கடல் என்றால்... ஃப்ரெண்ட்ஸ்களோடு கூட்டமாக சென்று, நிறைய ஆட்டம் போட்டு, கொஞ்சம் அலைகளைப் பார்த்துவிட்டு வருவோம். அதையும் தாண்டினால்... கணுக்கால்களை நனைத்து சின்னதாக ஒரு விளையாட்டு. அவ்வளவுதானே கேர்ள்ஸ்?!
''அட, அதோட நிறுத்திட்டா போதுமா..?!'' என்கிறார்கள், ஐஸ்வர்யா - வர்ஷா. சமீபத்தில் நடந்த 'இந்தியா இன்டர்நேஷனல் ரெகாட்டா - 2011’ பாய்மரப் படகுப் போட்டியில் '29-னெர்’ (29மீக்ஷீ - இருபத்தி ஒன்பது அடி உயர பாய்களைக் கொண்ட படகு) என்கிற பிரிவில் முதல் இடத்தைத் தட்டியிருக்கும் படகுப் பாவைகள்!
ஸ்லோவேனியா, இந்தோனேஷியா, மலேஷியா, அயர்லாந்து, இந்தியா உள்ளிட்ட ஒன்பது நாடுகள்; 15 வயது முதல் 19 வயது வரையிலான நூற்றுக்கும் அதிகமான வீரர்கள் - வீராங்கனைகள்; மொத்தம் நான்கு நாட்கள்... என்று சென்னை, துறைமுகத்தில் நடந்த போட்டிகளின் ஃபைனலில்... ஐஸ்வர்யாவும், வர்ஷாவும் கிரீடத்தோடு கரைக்கு வந்தது, 'வாரே வா’ வெற்றி!
சென்னை, நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார், ஐஸ்வர்யா. ''நாங்கதான் வின்னர்ங்கிறதை உணர்ந்த தருணம்... வாவ்! அதைவிட உலகத்துல வேறெதுவும் பெரிசு இல்லைனு தோணுச்சு. ஒரு பறவையாகி, அந்தக் கடலையே தாண்டிட்ட சிலிர்ப்பு!'' - அலை அலையாகச் சந்தோஷமானவர்,
''என் அக்கா அஸ்வினி, கடல் பத்தின சப்ஜெக்ட்டான 'ஓஷனோகிராஃபி’ படிக்க ஆசைப்பட்டு, சம்மர் கோர்ஸ் போனாங்க. ஆறாவது படிச்சிட்டிருந்த நானும் அவங்க கூடவே ச்சும்மா போனதுதான் ஆரம்பம். அதுக்குப் பிறகு 'செய்லிங் போட்’ (பாய்மரப் படகு) பயிற்சியில் ஆர்வம் பத்திக்கிச்சு. சென்னை துறைமுகத்துல இருக்கற 'தமிழ்நாடு செய்லிங் அசோஸியேஷன்’ல சேர்ந்து அஞ்சு வருஷம் பாய்மரப் படகு போட்டிக்கான பயிற்சி எடுத்துக் கிட்டேன். சென்னையில போன வருஷம் நடந்த இந்தியா- இன்டர்நேஷனல் ரெகாட்டா - 2010 போட்டியில முதன் முறையா கலந்துக்கிட்டு செகண்ட் பிளேஸ் வாங்கினேன். என்னோட ஆர்வத்துக்கு இணையா... என் பெற்றோரும், பள்ளியும் ஈடுகொடுத்து ஊக்குவிச்சதுதான்... அந்த வெற்றிக்கு முக்கியக் காரணம்!'' என்று சொல்லி ஐஸ்வர்யா நிறுத்த...
தற்போது கூட்டணியாக கைப்பற்றியிருக்கும் வெற்றிக் கோப்பை பற்றி பேச ஆரம்பித்தார் சென்னை, நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் வர்ஷா. ''எனக்கும் செய்லிங் போட் மேல ஏகப்பட்ட லவ். அப்பாகிட்ட கேட்டு நாலு வருஷத்துக்கு முன்ன தமிழ்நாடு செய்லிங் அசோஸியேஷன்ல சேர்ந்து பிராக்டீஸ் எடுத்துக்கிட்டேன். அப்பதான் எனக்கு ஐஸு (ஐஸ்வர்யா) ஃப்ரெண்ட் ஆனா. ரெண்டு பேரோட வேவ் லெங்த் இணைஞ்சுபோகவே... இந்த வருஷ போட்டிக்கு அதை யூஸ் பண்ணிக்கிட்டோம்.
ஐஸு கூட சேர்ந்து நான் முதல் முறையா களம் இறங்கின போட்டி இது. நான் கலந்துக்கிட்ட முதல் இன்டர்நேஷனல் போட்டியும்கூட. என்னோட திறமையையும், ஐஸுவோட பேரையும் காப்பாத்த வேண்டிய பொறுப்பு எனக்கு. செமையா போராடினோம். நான் டயர்ட் ஆன நேரத்துல ஜஸு சுதாரிச்சுப்பா. அவ டயர்ட் ஆகற நேரத்துல நான் டேக் கேர் பண்ணிப்பேன். அதான் இந்த இன்டர்நேஷனல் போட்டியில வெற்றி காத்தை எங்க பக்கம் திருப்பிக்க முடிஞ்சுது'' என்றார் வெற்றிப் புன்னகையோடு வர்ஷா.
''போட்டியில முக்கோணம், சதுர வடிவங்கள்ல கடலுக்குள்ள எல்லைகளை நிர்ணயிடுச்சுடுவாங்க. நமக்கு கொடுக்கப்பட்ட எல்லையை புயல் வேகத் துல தொட்டுத் திரும்பணும். ஒவ்வொரு நாளும் மூணு ரவுண்டுகள்னு, நாலு நாட்கள் போட்டி நடந் துது. முதல் நாள், டை ஆகி, நாங்களும், அடுத்த டீமும் ஒரே ரேங்க்ல இருந்தோம். ரெண்டாம் நாள் 'டாப் 3’, மூணாம் நாள் 'டாப் 2’னு முன்னேறினோம். நாலாவது நாள், 'நாமதான் வின்னர்’ங்கிற நம் பிக்கையோட களம் இறங்கினோம். செம த்ரில்லிங் கான ஃபைனல்ஸ்ல, வின் பண்ணிட்டோம்.
இன்னும் பல வெற்றிகள் குவிக்கணும்ங்கிற உத்வேகத்தோட, வர்ற பிப்ரவரியில மலேஷியாவுல நடக்கப்போற 'ஏஷியன் கேம்’ல ரெண்டு பேரும் கலந்துக்கப் போறோம். 2016 ஒலிம்பிக்லயும் எங்களுக்கு மெடல்கள் இருக்கு!''
- கட்டை விரல் உயர்த்துகிறார்கள் தோழிகள்!
|
No comments:
Post a Comment