வித்தியாசமான கதை, களத்தில் படம் பண்ண வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட இயக்குநர் பிரபு சாலமன், "மைனா' படத்திலும் அந்த முயற்சியைத் தொடர்ந்துள்ளார்.சுருளி, மைனா இருவரும் சிறுவயதில் நட்பாகி, பருவம் வந்ததும் காதலர்களாகிறார்கள்.
காதலர்களாக அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் "மைனா' ஒன் லைன் கதை.
கதைக்களம் தமிழ்நாடு- கேரளா எல்லையில் இருக்க வேண்டும்; அது இதுவரை சினிமாவில் காட்டப்படாத கிராமமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தைத் தேடுவதற்காக பன்னிரண்டாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து, போடியிலிருந்து 20-ஆவது கிலோமீட்டரில் உள்ள குரங்கணி கிராமத்தைக் கண்டு பிடித்திருக்கிறார் பிரபு சாலமன்.
குரங்கணியில் ஆரம்பிக்கும் கதை- செவ்வங்குடி, மூணாறு டாப் ஸ்டேஷன், மூணாறு டவுன், பூப்பாறை, முந்தல், போடி, தேனி வழியாக பயணப்பட்டு பெரியகுளத்தில் முடிகிறது.
படப்பிடிப்புக்கு எந்த வசதியும் இல்லாததால், பொதி கழுதைகள் மூலம் காமிரா மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்று, ஜெனரேட்டர் கொண்டு செல்ல முடியாததால் இயற்கை வெளிச்சத்தில் படமாக்கி இருக்கிறார் கள் பிரபுசாலமனும் ஒளிப்பதிவாளர் சுகுமாரும்.
ஹீரோ சுருளியாக கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்ற விதார்த், மலையாள மைனா அமலா, மலையாள நடனப் பள்ளியில் பயிற்சி பெற்ற சேது, சூசன் இவர்களுடன் தம்பி ராமையா காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார். இவர்களோடு குரங்கணி மண்ணின் மைந்தர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.
""தமிழ் சினிமாவில் கிராமம் என்றால் செம்மண் பூமி, கரிசல் பூமிதான் ரசிகர்கள் மனதில் பதிந்திருக் கும். இந்தக் கதைக்களம் எந்த சினிமா வையும் ஞாபகப்படுத்தாது. படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் இரண்டே கால் மணி நேரம் எங்கோ ஒரு புதிய உலகத்துக்குச் சென்று வந்த உணர்வைப் பெறுவார்கள்'' என்று சத்தியம் செய்து சொல்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்!
தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தயாரித்து வரும் கல்பாத்தி எஸ். அகோரம் க்ரூப்தான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட உள்ளார்.
""படத்தைப் பத்தி நான் பேசப் போவதில்லை. படம் பேசும்'' என்கிறார் உதயநிதி ஸ்டாலின்!
சொன்ன மாதிரியே பேசியும் விட்டது படம்.
|
No comments:
Post a Comment