Thursday, December 8, 2011

மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியாருக்கு எதிராக பெண்கள் முற்றுகை போராட்டம்

மாணவியரிடம் சில்மிஷம் செய்த, விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சத்யா நகர் பள்ளி தலைமை ஆசிரியர் தனசேகரனுக்கு, மீண்டும் பணி வழங்கியதை எதிர்த்து, சிவகாசியில், உதவி கல்வி அலுவலகம் புகுந்து, பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அங்கு, போலீசார் பெண்கள் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.திருத்தங்கல், சத்யா நகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் தனசேகரன். இவர், கடந்த ஆக.,15ல், மாணவியரிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறி, பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். அவர், போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில், மத்திய சேனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக தனசேகரன் பொறுப்பேற்கச் சென்றார். இதை, கிராம மக்கள் எதிர்க்க, பொறுப்பேற்காமல் திரும்பினார்.
அதன்பிறகு, குமிழங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். அவருக்கு, மீண்டும் பணி வழங்கியதை கண்டித்தும், அவருக்கு ஆதரவாக செயல்படும் கூடுதல் உதவி கல்வி அலுவலர் விவேகானந்தன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில், சிவகாசி உதவி கல்வி அலுவலகம் முன், நேற்று போராட்டம் நடத்தினர்.மாதர் சங்க மாவட்ட செயலர் லட்சுமி தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் அலுவலக வளாகத்தில் நுழைய முயன்றனர்.

அய்யப்பன் எஸ்.ஐ., மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தியபோது, போலீசார் பெண்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், போலீஸ்காரர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அலுவலக கேட்டை மூட முயன்ற போலீசாரை தள்ளியபடி, அலுவலக வாயிலில் உட்கார்ந்தனர். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ராமச்சந்திரன், துணை தாசில்தார் தனலட்சுமி பேச்சு வார்த்தை நடத்தினர்

. "கூடுதல் உதவி கல்வி அலுவலர் மீது நடவடிக்கை, தனசேகரன் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போன்ற நடவடிக்கையை, டிச., 27க்குள் எடுக்காவிட்டால், மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகக் கூறியபடி, போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

No comments:

Post a Comment