Thursday, November 24, 2011

பக்கத்து வீட்டைப்பார்த்து பறக்க நினைக்கும் பெண்கள்.

தவறான எண்ணங்கள்,குழப்பங்கள்,கற்பனைகள் தனி மனிதனையும்,குடும்பங்களையும் பொசுக்கி விடுகிறது.கணவன் மனைவி பிரச்சினை ஒன்றை கவனியுங்கள்.

கணவர் தனியார் நிறுவனமொன்றில் நிரந்தர வேலை.மிக சாதாரண குடும்பம்.சொந்தவீடு இல்லை.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.ஒரு பெண் குழந்தை.தொடர்ந்து கணவன் மனைவிக்குள்புகைச்சல்கள்.பிறகு மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.பெண்ணின் தாய் தொலைபேசி மூலம் தினமும் காட்டமான வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டிருந்தார்.

கணவர் தனது நண்பர் ஒருவரை உதவிக்கு நாடினார்.அவர்,பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை தொடர்பு கொண்டு நேரில் வந்து பேசுமாறு கேட்டுக் கொண்டார்.கணவனின் நண்பன் மீது அந்த பெண்ணுக்கு ஓரளவு மரியாதைஇருக்கவே,தனது தாயுடன் நேரில் சந்தித்தார்.பிரச்சினை உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான்.
பக்கத்து வீட்டுக்காரர் குழந்தைக்கு துணிஎடுத்தால்,சினிமாவுக்கு போனால் தானும் அதை உடனே செய்தாகவேண்டும் என்பது.சேமிப்பாக கணவர் சீட்டு கட்டஆரம்பிக்க,மனைவியோ பெரும் தொகைக்கு நகை சீட்டு கட்ட வேண்டும் என்கிறார்.இறுதியாக,நான் எது சொன்னாலும் இவர் கேட்பதில்லை.அதனால் அவருக்கு என்மீது அன்போ பாசமோ கிடையாது.


மனைவியின் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.அலுவலக பணிபோதுமான நேரம் ஒதுக்கமுடியவில்லை.நம்முடைய மிகப்பெரிய பிரச்சினைஇதுதான்.நாம் சொல்கிறபடி நடந்தால்,பேசுவதற்கெல்லாம் தலையாட்டினால் மட்டுமே ஒருவரை நம்புகிறோம்.அவர்தான் நம்மை நேசிப்பதாக நினைக்கிறோம்.இருப்பதிலேயே மிகப் பெரிய முட்டாள்தனம் இது..

பல குடும்பங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாக இம்மாதிரி பிரச்சினைகள் இருக்கின்றன.மனைவிதான் அப்படி என்றில்லை.மற்ற பெண்களுடன் ஒப்பிடும் கணவன்களும் உண்டு.பொறாமை போன்ற விஷயங்கள் மனிதனுக்கு இயல்பான ஒன்றுதான்.உணர்ச்சிகளில் வாழாமல் சிந்திக்கத் துவங்குவதன் மூலம் இதை சமாளிக்க முடியும்.

மற்றவர்கள் பெருமை பேசிக்கொள்ளும்போது நமக்கும் ஆசை வருவது இயல்புதான்.அவர்களிடம் இல்லாத நல்ல விஷயங்கள் நம்மிடம் சில இருக்கலாம்.சில செயல்களுக்காக யாராவது நம்மை பாராட்டியிருக்கலாம்.அவற்றையெல்லாம் நினைவில் நிறுத்தி இப்படிப்பட்ட நேரங்களில் நாம் மனதை சந்தோஷப்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஒருவரிடம் பணம் இருக்கும்.ஆரோக்கியம் இருக்காது.உங்களிடம் சிறப்பான திறமைகள் ஏதாவது இருக்கும்,அவர்களிடம் இருக்காது.ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள்தான்.உணர்ந்து யோசித்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment