75 ஆண்டுகளுக்கும் மேலாக, சங்கொலி எழுப்பி வரும் ஆங்கிலேயர்கள் கால மின்சார சங்கு, இப்போதும் நல்ல நிலையில் தன் கடமையை நிறைவேற்றி வருகிறது.
பொதுவாக சங்கு சத்தம் என்றாலே, பலருக்கும் அபசகுணம் என்று தான் நினைத்து வருகின்றனர். சங்கு ஊதினாலே, நினைத்த காரியம் நடக்காது என்ற கெட்ட எண்ணமும் பலரின் மனதில் உள்ளது. ஆனால், 75 ஆண்டுக்கும் மேலாக ஈரோட்டில் எழும் சங்கு ஒலி, இன்றளவும் உழைக்கும் மக்களின் மனதில், உழைக்க வேண்டும் எண்ணத்தை விதைத்து வருகிறது.ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, ஆங்கிலேய அதிகாரிகளும், மக்களும் நேரத்தை தெரிந்து கொள்ள, ஊருக்கு பொதுவான இடத்தில் மின்சார சங்கு அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் ஒலி எழுப்பப்பட்டது. ஈரோடு வ.உ.சி. பூங்கா, ஆங்கிலேயர்களால், "பீப்பிள்ஸ் பார்க்' என, அழைக்கப்பட்டது. பூங்காவுக்குள் மின்சார சங்கும் அமைத்தனர்.
அப்போது, காலை, 9 மணி, மாலை, 6 மணிக்கு சங்கு ஒலிக்கப்பட்டது. காலை, 9 மணிக்கு ஒலிக்கப்படும் சங்கொலி, தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டிய நேரத்தையும், மாலை, 6 மணிக்கு எழுப்பப்படும் சங்கொலி, பணி நிறைவடைந்த நேரத்தையும் காட்டியது.சங்கொலியை அடிப்படையாக கொண்டே, ஈரோடு பொதுமக்கள் நேரத்தை கணக்கிட்டனர். அறிவியல் முன்னேற்றத்தால், கடிகாரம், கம்ப்யூட்டர் என்று வந்த பின்னும், ஈரோடு மக்களின் காலம் காட்டும் கண்ணாடியாக, இன்றளவும் இந்த சங்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வ.உ.சி., பூங்காவில், பத்தாண்டுக்கு முன், சிறிய அளவில் மிருகக்காட்சி சாலை அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வளர்க்கப்பட்ட விலங்குகளுக்கு, சங்கின் ஒலி அச்சத்தை ஏற்படுத்தியதால், சில ஆண்டுகள் சங்கின் ஒலி நிறுத்தப்பட்டது. விலங்குகள் அனைத்தும் சென்னை, கிண்டி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட பின், சங்கின் பணி மீண்டும் தொடர்ந்தது. இன்று, 75 ஆண்டுகளை கடந்து இதன் பணி வெற்றிகரமாக தொடர்கிறது.
மாநகராட்சி ஊழியர்கள் சிலர் கூறியதாவது:சங்கை இயக்கவும், பராமரிக்கவும், தனி வாட்ச்மேன் ஒருவர் இருந்தார். சங்கை இயக்க மாதம், 15 ரூபாய் அவருக்கு, அலவன்ஸ் வழங்கப்பட்டது. தற்போது, துப்புரவு பணியாளர்கள் யாரோ ஒருவர் இப்பணியை செய்கின்றனர். தற்போது, அதிகாலை 4 மணி, காலை 8, மதியம் 12, இரவு 8 மணிக்கு சங்கொலி எழுப்பப்படுகிறது. ஈரோட்டின் பெரும்பாலான பகுதிக்கு சங்கின் ஒலி கேட்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு மக்களின் உன்னத தோழனாகவும், நேரம் காட்டும் கருவியாகவும், வ.உ.சி., பூங்கா சங்கு விளங்கி வருகிறது.
|
No comments:
Post a Comment