Thursday, November 24, 2011

ஒன்றாம் தேதி!


மாத சம்பளம் வாங்கும் அப்பாவிற்கு பிள்ளையாக பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஒன்றாம் தேதியும் தீபாவளி தான்.

ஒன்றாம் தேதி.. அந்த நாளுக்காக எவ்வளவு காத்திருப்புகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் முன்பு இருந்தது.

அந்த நாள் விடியும்போதே அப்பா வீட்டுக்கு வரும்போது என்ன அயிட்டங்கள்லாம் வாங்கி வரவேண்டும் என்று லிஸ்ட் நீளும். "சாயங்காலம் வரும்போது பப்ஸ், ஜாங்கிரி, காராபூந்தி வாங்கிட்டு வாங்கப்பா" என பிள்ளைகள் கேட்பதும், "இன்னைக்கு இட்லி மாவு காலியாகிடுச்சு அதனால ராத்திரி சாப்பாட்டுக்கு பரோட்டா வாங்கிட்டு வரீங்களா.. பிள்ளைங்க ஆசையா சாப்பிடும் " என மனைவி தன் ஆசையை பிள்ளைகள் தலையில் சுமத்தி சொல்வதும் மத்திய தர வர்க்கத்தின் சுகமான தருணங்கள்.
பிள்ளைகள் அன்று பள்ளிக்கூடம் விட்டு வந்ததில் இருந்து சாயங்காலம் ஏழு மணிக்கு வரப்போகும் அப்பாவுக்காக 6 மணி முதலே வாசலை பார்த்துக் கொண்டு இருப்பதும் பெரும்பாலான வீடுகளில் நடந்திருக்கும் சம்பவம். அன்றைய தினம் அவ்வளவு சந்தோஷமாக கழியும்.

சம்பளம் வாங்கிய பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் தான் மட்டன், சிக்கன், மீன் என வீட்டில் சாப்பாடு கமகமக்கும்.

அதெல்லாம் அப்போது. ஆனால் இன்று..? 

அப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அலுவலகத்தில் பே-ஸ்லிப் கொடுத்தால் தான் பிடித்தம் போக அந்த மாதம் எவ்வளவு சம்பளம் என தெரிந்து கொள்ளமுடிகிறது. வீட்டிற்கு எது தேவை என்றாலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்கிக் கொள்கிறோம். கணவனின் ஒரு மாத உழைப்பின் வாசம் மனைவிக்கு தெரியாமல் போய்விடுகிறது ஏ.டி.எம். கார்டு பயன்படுத்தி பணம் எடுக்கும்போது.

முன்பு, இவ்வளவு தான் சம்பளம் வரும் அதற்குள் செலவு செய்ய வேண்டும் என பட்ஜெட் போட்டு பொருட்கள் வாங்குவோம். கடைசி தேதியில் பற்றாக்குறை வந்தால் பக்கத்து வீட்டில் காபி பொடி, சர்க்கரை வாங்கும் அம்மாக்கள் இன்று கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்குவதை அதிகமாக காணமுடிகிறது. ஆனால் அதற்கு கட்டப் போகும் வட்டியைப் பற்றிய கவலையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறது மனப்பான்மை.

பணம் கணினி வழியாக கை மாறுகிறது என்பதால் கண்களால் பார்க்க முடிவதில்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நம் கையிலிருந்து செலவு செய்யும் போது கிடைக்கும் சுகம் டெபிட் கார்டு பயன்படுத்தும்போது கிடைப்பதில்லை. என்னதான் இன்றைய இளைய சமுதாயம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி செலவு செய்து கொண்டு இருந்தாலும், நம் அப்பா வாங்கிய நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் கிடைத்த சந்தோஷம் ஏனோ நமக்கு கிடைப்பதில்லை.

நமக்கு தெரிந்த ஒன்றாம் தேதியின் மதிப்பு, அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு தெரியுமா? சம்பள பணத்தை வாங்கி சாமி படத்தின் முன் வைத்து, பின்னர் அதை எடுத்து எண்ணும் போது கிடைக்கும் சந்தோஷம் அவர்களுக்கு வாய்க்குமா?

கேள்விக்குறிகளால் நிரம்பியிருக்கிறது எதிர்காலம்.

No comments:

Post a Comment