அமெரிக்கா இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஜப்பான் மீது வீசிய அணுகுண்டுகளை விடவும், 9/11-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது ஒசாமா பின்லேடன் ஆட்கள் நடத்திய தாக்குதலை விடவும் அதிக பாதிப்புகளை அமெரிக்க நிர்வாகத்தின் மீது ஏற்படுத்தி யிருக்கிறது விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ள தகவல்கள்.
கொஞ்ச காலமாகவே அமெ ரிக்கா என்ற யானையின் காதுக்குள் புகுந்த எறும்பாக குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தது விக்கிலீக்ஸ் இணையதளம். இதன் நிறுவனரான ஜூலியன் அசான்ஜே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். கணக்கில் பட்டங்கள் பல பெற்றவர். ஆனால், அவர் போட்ட கணக் கெல்லாம், உண்மைகளை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது பற்றித்தான்.
தனது சகாக்களோடு சேர்ந்து அவர் தொடங்கிய விக்கிலீக்ஸ் இணையதளத்தில் ஆஃப்கானிஸ் தான் மீது அமெரிக்க-பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தியபோது, அப்பாவிப் பொதுமக்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள், தீவிரவாதிகள் என்று சந் தேகிக்கப்பட்டவர்கள் என்ன பாடுபடுத்தப்பட்டார்கள், மொத்த உயிர்ப்பலிகள் எவ்வளவு, அதில் அமெரிக்க- பிரிட்டன் படைகளின் தரப்பில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் என்ன என்பதையெல்லாம் ஆவணங்களோடு அம்பலப்படுத்தப்பட்டன. அமெரிக்காவுக்கு அசான்ஜே கொடுத்த முதல் அதிர்ச்சி வைத்தியம் இதுதான்.
“அத்தனையும் அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனில் இருந்த ஆவணங்கள். இது எப்படி விக்கிலீக்ஸுக்குப் போனதுன்னு தெரியலை என்று அமெரிக்காவின் சி.ஐ.ஏ உள்பட எல்லா அரசு இயந்திரங்களும் பேய் முழி முழித்தன. திருடனுக்குத் தேள்கொட்டியது போல அமெரிக்க அரசு தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில், ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா அங்கே எப்படியெல்லாம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது என்பதையும் விக்கிலீக்ஸ் லீக் செய்தது. இது இரண்டாவது அதிர்ச்சி வைத்தியம்.
மூன்றாவது என்ன அதிர்ச்சியைத் தரப்போகிறது என்று அமெரிக்கா மட்டுமல்ல, உலகநாடுகள் அனைத்திலும் உள்ள இணைய வாசகர்கள் எதிர்பார்த்திருந்தனர். எந்த நாட்டின் மீதான படையெடுப்பு ரகசியங்கள் வெளிவரப்போகின்றன என்று எதிர்பார்த்த நிலையில்தான், ஆற்றோடு போன நரி, அய்யோ உலகம் போச்சே என்று கத்திக்கொண்டே போனதுபோல இந்தியா உள்பட பல நாடுகளையும் தொடர்பு கொண்ட அமெரிக்க அரசு நிர்வாகம், "விக்கிலீக்ஸ் பல ஆவணங்களை வெளியிட்டு நமக்கிடையிலான உறவுகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம்' என்றது. சம்மன் இல்லாமல் அமெரிக்கா ஏன் ஆஜராகிறது என்று பல நாடுகளும் யோசித்தன. விக்கிலீக்ஸ் இணையதளம் எதையாவது வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி, தடையும் விதித்தது அமெரிக்கா.
விக்கிலீக்ஸ் சாதுர்யமாக, தன்னிடமிருந்த ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற சர்வதேச பத்திரிகைகளுக்குக் கொடுத்து வெளியிட வைத்தது. ஒபாமா என்ற அதிபர் அமெரிக்கா வின் முகமூடிதான், அமெரிக்க நிர்வாகத்தின் ஒரிஜினல் முகம் என் பது ஆபத்தானது என்பதை அந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தின.
பல நாடுகளிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பதிவாகியுள்ள ஆவணங்களும், தூதரக அதிகாரி களும், அமெரிக்க நிர்வாகத்தினரும் போனில் நிகழ்த்திய உரையாடல்களின் எழுத்து வடிவமும் தான் தற்போது வெளிப்பட்டு, அமெரிக்காவைக் குலை நடுங்க வைத்திருக்கிறது.
சமீபத்தில்தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்தித்துக் கைக்குலுக்கியிருந்தனர். ஆனால், புடினைப் பற்றிய அமெரிக்காவின் மதிப்பீடு என்ன தெரியுமா? அவர் ஒரு ஆல்ஃபா நாய்... அடஙொக்க மக்கா! அமெரிக்க மிரட்டலுக்கு அடங்காமல் குரல் கொடுக்கும் ஈரானின் அகமதிநிஜாத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர், அடால்ஃப் ஹிட்லர். இந்த அம்பலம் மூலம் கிடைத்துள்ள ஒரு நல்ல அம்சம், ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அமெரிக்க நிர்வாகம் ஒத்துக் கொண்டிருப்பது தான். எந்த நாட்டின் மீது படையெடுத்தாலும் கூட்டாளியாகச் சேர்த்துக்கொள்ளும் இங்கிலாந் தையும் அமெரிக்கா விட்டுவைக்கவில்லை. அங்கே பக்கிங்ஹாம் அரண்மனையில் என்னென்ன காதல் லீலைகள் நடக்கிறது, அதன்மூலம் அரச குடும்பத் தில் என்னென்ன பிரச்சினைகள் எழும் என்பதையெல்லாம் தனது தூதரக அதிகாரிகளை வைத்து உளவு பார்க்க வைத்தது. இதனால் இங்கிலாந்து பிரதமர் கேமரூனுக்கும் நெருக்கடி.
சின்ன நாடான கரிபீயன் தீவு முதல் தனது பெரிய எதிரியான சீனா வரை எல்லா நாடுகளிலும் குழப்பத்தை உண்டாக்கும் வேலைகளை அமெரிக்கத் தூதரகங்கள் மேற்கொண்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக விரும்பும் இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தும் வேலைகளையும் அமெரிக்கா செய்து வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஐ.நா.சபை பொதுச்செயலாளரில் தொடங்கி அங்கே முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரையும் உளவு பார்க்கும் வேலையும் நடந்து வருவதை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்கா மீது கோபமும் சந்தேகமும் கொண்டுள்ளன.
உலக நாட்டாண்மையின் உண்மை முகத்தைத் தோலுரித்ததன் மூலம் சூப்பர் ஹீரோவாகியிருக்கிறார் ஜூலியன் அசான்ஜே. விட்டுவைக்குமா அமெரிக்கா? சர்வதேச போலீசாரின் உதவியுடன் அவரைக் கைது செய்வதற்கான பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் 3 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்-கற்பழித்தார் என்றெல்லாம் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு அந்த நாட்டு நீதிமன்றத்தில் அவருக்குத் தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளது. மேல் முறையீடு செய்துள்ள அசான்ஜே, மாறுவேடத்தில், வேறுவேறு பெயர்களுடன் வெவ்வேறு பாஸ்போர்ட்களில் உலகின் பல நாடுகளிலும் உள்ள ஓட்டல்களில் தங்கி, பாதுகாப் பில்லாத நிலையில் உள்ளார்.
அவர் வெளிப்படாவிட்டாலும், அவரது விக்கிலீக்ஸ் இன்னும் பல உண்மைகளை வெளிப் படுத்தும் என்ற அச்சத்தில் ஆட்டம் கண்டிருக்கிறது அமெரிக்கா.
|
No comments:
Post a Comment