விவாகரத்து-அன்பெனும் ஈரமில்லாமல் இறுகி உடைந்து போன இதயங்கள் வாழும் இடம்.நான் செய்தியில் படித்த்து.சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் மட்டும் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து சராசரியாக நாளொன்றுக்கு ஒரு விவாகரத்து வழக்கு தாக்கல் ஆகியிருக்கிறது இவற்றில் பெரும்பாலானவை காதல் திருமணங்கள்.
காதலிக்கும் போது யதார்த்தமாக இருப்பதில்லை.அப்போது காதலனுக்கு காதலியும்,காதலிக்கு காதலனும் தெய்வங்கள்.அல்லது அவற்றிலும் மேலானவர்கள்.அவள் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது.ஏன்,உயிரை விட தயார் அவன்!காதல் காலங்களில் உணர்ச்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன்.உணர்ச்சிகள் ஆதிக்கத்தில் இருக்கும்போது மனம் சிந்திப்பதில்லை.
திருமணத்துக்கு முன் அந்த உலகத்தில் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.திருமணத்திற்கு பிறகு,மாமனார்,மாமியார்,நாத்தனார் எல்லாம் இருக்கிறார்கள்.ஆளுக்கொன்று சொல்கிறார்கள்.மனைவி மயக்கத்தில் மகன் தன்னை கவனிக்காமல் விட்டு விடக் கூடாதென்று மருமகளை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
காதலித்தபோது இருந்த்து போலவே கல்யாணத்திற்கு பிறகும் இருப்பது சாத்தியமில்லை.இது அவர்களுக்கு தெரியாது.தெரு முனையில் தன் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்த காதலன் இப்போது சில நிமிட தாமத்த்திற்கு எரிந்து விழுகிறான்.இதை அவள் எதிர்பார்க்கவில்லை.அவனும் அப்ப்டியொன்றும் முக்கியமில்லை என்று நினைக்கிறான்.அக்கா,தங்கை,அம்மா,அப்பா எல்லாம் ஏதேதோ சொல்கிறார்கள் .இப்போது அவர்களெல்லாம் முக்கியமாக படுகிறது.காதலிக்கும்போது வீட்டில் இருப்பவர்கள் காணாமல் போயிருந்தார்கள்
இருவருக்கும் திருமணத்திற்குமுன் எதிர்பார்ப்புகள் அதிகமிருந்த்து.அதனால் இப்போது ஏமாற்றமும் அதிகமாகி,வலியும் தாங்க முடியாத அளவிற்கு இருக்கிறது.அப்போது வேறு யாரைப் பற்றியும் நினைக்கவில்லை.இப்போது ஒரு சமூகத்தை எதிர்கொள்ளவேண்டும்.கல்யாணத்திற்கு முன்னால் இருவருக்கும் உரிய மன நல ஆலோசனை வழங்குவது சிக்கலை ஓரளவு குறைக்கும்.
தவிர பெண் முன்பு போலில்லை என்றார் ஒரு பெரியவர் விவாகரத்து செய்தியொன்றை படித்துவிட்டு!.உண்மைதான்!கணவனிடம் அடியும்,உதையும் வாங்கிக் கொண்டு சாராயம்,சிகரெட் நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு குழந்தைகளை காரணமாகச் சொல்லியே வாழ்க்கையை தியாகம் செய்த பெண்கள் இன்று இல்லைதான்.
படிப்பும்,வேலையும் பெண்ணுக்கு இன்று சுய மதிப்பை வழங்கியிருக்கிறது.சொந்தக்காலில் நிற்கமுடியும்.பூமி மட்டும் எத்தனை நாளைக்கு பொறுக்கும்? எதன்பொருட்டும் சந்தோஷமில்லாத வாழ்க்கையை ஏன் வாழவேண்டும்?வாழ்க்கை திரும்பவராது!ஜோடி சேர்ந்து நெருப்பில் நின்று கொண்டிருப்பதை விட தனியாக மகிழ்ச்சியாக இருக்க முடிந்தால் நல்லதுதான்.
குடும்பம் என்ற நிறுவனம் ஆட்டம் காண்கிறது.இது சமூகத்திற்கு நல்லதில்லைதான்.இப்போதைக்கு வேறெதுவும் செய்ய முடியாது.குழப்பங்களும்,சிக்கல்களும் அதிகரிக்கும்.பின்ன்ர் நாம் சிந்திக்க துவங்குவோம்.காரணத்தைக் கண்டறிவோம்.இவ்வளவு காலமும் அப்பாவிப் பெண்களின் தியாகத்தில்தான் குடும்பம் என்று ஒன்று இருந்த்து என்பதை உணர்வோம்.உண்மை தெரியும்போது,உணரும்போது நல்ல மாற்றங்கள் வரும்.
|
No comments:
Post a Comment