Saturday, December 10, 2011

தயாநிதி வீட்டில் 323 தொலைபேசி இணைப்புகள். ஆவணங்களை கேட்கிறது சிபிஐ.


முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டுக்கு 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான ஆவணங்களைத் தருமாறு தொலைத் தொடர்புத் துறையிடம் சிபிஐ கோரியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ கடந்த வாரம் முதல்நிலை விசாரணையைத் துவக்கியது.

தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அவரது "போட் கிளப்' இல்லத்துக்கு 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஒரு "மினி தொலைபேசி எக்சேஞ்ச்' போலச் செயல்பட்டதாகவும் அங்கிருந்து, பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட பிரத்யேக கேபிள் மூலமாக சன் டி.வி.யுடன் இணைக்கப்பட்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விடியோ கான்பரன்சிங் போன்றவற்றுக்கும், அதிக அளவிலான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இந்தத் தொலைபேசி இணைப்புகள் பயன்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். பொது மேலாளரின் பெயரில் இந்த இணைப்புகள் பெறப்பட்டிருக்கின்றன. தயாநிதி மாறன் வீட்டில் இந்த இணைப்புகள் இருந்தாலும் உண்மையில் அவை அனைத்தும் சன் டி.வி.யின் ஒளிபரப்புக்காகவே பயன்படுத்தப்பட்டன என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாகவே புகார்கள் வந்திருப்பதாகவும், 2007-ம் ஆண்டில் இது தொடர்பாக விசாரிப்பதற்கு அனுமதி கோரியபோது, தொலைத் தொடர்புத்துறை மறுத்துவிட்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படியொரு தொலைபேசி எக்சேஞ்ச் செயல்படுவது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சில உயரதிகாரிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமலேயே இருந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அளவுக்குத் திறன் கொண்ட கட்டமைப்பு நிறுவுவதற்கு பெரும் பணம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் கிட்டத்தட்ட இலவசமாகவே இதை தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

No comments:

Post a Comment