""கம்ப இராமாயணத்தை எழுதியது யார் தெரியுமா?'' -இது தலைவர் கலைஞர் கழகத்தின் பழைய பேச்சாளர் ஒருவரைப் பார்த்து கேட்ட கேள்வி. அதற்கு அந்தப் பேச்சாளர் ஒரு நிமிடம் அமைதி காத்து... "நீங்கதான் தலைவரே...'ன்னு சொன்னாரு.
தலைவர் கோபமாகி... எல்லா விஷயங்களையும் கத்துக்கிட்டு அதுக்கப்புறம் மக்கள் மத்தியில் பேச வேண்டும்னு அந்தப் பேச்சாளர்கிட்ட சொன்னாரு. இது நிஜமாவே நடந்த சம்பவம்.
கேள்வியிலேயே பதில் உள்ளதைக்கூட புரிஞ்சுக்காத அந்தப் பேச்சாளர் மாதிரி யாரும் இருக்கக்கூடாதுன்னுதான் நம் கழகம் இந்த சொற்பொழிவாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையை இந்த குளு குளு ஊட்டியில் நடத்திக்கொண்டிருக்கிறது'' என்று து.முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு ஓப்பனிங் கொடுத்துவிட்டுப் போக... தாங்கள் இங்கே அமர்ந்திருப்பதின் அவசியத்தை உணர்ந்து உன்னிப்பாய்க் கேட்கத் தொடங்கினார்கள் மாநிலமெங்குமிருந்தும் வந்திருந்த தி.மு.கழகப் பேச்சாளர்கள்.
ஊட்டி மோனார்க் ஹோட்டலில் 16-09-10 அன்று தொடங்கிய இந்த சொற்பொழி வாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் பயிற்சி எடுக்க நடிகை குஷ்புவும் வந்திருந்தார்.
கூட்டத்தை ஏற்பாடு செய்த கொள்கைபரப்புச் செயலாளரும் மத்திய அமைச்சருமான ஆ.ராசா... ""நான் எட்டாவது படிக்கும் போது தான் என் தமிழாசிரியர்... அண்ணா இறந்தபோது கலைஞர் எழுதிய "இதயத்தை தா...?' என்ற கவிதையை படித்து மனப்பாடம் செய்யுங்கள் என்று சொன்னார்.
அந்தக் கவிதையை நான் மனப்பாடம் செய்தபோது... தலைவர் கலைஞரின் அந்த கவிதை என் இதயக் குளத்தில் ஒரு கல்லையெறிந்தது. அதற்குப் பின்தான் கதர்ச்சட்டை வரலாற்று குடும்பத்திலிருந்த நான் தலைவரின் தொண்டனாக ஆனேன். சாதாரண குடும்பத்திலிருந்து வந்த நான் உங்கள் முன்னால் நிற்பதற்கும், உங்களோடு ஒருவனாய் இருப்பதற்கும் தலைவரின் அந்த கவிதைதான் காரணம். அதேபோல் மற்றவர் களை நம் கழகத்திற்கு உங்கள் கருத்துச் செறிவானப் பேச்சுக்களால் வரவழைக்க வேண்டும்'' என்று பேச பயங்கர அப்ளாஸ்.
"அதே கூட்டத்தில் திராவிட இயக்கமும் பெண் ணுரிமையும்' என்ற தலைப்பில் வழக்கறிஞர் அருள் மொழி நீண்ட ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். ""ஒரு குடும்பத்துடன் நீங்கள் ஒரு வாகனத்தில் பயணிக்கும் போது... ஆண்களான நீங்கள் சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் ஏதோ ஒரு இடத்தில் கழித்து விடுகிறீர்கள்... பீடி, சிகரெட், டாஸ்மாக் கடை உட்பட எல்லாவற்றையும் வாங்க உங்களை சமூகம் அனுமதிக்கிறது. ஆனால் அதே வாகனத்தில் பயணிக்கும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட் டால் வண்டியை நிறுத்தச் சொல்லி, ஒரு மருந்து கடையிலோ இல்லை ஒரு மளிகைக் கடையிலோ நாப்கின் வாங்கும் நிலை இன்றுவரையிலும் ஏற்படவில்லையே'' என்று அவர் கொதித்த கருத்தில் தங்கள் கவனத்தைப் பதித்தார்கள் பயிற்சியாளர்கள்.
"கலைஞர் உருவாக்கிய சமூக புரட்சி' என்ற பெயரில் பொன்முடி பேசியபின்... பயிற்சியாளர் ஒருவர் "கலைஞர் ஆட்சி செய்திருக்கிற சாதனைகளை புள்ளி விபரங்களாக கொடுக்க வேண்டும் ' என்று கேட்க... ""சாதனைகளை புள்ளி விபரங்களாக கொண்டு பேசினால் மக்களிடையே எடுபடாது. சாதனையின் உண்மைகளை கிராமப்புறங்களில் உள்ள மக்களிடையே பேசும்போது... கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனையில் இருந்து உடல்நிலை தேறியபோது நினைத் தார். "நான் இந்த தனியார் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்றிருக்கிறேன்.
ஆனால் இந்த குப்பனும் சுப்பனும் உடல்நிலை மோசமாகும்போது தனியார் மருத்துவமனையில் கால் வைக்க முடியாது என்ற நிலையிருக்கிறதே... என்ன செய்வது?' என மனம் நொந்து போன கலைஞர்... "ஏழைகளும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்ல முறையில் வாழ வேண்டும்...' என்று கலைஞர் காப்பீடு திட்டத்தை உருவாக்கினார் என்ற உண்மை செய்தியை இப்படி சொல்ல வேண்டும்'' என்று முடிக்க... அப்படியொரு கைதட்டல்.
இரண்டுமணி நேரம் இடைவிடாது முழங்கிய கோவை மு.இராமநாதன் இராமாயணம், மகா பாரதக் கதைகளை கதாகாலட்சேபம் செய்பவர்கள் சொல்வது போல்... அதாகப்பட்டது... என்று ஆரம்பித்து பதினைந்து நிமிடங்கள் மூச்சு விடாமல் பேசியது புதிய தலைமுறை பேச்சாளர்களுக்கு அரும் பெரும் மருந்தாக முடிந்தது.
17-09-10 தந்தை பெரியார் பிறந்தநாள் என்ற சிறப்பு வாய்ந்த தகுதியோடு அந்த நாள் சொற்பொழிவாளர்கள் பயிற்சி அரங்கம் தொடங்கியது.
"சமூக நீதியில் இடஒதுக்கீடு' என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர் நெடுஞ்செழியன் சொன்ன கருத்துக்கள் ஆழமானவை. அதில் ""செண்பகம் துரைசாமி என்ற 36 வயது பெண்... "மருத்துவக் கல்லூரியில் இடம் கேட்டேன். ஆனால், நான் ஃபார்வேர்டு கிளாஸ் என்பதால் எனக்கு சீட் கிடைக்கவில்லை' என்று 1952-ல் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்தபோது... அந்தப் பெண்ணுக்காக அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் வாதாடி இடஒதுக்கீட்டையே ரத்து செய்யும் தீர்ப்பை வாங்கினார்.
அதற்குப் பின்னால்தான் அந்த செண்பகம் துரை சாமி மருத்துவக் கல்லூரியில் சீட் கேட்டு விண்ணப் பிக்கவேயில்லை என்று தெரிய வந்ததோடு, முன்னால் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பை எதிர்த்து நாம் போராடி வெற்றியும் கண்டோம்'' என்று நெடுஞ்செழியன் பல புது தகவல்களை சொன்னார். அதேபோல "திராவிட இயக்க மும் பொதுவுடைமையும்' என்ற தலைப்பில் பேசிய விடுதலை விரும்பி... ""இந்தியாவில் ஒரு பசுவுக்கும், ஒரு பூசாரிக்கும் தொண்டு செய்வதையே இந்தியர்கள் பெரிதாக நினைக்கிறார்கள் என்று காரல்மார்க்ஸ் தன் பார்வையை இந்தியாவின் மீது பதித்து சொன்னது எவ்வளவு பெரிய உண்மை. ஆயுதத்தை ஆயுதத்தாலேயே வெல்ல முடியும் என்பது இயலாது. நம் ஆயுதம் தத்துவமாக இருக்க வேண்டும் என்பதை பெரியாரும், அண்ணாவும் விரும்பியதைத்தான் கலைஞர் செய்கிறார்'' என்று பேசிய அவரிடம்... "நாத்திகம் என்பது கடவுள் மறுப்பா?' என்று ஒரு புதிய பேச்சாளர் கேட்க... ""நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு அல்ல. நாத்திகம் என்பது வேதங்களை மீறுவது...'' என்று சொல்ல பயிற்சியாளர்கள் அவரின் ஒரு மணி நேர ஆழ்ந்த பேச்சை கேட்டு ரசித்தார்கள்.
சாதி என்பது மதத்தை விட கொடியது என்று "கடவுள், மதம், சாதி, திராவிட இயக்கப் பார்வையில்...' என்ற தலைப்பில் பேசிய சுப.வீரபாண்டியன் பெரியாரை முன்வைத்து வெளுத்துக் கட்ட பயிற்சியாளர்கள் கைதட்டிக் கொண்டேயிருந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியாய் "மொழிப்போர் வரலாறு' என்ற தலைப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்... ""மொழிப்போர் போராட்டம்னு தலைப்பு கொடுத்திருந்தா கல்யாணப் பரிசு தங்கவேலு மாதிரி அது ஒரு பெரிய போராட்டம்னு முடிச்சிரலாம்னு பார்த்தேன். ஆனா மொழிப் போர் வரலாறுன்னு தலைப்பு கொடுத்துட்டாங்க''ன்னு சொல்ல... சிரிப்பு களை கட்டியதை அடுத்து பேச்சைத் தொடர்ந்தார்.
""இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது போராட்டத்தில் இருந்தவர்கள் பலர் ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராய் கழகத்தை விட்டு கழன்றுபோக ஆரம்பித்தார்கள். அதற்குப் பின் போராட்டத்தில் துணையாயிருந்த எல்.கணேசன் அவர்கள் வேறு... துபாய் போய்விட்டார்'' என்று பேச... பயிற்சியாளர்கள் மட்டுமின்றி சுப.வீரபாண்டியன் கூட அந்த சமயத்தில் எல்.கணேசன் துபாய்க்கு எப்போது போனார்? என்று புரியாமல் விழிப்பதை புரிந்து கொண்ட துரைமுருகன்... ""துபாய்க்கு போனா கை நிறைய சம்பாதிக்கலாம் வா...? அப்படினு பல பேர ஆசை காட்டி கூப்புட்டு போய் ஒண்ணுமில்லாத பொழப்புக்கு விட்டுட்டுப் போயிடுவாங்க. அப்படி அழைத்த வைகோ கூட எல்.ஜி. அப்போது போயிட்டாரு'' என்று பேச... எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
""இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது மாயவரம் சாரங்க பாணி என்ற நமது தொண்டன்... இந்திக்கு எதிராக கோஷமிட்டு உடலில் மண்ணெண் ணெயை ஊற்றிக் கொண்டு... யாரும் தன்னைக் காப்பாற்றக் கூடாது என்பதற்காக ஒரு மரத்தில் தன் காலைக் கட்டி தலைகீழாக தொங்கிக் கொண்டு தீ வைத்துக் கொண்டு எரிந்து அவன் ஆஸ்பத்திரியில் கிடந்தபோது... உடம்பு முழுக்க எரிந்து கிடக்கிற அவனிடம் கண்ணீ ரோடு... உனக்கு வலிக்கலையா? என்று கேட்டேன். அதற்கு அவன்... "வலிக்கிறது. ஏனென்றால் என் நெஞ்சில் கலைஞர் இருக்கிறாரே... அவருக்கு வலிக்குமோ என்பதால் எனக்கு வலிக்கிறது' என்று சொல்லி அவன் இறந்து போனதை சிறையிலிருந்து வெளியே வந்த கலைஞரிடம் சொல்லியபோது தலைவர் அழுத அழுகை இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.
அந்த மாயவரம் சாரங்கபாணி யின் அம்மா... மண்ணில் உருண்டு எழுந்து... என் மகனின் சாவுக்கு காரணமானவர்கள் நாசமாய்ப் போகட்டும் என்று மண்ணை எடுத்து வீசி சாபமிட்டார் அந்த சாபம்தான் இப்போதுவரைக்கும் தமிழ்நாட்டை காங்கிரஸை ஆள விடாமல் செய்திருக்கிறது'' என்று அந்த வரலாற்று சம்பவத்தைச் சொல்லி முடித்த துரைமுருகன் உட்பட மேடையி லிருந்தவர்கள், பயிற்சியாளர்கள் என எல்லோரும் அழுதே விட்டார்கள்.
""இந்த பயிற்சிப் பட்டறை முடிந்து திரும்பி போகும்போது பேருந்து ஜன்னல்களின் வழியே நீங்கள் பார்க்கும் போது நிச்சயம் இங்குள்ள மரங்கள் தெரியாது. இந்த பயிற்சிப் பட்டறையின் நிகழ்வுகள் தான் தெரியும். இப்போது கூர் தீட்டப்பட்ட வாளாய் கழகத்தின் கொள்கைகளை எடுத்துக்கொண்டு போகிறீர்கள். இனி மேடைதோறும் பொதுமக்களின் நெஞ்சில் கருத்துக் களை விதையுங்கள்'' என்ற திருச்சி சிவாவின் நன்றியுரையோடும், உணர்ச்சிப் பெருக்கோடும் முடிந்தது சொற் பொழிவாளர்கள் பயிற்சிப் பட்டறை.
|
No comments:
Post a Comment