கேரளாவில் நிறைய தமிழ்ப்படங்கள் வெளியாவதைப் போல, தமிழகத்திலும் நிறைய மலையாளப் படங்கள் வெளியாக வேண்டும் என்று மஜா படத்தை இயக்கிய டைரக்டர் ஷபி கூறியுள்ளார். விக்ரம் - அஸின் நடித்த "மஜா படத்தைத் தந்தவர் மலையாளத்தின் பிரபல இயக்குநரான ஷபி. "மஜாவுக்குப் பிறகு தமிழில் படம் எதுவும் இயக்காத ஷபி தற்போது மம்முட்டி, காவ்யா மாதவன், பூனம் பாஜ்வா என்று பெரும் நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து "வெனிசின்டே வியாபாரி என்ற படத்தை மலையாளத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
மலையாள படவுலகம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மலையாளத் திரையுலகம் இப்போது மாறிவிட்டது. முன்பெல்லாம் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் வெளிவந்தன. ஆனால், இப்போது பாட்டு, டான்ஸ், சண்டைக்காட்சி இருந்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும் என்ற நிலை வந்து விட்டது. இதையெல்லாம் தமிழ்ப் படங்களைப் பார்த்துதான் மலையாள ரசிகர்களும் கற்றுக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.
இது வியாபாரம் என்பதால் யாருமே நஷ்டப்பட விருப்பமில்லாமல் கமர்ஷியல் ஃபார்முலாவுக்கு மாறிவிட்டார்கள். இருந்தாலும் அவ்வப்போது கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களும் வெளியாகின்றன. ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் திரைப்படங்கள் வெளியாகும் நேரத்திலேயே, கேரளத்திலும் தமிழ்ப் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. தமிழகத்திலும் அதிக அளவில் மலையாளத் திரைப்படங்கள் வெளியாக வேண்டுமென்பதே எனது ஆசை, என்று கூறியுள்ளார்.
|
No comments:
Post a Comment