மனித வாழ்க்கையை நான்கு விதமாகப் பிரிக்கிறார்கள் ஃபைனான்ஷியல் பிளானர்கள். வேலை கிடைத்து திருமணமாகிற வரையிலான பேச்சுலர் வாழ்க்கை முதல் பாகம், திருமணமாகி குழந்தைகள் வளர்ப்பது வரை இரண்டாம் பாகம், அவர்களுக்கான சொத்து பத்து சேர்த்து வைப்பது மூன்றாம் பாகம், ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவது நான்காம் பாகம்...
இதில் மிகவும் முக்கிய மானது 23 - 27 வயது வரை உள்ள இளைஞர் பருவம். இந்த வயதில் சரியாக நிதித் திட்டமிடல் செய்பவர்கள் கடைசி காலத்தில் காலாட்டிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிப்பார்கள். 'லைஃப்-ஐ அனுபவிக்கணும்டா’ என்று டயலாக் விடுபவர்கள், திருமணமான பிறகு இ.எம்.ஐ.
சிக்கலில் மாட்டி பரிதவிப் பார்கள்! இந்த சிக்கலைத் தவிர்க்க 23 -27 வயதுள்ள இளைஞர்கள் தங்கள் நிதித் திட்டமிடலை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் நிதி ஆலோசகரான ஹரிணி.
பேச்சுலர்ஸ்!
23 - 27 வயதுள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் இதுவரை அப்பா தந்த பாக்கெட் மணியையும், அம்மாவிடம் நைஸாகப் பேசி வாங்கிய பணத்தையும் வைத்து செலவு செய்து வந்திருப்பார்கள். ஆனால், கையில் முதல் மாதச் சம்பளம் கிடைத்தவுடன் கண்ணில் பட்ட அனைத்தையும் வாங்க நினைப்பார்கள். முதல் சம்பளத்தில் அப்பா, அம்மா, அக்கா, தம்பிகளுக்குப் பிடித்ததை வாங்கித் தருவதோடு, நண்பர்களுக்கு ட்ரீட்டையும் தந்துவிட்டு, நிதித் திட்டமிடலை தொடங்கி விடலாம்.
இன்ஷூரன்ஸ்!
படித்து முடித்து வேலைக்குப் போனதும் ஆணோ, பெண்ணோ முதலில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். 'இன்ஷூரன்ஸா, அதுவும் ஓடுற பாம்பை கையில பிடிக்கிற இந்த வயசிலேயேவா?’ என்று கேட்கத் தோன்றும் வயது இது. ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசியை எவ்வளவு குறைவான வயதில் எடுக்க முடிகிறதோ, அவ்வளவு குறைவான வயதில் எடுத்தால் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் பெறலாம். தவிர, இளவயதில் பெரிய நோய் ஏதும் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் அது தொடர்பான ரைடர் பாலிசிகளையும் தவிர்த்து விடலாம்.
இந்த வயதுடையவர்கள் தங்கள் வருமானத்தைப் போல பத்து மடங்குக்கு பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இன்ஷூரன்ஸ் என்ற வுடனே எல்லோரும் எண்டோவ்மென்ட் பாலிசிகளையே எடுக்கிறார்கள். இந்த வயதுக்காரர்களுக்கு எண்டோவ்மென்ட் பாலிசிகளைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளே பொருத்தமானதாக இருக்கும். திருமணமான பிறகு தேவைப்பட்டால் மட்டும் எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுக்கலாம்.
இந்த வயதில் உள்ளவர்களுக்கு பெரிய நோய் எதுவும் வராது என்றாலும், மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். தன்னோடு தன் பெற்றோர்களுக்கும் சேர்த்து எடுக்கலாம். வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் கூடுதல் கவரேஜில் மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதன் மூலம் நம்மை நம்பி இருப்பவர்களை நட்டாற்றில் விடத் தேவையில்லை என்பதோடு, வரிச் சலுகையும் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.
ரியல் எஸ்டேட்!
இப்போதைய இளைஞர்கள் அனைவரும் சம்பளம் வாங்க ஆரம்பித்தவுடனே வீடு, நிலம் வாங்க புறப்பட்டு விடுகிறார்கள். 23, 24 வயதில் வேலைக்குச் சேர்ந்து டிரெய்னிங் பீரியட், புரஃபேஷன் பீரியட் என பல கட்டங்களைத் தாண்டி வர வேண்டும். இந்த காலகட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்னையால் வேலை இழக்க வாய்ப்புண்டு. எனவே, வேலை உறுதியாகும் வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யாமலிருப்பது நல்லது. குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது எந்தவிதமான தனிநபர் கடனோ, வீட்டுக் கடனோ வாங்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.
இதற்காக ரியல் எஸ்டேட் பற்றி யோசிக்கவே வேண்டா மென்று சொல்லவில்லை. எவ்வளவு தொகைக்கு வீடு அல்லது மனை வாங்கப் போகிறீர்கள் என்று தீர்மானித்துவிட்டு அதற்குத் தேவையான தொகையில் கால் சதவிகிதத்தைச் சேமிப்பது நல்லது. உதாரணத்திற்கு, இருபது லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்க ஆசைப்பட்டால் ஐந்து லட்சம் ரூபாய் வரை சேமித்துவிட்டு, மூன்று வருடங்கள் கழித்து யாரிடமும் கைநீட்டாமல், அதுவரை சேமித்து வந்த சொந்தப் பணம் மற்றும் வங்கிக் கடன் மூலம் வீடு வாங்கலாம்.
இந்த வயதில் உள்ளவர்கள் வீட்டுக் கடன் வாங்கும்போது எவ்வளவு ரூபாய்க்கு கடன் வாங்குகிறார்களோ, அந்த தொகைக்கு இணையான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது அவசியம். ஏனெனில், கடன் வாங்கிய பிறகு ஏதாவது அசம்பாவிதம் நடந்து கடன் கட்ட முடியாமல் போனால், பெற்றோர்கள் கஷ்டப்பட்டு அந்த கடன் பணத்தைக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால், இந்த பாலிசி எடுத்தால், பெற்றோர்கள் பணம் எதையும் கட்டாமலே அந்த வீட்டின் உரிமையை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
தங்கம்!
இளம்பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கணவன் இருக்குமிடத்திற்குப் போயாக வேண்டும் என்பதுதான் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் திருமணத்துக்கு முன்பாக வீடு வாங்கியிருந்தால் அதனால் சில சிரமங்கள் ஏற்படலாம். ஒருவேளை திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்ல முடியாதபட்சத்தில் அந்த வீட்டுக்கான கடன் சுமை கணவனின் தலையில்தான் விழும். எனவே, இளம்பெண்கள் வேலைக்குச் சேர்ந்ததும் ஹவுஸிங் லோனில் ஃபிளாட் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் தங்கத்தில் தாராளமாக முதலீடு செய்தால், திருமணத்தின்போதும், திருமணத்திற்குப் பிறகும் நிச்சயம் உதவும். ஆபரணமாகத்தான் தங்கம் வாங்க வேண்டும் என்பதில்லை. கோல்டு இ.டி.எஃப்., கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் திட்டங்கள் மூலமும் சேமிக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்!
ஆண், பெண் என இரு தரப்பினருக்குமே மிகவும் ஏற்றது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. எஸ்.ஐ.பி. முறையில் நல்ல வருமானம் தரும் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மன்த்லி இன்கம் குரோத் பிளானில்கூட முதலீடு செய்து வரலாம். சில நிறுவனங்களில் மன்த்லி இன்கம் பிளானில் தங்கத்தில் சில சதவிகிதங்கள் முதலீடு செய்யும் திட்டங்களும் இருக்கின்றன. அதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஃபண்டில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகைக்கு வரி கட்ட வேண்டியதில்லை.
வங்கி டெபாசிட்!
வங்கி டெபாசிட்டில் முதலீடு செய்தால், போட்ட பணத்திற்கு வேண்டுமானால் பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால், பணவீக்கத்தைவிட குறைந்த வருமானமே கிடைக்கும். ஓரளவுக்கு ரிஸ்க் எடுத்தாலும் பிரச்னை இல்லை என்கிற இந்த வயதில் வங்கி டெபாசிட் என்பது வீண்தான்!
பங்குகள்!
ரிஸ்க் எடுக்கும் வாய்ப்புகள் கொண்ட இளைஞர்கள், பங்குச் சந்தையில் துணிந்து முதலீடு செய்யலாம். 50,000 சம்பளம் வாங்குபவர்கள் மாதம் 5,000 ரூபாய் வரை பங்குகளில் முதலீடு செய்யலாம். நல்ல லார்ஜ்கேப் பங்குகள், புளூசிப் கம்பெனி பங்குகளாகப் பார்த்து நீண்ட காலத்திற்கு வாங்கிப் போடலாம். சந்தை கீழே இறங்கும்போது கூடுதலாக பங்குகள் வாங்கிச் சேமித்தால் நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன் கிடைக்கும்.
மற்ற முதலீடுகள்!
வங்கி டெபாசிட்கள் 8.5 -10% வட்டி தருகிறது என்றால், கம்பெனி டெபாசிட்கள் 10.5 - 12.5% வரை வட்டி தருகின்றன. நல்ல நிவாகம், அதிக ரேட்டிங், மிகவும் வலுவான நிதிநிலை கொண்டுள்ள கம்பெனி டெபாசிட்டுகளாகப் பார்த்து போடலாம். அத்துடன் பங்குகளாக மாற்ற முடியாத டிபஞ்சர்களில்கூட முதலீடு செய்யலாம். பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்டில் வருடத்திற்கு 70,000 ரூபாய் வரையில் சேமிக்கலாம். பங்குகளில் பணத்தை முதலீடு செய்ய விரும்பாத பெண்கள், தேசிய சேமிப்புப் பத்திரம் போன்ற ரிஸ்க் அல்லாத முதலீடுகளில் நீண்ட காலத்திற்குச் சேமிக்கலாம்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்கிற மாதிரி வயதிருக்கும் போதே நிறைய சேமித்து, சரியாக முதலீடு செய்வது அவசியம் என்பதை இளைஞர்களும், இளம்பெண்களும் புரிந்து கொண்டால் சரி.
- நாணயம் விகடன்
|
No comments:
Post a Comment