Friday, December 31, 2010

அன்னா கரனீனா

டால்ஸ்டாய்

அன்னா கரனீனாதான் உலகிலேயே சிறந்த நாவல் என்று சொல்பவர்கள் உண்டு.

எது எப்படியோ, பல முறைத் திட்டமிட்டு, வாசகர்களைக் கட்டிப் போட்டு விட வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப் பட்ட அன்னா கரனீனா,டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போல சுகமாகப் படித்துக் கொண்டு போய் விடக் கூடியது இல்லை.

எனக்கு சோகக்கதைகள் படிக்கப் பிடிக்காது. அன்னாவின் வாழ்வில் அன்றைய சமூக நடைமுறைக்கு மாறாக நடப்பதை அன்னா, அவள் கணவன், அவளது காதலன் என்று மூன்று கோணங்களிலும் சொல்லிச் செல்கிறார்.

அன்னா என்ற பெண் உருவத்தைப் பற்றி எழுதிய வரிகளை இறுதிப் பதிப்புகளில் நீக்கி விட்டாராம் டால்ஸ்டாய். ஒவ்வொருவரும் தம் மனதில் தமக்கு வேண்டிய உருவில் அவளை உருவகித்துக் கொள்ளட்டும் என்று திட்டமாம். பொன்னியின் செல்வனில் மணியம் அல்லது மணியம் செல்வனின் ஓவியங்கள் இல்லாமல் இருந்திருந்தால் வானதியும், நந்தினியும், குந்தவையும் எவ்வளவு உன்னத நிலையில் இருந்திருப்பார்கள். இப்போது ஓவியரின் கற்பனைக்கு உட்பட்டே நாம் நின்று விட வேண்டியிருக்கிறது. தொடர்கதைகளில் படம் போடுவார்கள் என்றே தொடர்கதையாக வெளியிட மறுத்த எழுத்தாளர் பற்றிப் படித்த நினைவில் இருக்கிறது.

கதையின் ஆரம்பமே ஒரு இக்கட்டில் ஆரம்பிக்கிறது. ஓப்லோன்ஸ்கியின் வீட்டில் குழப்பம். குழந்தைகளுக்கு பாடம் சொல்ல வைத்திருந்த ஆசிரியையுடன் அவர் வைத்திருந்த கள்ள உறவு அவரது மனைவி டோலிக்குத் தெரிந்து விடுகிறது. 'வீட்டில் நன்றாகச் சாப்பிட்டு விட்டு வந்த பிறகு கடையில் இனிப்பைப் பார்த்தால் சாப்பிட விரும்புவது நியாயமா' என்ற கெவினின் கேள்விக்கு, 'ஏன், இனிப்பு நன்றாக இருந்தால் அதையும் தான் சாப்பிட்டுக் கொள்வது'' என்று பதில் சொல்லும் ஓப்லோன்ஸ்கிக்கு தனது செய்கையில் வருத்தம் எதுவும் இல்லை. இப்படி மாட்டிக் கொண்டு விட்டோமே என்று கலக்கம். மனைவி விட்டு விட்டுப் போய் விட்டால் என்ன செய்வது என்று குழப்பம்.

நன்றாக சாப்பிடுவது, விருந்துகளுக்குப் போவது, தெரிந்தவர்களின் கையைக் காலைப் பிடித்து அரசாங்கப் பதவிகளைப் பிடித்து வருமானத்துக்கு வழி செய்து கொள்வது அதுவும் போதாத நேரத்தில், மனைவி மூலம் வந்த சொத்துக்களை விற்று விடுவது என்று மாஸ்கோவில் வாழ்க்கை நடத்தும் அவரது சகோதரி அன்னா கணவனுடன் பீட்டர்ஸ்பர்கில் வசிக்கிறார்.

தனது மனைவியை சமாதானாப்படுத்த அன்னாவை மாஸ்கோவுக்கு அழைக்கிறார் ஓப்லோன்ஸ்கி.

அன்னா ரயிலில் வரும் போது பக்கத்து இருக்கையில் பயணித்த மூதாட்டியின் மகன் தன் தாயை அழைத்துப் போக மாஸ்கோ ரயில் நிலையத்தில் வருகிறான். அப்போது அவனைச் சந்திக்கும் அன்னாவுடன் எப்படியாவது உறவு ஏற்படுத்திக் கொள்வது என்று வ்ரோன்ஸ்கி என்ற அந்த இளைஞன் முடிவு செய்கிறான். தீரமிக்க இளைஞர்கள் அப்படி திருமணமான பெண்களை துரத்துவது அந்த வட்டங்களில் பெருமையாக கருதப்படுமாம்.

வ்ரோன்ஸ்கி அதுவரை நட்பு கொண்டு பழகி வந்த பெண் கிட்டி, டோலியின் தங்கை. கிராமத்தில் வசிக்கும் கெவின் கிட்டியை திருமணம் செய்யக் கேட்டு அவள் வ்ரோன்ஸ்கியின் மயக்கத்தில் மறுத்து விட மனம் உடைந்து ஊருக்குப் போய் விடுகிறான்.

அன்னா, தனது சகோதரனின் சிக்கலைத் தீர்த்து வைத்து விட்டு தனது வாழ்க்கையை சிக்கலில் ஆழ்த்தி விடுகிறாள். வ்ரோன்ஸ்கி கிட்டியை முற்றிலும் மறந்து அன்னாவைத் தொடர்ந்து பீட்டர்ஸ்பர்க் போகிறான். அங்கு பல வழிகளில் முயன்று சில மாதங்களுக்கு பிறகு அவளது உறவையும் பெற்று விடுகிறான். அன்னாவுக்குத் தன் கணவனுடனான வாழ்க்கை போலியாகத் தெரிகிறது. அவள் கணவனுக்கு விபரங்கள் தெரிந்து விட அன்னாவும் வ்ரோன்ஸ்கியும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

வ்ரோன்ஸ்கியால் புறக்கணிக்கப்பட்ட கிட்டி நோய்வாய்ப்பட்டுத் தேறி, அக்கா டோலியின் உதவியால் கெவினுக்கு விளக்கங்கள் அளித்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இப்படி கெவினின் ஆதர்ச குடும்ப வாழ்க்கைக்கான தேடல் ஒரு பாதையிலும், அன்னாவின் குடும்ப அமைப்பை மீறிய வாழ்க்கை தேடல் இன்னொரு பாதையிலும் பயணிக்கிறது கதை.

அன்னா, சகோதரன் ஓப்லோன்ஸ்கி இரண்டு பேருமே திருமண வாழ்க்கைக்கு வெளியே உறவு தேடுவது, டோலி, கிட்டி, இன்னொரு சகோதரி, அவர்கள் பெற்றோர் என்று ஒரு பிரபுத்துவ குடும்த்தின் ஆசாபாசங்கள், வ்ரோன்ஸ்கியின் விடலைக் கூட்டத்தின் கூத்தடிப்புகள். அரசு அதிகாரிகளின் அரசியல், விவசாம் செய்யும் கெவின் மூலம் கிராமத்து நடப்புகள் என்று முழுமையான நாவலாக உருவாக்கியிருக்கிறார் டால்ஸ்டாய்.

கெவின், கிட்டி வாழ்வின் மகிழ்ச்சி ஆதாரங்கள் வளர்ந்து கொண்டே போக, அன்னா-வ்ரோன்ஸ்கியின் வாழ்வின் வதைகள் பெருகிக் கொண்டே போகின்றன. சமூக ஒதுக்கலாலும், தமது மனக் குழப்பங்களாலும் விளிம்பிற்குத் துரத்தப்படும் அன்னா, ரயிலின் முன்பு குதித்து தற்கொலை செய்து கொள்வதோடு கதை ஓய்கிறது. வ்ரோன்ஸ்கி மனம் வெறுத்து போர்ப்படைக்குப் போவதும், கெவின் கேள்விகளுக்கு விடை தேடுவதுமாக கதை முடிகிறது

No comments:

Post a Comment