார் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் கபில் சிபல்!
ஓயாத கல்வி சச்சரவுகளால் எப்போதும் ஒடுங்கிக்கிடப்பது, கிராமப்புற மாணவர்களின் எதிர்காலமாகவே இருக்கிறது!
|
No comments:
Post a Comment