என் கணவர் வேலை செய்யுமிடத்தில் பழக்கமாகி வேறொரு பெண்ணுடன் போய் விட்டார்.அம்மா வீட்டிலும் ஒன்றுமில்லை.ஒரே ஒரு சகோதரி மட்டும்தான் .குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்க்கொண்டிருந்தது.அங்கே இங்கே கடன் வாங்கி விட்டேன் .கடனை அழைக்க வழி தெரியவில்லை.
அப்போது ஒரு அக்கா வந்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.அவரிடம் என் கஷ்டங்களை சொல்லிக் கொண்டிருந்தேன்."நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா?" தன்னுடன் பாலியல் தொழிலுக்கு வருமாறு என்னை அழைத்தார்.அவ்வளவு பணம் வரும் ,இவ்வளவு பணம் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.அவரை பற்றி எனக்கு தெரியாது டவுனுக்கு வேலைக்கு போவதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.நான் மறுத்துவிட்டேன்.
சில மாதங்களுக்கு பிறகு கஷ்டம் அதிகமாகிவிட்டது.வட்டி கட்டக்கூட முடியவில்லை.நானே அந்த அக்காவை தேடித் போனேன்.ஆரம்பத்தில் தவறு செய்கிறோமே என்று கஷ்டமாக இருந்தது.என் குழந்தைகளை நினைத்துப்பார்த்தேன் .பின்னர் நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.
இரண்டு மாதம் போயிருக்கும் எங்கள் பக்கத்து தெருவில் இருக்கும் குடிகாரன் நேராக தேடி வந்துவிட்டான்." எனக்கு உன்னை பற்றி தெரியும் ,மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிடு !இல்லாவிட்டால் போலீசில் சொல்லி உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டினான்.நான் அக்காவிடம் பேசினேன் .நான் பேசிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.இருந்தாலும் எனக்கு மனசு சரியில்லை.பேசாமல் ஏதாவது வேலைக்குப் போகலாம் என்று முடிவு செய்தேன்.
பக்கத்து ஊரில் உள்ள பஞ்சாலை கம்பெனிக்கு எங்கள் ஊரிலிருந்து போனவர்களை கேட்டேன்.வேலைக்கு போக ஆரம்பித்தேன்.நான் எதிர்பார்க்கவே இல்லை .வேலைக்கு போகும்போதும் வரும்போதும் எனக்கு பழக்கமானவர்கள் (வாடிக்கையாளர்கள்) வழியில் பார்த்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்தார்கள்.திடீரென்று ஆட்டோ வந்து என் பக்கத்தில் நிற்கும் "எங்கே ஆளை பார்க்க முடியவில்லை "?என்பார்கள்.சமாளிக்கவே முடியில்லை.எல்லாம் குடிகாரர்கள் .எவனும் நல்லவன் கிடையாது.தொல்லை அதிகமாக இருந்தது.
கொஞ்ச வேலைக்கும் போகாமல் வீட்டில் இருந்து யோசித்துப் பார்த்தேன் .நான் தனியாளாக இருந்தால் கூட செத்துப்போவேன் .எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது.ஒரு பெண் வேறு.அவர்களை நன்றாக படிக்க வைத்தால் போதும்.ஒருவழியாக அக்கா பேசி பக்கத்து தெரு சோம்பேறிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடுவது என்று முடிவாகி விட்டது.
நான் பழையபடி தொழிலுக்கே வந்துவிட்டேன்.ஏதாவது கடை வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்தேன்.அக்காதான் வேண்டாம் அதெல்லாம் சரிப்படாது என்கிறார்.குடிகாரர்கள்.ரௌடிகள் ,மொள்ளமாறிகள் தான் எங்களுக்கு பழக்கம்.அவர்களெல்லாம் கடை பக்கத்தில் வந்து நின்றால் யார் கடைக்கு வருவார்கள்.எப்படியாவது என் குழந்தைகள் முன்னுக்கு வந்துவிட்டால் போதும் .என்னைப்பற்றி என்ன கிடக்கிறது.
|
No comments:
Post a Comment