தி ஜானகிராமன்
- 'பிள்ளைப் பருவ அறியாமைகள் கலைந்து நடைமுறை வாழ்க்கையாக எழுதப்பட்ட அரிய எழுத்தை முதல் முதலில்் சந்தித்தது, அதிலேயே கட்டுண்டு போனது' ஜானகிராமனின் மோகமுள்ளில்.
- நல்லவன், கெட்டவன், நன்மை தீமை என்று கதைகள் இல்லாமல் மனிதர்களாக வடிக்கப்பட்ட கதைகளில் உணர்ந்து முதலில் படித்தது மோகமுள்.
அதற்கு முன்பே ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் போல படித்திருந்தாலும், அதெல்லாம் எங்கோ வேறு ஒரு உலகில் நடப்பதாக உருவகித்துக் கொண்டு படிப்பேன்.
மோகமுள்ளில்தான், கும்பகோணம் புழுதி பறக்கும் தெருவில் குடும்பக் கிளைகள் தேடும் சாஸ்திரிகளில் ஆரம்பித்து, பாபு என்ற 'சின்ன்னப்' பெயரைக் கொண்ட நாயகனின் மன ஓட்டங்களில் மாட்டிக் கொண்டு மிதந்து போன அனுபவங்கள் மறக்க முடியாதவையாக மனதில் உறைந்து போயின.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் பட்ஸ் போஜன் உணவு விடுதி கட்டிடத்தில் மாடியில் ஒட்டுக் குடித்தனமாக இருந்த / இருக்கும் காமராசர் நினைவு நூலகம்தான் கல்லூரியில் படிக்கும் போது இந்த நூலை முதலில் மடியில் போட்டது. அப்புறம் வேலைக்குப் போய் சொந்தப் பிரதி வாங்கி நினைக்கும் போதெல்லாம் கைக்கு வந்த பகுதியைப் பிரித்துப் படிக்கும் போதும் ஒவ்வொரு முறையும் ஜானகிராமனின் எழுத்து கட்டிப் போடும்.
கும்மோணம் கல்லூரியில் படிக்கும் பாபு, அவன் தோழன் ராஜம், பாபநாசத்தில் இருக்கும் அப்பா, அம்மா, அக்கா, பக்கத்து வீட்டு இரண்டாம்தார இளம்பெண்ணுடனான உறவு, ஜமுனா எனப்படும் யமுனாவின் மீதான காதல், அக்கா கணவர், அக்கா பெண், ராஜத்தின் அப்பா, பாட்டு ஆசிரியர் என்று யாரையும் விட்டு விட முடியாது. கூடப் படிக்கும் வெங்கட் ராமன் என்ற எழுத்தாள நண்பனிலிருந்து, சென்னையில் குடியிருக்க வீடு கொடுத்த வீட்டுக்காரர், நாக்கைத் துருத்திக் கொண்டு படம் போடும் விளம்பர நிறுவன ஓவியக் காரர், பகல் பொழுதில் தூங்கும் மகளிர் விடுதித் தலைவி என்று ஒரே கட்டம் வந்து போகிறவர்கள் கூட முழு மனிதர்களாக உருப்பெறுவார்கள் இந்தக் கதையில்.
சங்கு என்ற பெரியப்பா பிள்ளை, யமுனாவைப் பெண் பார்க்க வரும் வரன்கள், தரகர், பிரபல பாடகராக விளங்கும் குருவின் சிஷ்யன் ராமு அண்ணா, மராத்தி பாடகர்கள் என்று மனிதர்களால் நிரம்பிய எழுத்து இந்த மோகமுள்.
திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன். அதைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. தேடிப் போகவும் துணிவில்லை. கதை பின்னிய சித்திரங்களைக் குலைத்து விடாது என்று உறுதியாகத் தெரிந்தால் பார்க்கலாம். ஐந்திணைப் பதிப்பகத்தின் வெளியீட்டில் படங்கள் கூ டச் சேர்க்காமல் சொந்தக் கற்பனையிலேயே படித்த முகங்கள் மோகமுள்ளின் மனிதர்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்தம். சிலருக்கு அம்மா வந்தாள்தான் மிகச் சிறந்தது. என்னைப் பொறுத்த வரை மோகமுள்தான் ஜானகிராமனின் மாஸ்டர்பீஸ். நாடகத்தன்மை இல்லாமலேயே உலக இயல்புக்கு மாறுபட்ட நடப்புகளை சொல்லிக் கொண்டு போய் விடுவார் அவர்.
பாபு விளம்பர நிறுவன வேலையை விட்டு விடும் போதும், கச்சேரி செய்வதை நினைத்துப் பார்க்கக் கூட மறுக்கும் போது, சங்கீத ஆசிரியரின் மனைவிக்கு பணம் அனுப்பும் போதும், கடைசிக் கட்டமாக எல்லாவற்றையும் உதறி விட்டு மகாராஷ்டிரம் போய் குரலைப் பண்படுத்தக் கிளம்பி விடும் போதும், யமுனாவுடன் காஞ்சிபுரத்தில் சுற்றும் போதும், ஆரம்பக் கதையில் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் தொடர்பு கொள்ளும் போதும் கதை என்ற உயரத்தை உடைத்து சாதாரண வாழ்வில் நிகழ்ச்சிகளைக் கொடுத்து செல்வார் ஜானகிராமன்.
தமிழுக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் தனது குறிக்கோள் என்று கவிஞர் வைரமுத்து சொல்வார். தமிழில் நோபல் பரிசு வாங்கும் தகுதியோடு எழுதப்பட்ட எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் ஜானகிராமன். அத்தகைய படைப்புகளில் முதல் இடம் மோகமுள்ளுக்கு நிச்சயமாக உண்டு.
|
No comments:
Post a Comment