இந்த நான்காம் யுத்தியைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால், ஆண் - பெண் பழகுமுறையைக் கொஞ்சம் ஆராய்வோம். உங்களுக்குப் பிடித்த ஆணிடம் நீங்கள் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதைக் கவனியுங்களேன். அது உங்கள் மகன், மாணவன், சகா, காதலன், கணவன், கொழுந்தன், மாமனார், மச்சினர் என்று யாராக இருந்தாலும், உங்களுக்கு அவர்களைப் பிடித்திருந்தால், அவர்களைப் பார்த்த உடனே உங்களை அறியாமலேயே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அட, அவர்கள் ஆணாக இருக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை, உங்களுக்குப் பிடித்த பெண்ணை, அல்லது பிடித்த நாய் குட்டி, பூனை குட்டி, அல்லது பொம்மை அல்லது ஏதாவது பொருளைப் பார்த்ததுமே என்ன செய்கிறீர்கள்?
``அய்'' என்று உங்களையும் அறியாமல் உங்கள் முகம் மலர்ந்து ஒரு புன்முறுவல் பூத்துவிடுகிறீர்கள்தானே? உங்கள் மனதிற்குப் பிடித்தவர், பிடித்தது என்றதுமே உங்கள் மூளை குஷியாகிவிடுகிறது. உடனே குஷி ரசாயனங்களைச் சுரக்கிறது. அகத்தின் இந்த குஷி முகத்திலும் உடனே தெரிந்துவிட, முகம் இறுக்கம் இன்றி, தளர்ந்து, விரிந்து, கண்கள் மலர்ந்து பிரகாசிக்கின்றன.
இப்படி முகம்மலர்ந்து ஒருத்தி இருந்தால், இந்த புன்முறுவலை பார்த்த உடனே, எதிராளிக்கு என்ன தோன்றும்? ``ஆஹா, என்னைப் பார்த்தவுடன் இவளுக்கு இவ்வளவு சந்தோஷம் என்றால், இவளுக்கு என் மேல் ரொம்பவே ஆசை போலிருக்கிறதே! இவளுக்கு என் மேல் இவ்வளவு ஆசை ஏற்பட என்ன காரணம்? நான் ரொம்ப ஓஹோ என்று இருக்கிறேன் போல், அதனால்தான் என்னைக் கண்டதுமே இவளுக்கு இத்தனை பரவசம் ஏற்பட்டு விடுகிறதுபோல!'' என்று எதிராளிக்கு தன் சுய அபிப்ராயம் சட்டென அதிகமாகி விடுகிறது.
உங்களின் சிரித்த முகம் அவர்களைப் பற்றிய கூடுதல் சுய மதிப்பீட்டை ஏற்படுத்துவது ஒரு பக்கம் என்றால், உங்களின் இந்த முகத் தோற்றம், உங்களைப் பற்றிய சில அபிப்ராயங்களையும் அநிச்சையாக ஏற்படுத்தும். ``இத்தனை சிரித்த முகமாக இருக்கிறாளே, அப்படியானால் இவள் உண்மையிலேயே மனுஷி தான்'' என்பதுதான் முதல் அபிப்ராயம். என்ன, சிரிக்கிறதுக்கும், இதுக்கும் என்னங்க சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? ரிமெம்பர் சிநேகிதி, ஒட்டுமொத்த மிருக ஜாதியில் சிரிக்கவல்ல ஒரே மிருகம் மானிடர்தான். ஆக நீங்கள் புன்னகை பூப்பதே மனித வர்க்கம் என்பதன் மிக முக்கியமான அடையாளம்தான்.
இந்த முதல் அபிப்ராயம் போக, சிரித்த முகத்தைப் பார்த்தால், இன்னொரு அபிப்ராயமும் தானாக ஏற்படும், ``புன்னகை பூக்கிறாள், ஆக மனுஷிதான். மனுஷி மட்டும் அல்ல, சந்தோஷமானவளும்கூட...'' என்று உடனே உங்கள் பக்கம் அந்த நபரை வசீகரித்து இழுக்கும் தன்மையும் இந்தச் சிரிப்புக்கு உண்டு.
சிரிப்பு ஏன் வசீகரிக்கிறது என்கிறீர்களா? மனிதர்கள் மற்றவர்களின் உணர்ச்சி நிலைகளை மிகத் துரிதமாக கிரகித்துக் கொள்ளக்கூடியவர்கள். சந்தோஷம், சோகம், கோபம், மோகம், பயம், பதட்டம், ஆசை, நிராசை என்று எல்லா உணர்ச்சிகளுமே நம்மை ஆட்கொள்ள வல்லவைதான். அதனால்தான் திரையில் ஓடும் யாரோ ஒருவரது உருவத்தைப் பார்த்து, சிரிக்கிறோம், அழுகிறோம், கோபிக்கிறோம், மகிழ்கிறோம். வேறு யாருக்கோ ஏற்படும் உணர்வுகள்கூட நம்மைத் தொற்றிக்கொள்ள வல்லவை. இப்படி உணர்ச்சிகளுக்கு தொற்றும் தன்மை இருப்பதினால், மிக கவனமாக நாம் மனிதர்களை பரிசீலினை செய்கிறோம். யாரிடமிருந்து நமக்கு சந்தோஷ உணர்ச்சி தொற்றிக்கொள்கிறதோ, அவர்களை நாம் விரும்பிவிடுகிறோம். அதனால்தான், சினிமா ஹீரோ, ஹீரோயின், காமெடி நடிகர்களுக்கு இத்தனை மவுசு ஏற்பட்டிருக்கின்றது.
இதுவே யாராவது நம்மில் சோகமான, குரோதமான, மோசமான உணர்வுகளை தொற்ற வைத்தால், அவர்களோடு இருக்க நமக்குப் பிடிப்பதில்லை. சதா ஒப்பாரி வைக்கும் பெண், சதா மூஞ்சை தூக்கி வைத்திருக்கும் ஆண், சதா நை நை என்கிற திரிகிற பெரிசு...
இவர்களைக் கண்டதும், நாம் டபக்கென தப்பி ஓடிவிட முயல்வதே இந்த நெகடிவ் உணர்ச்சி தொற்றலில் இருந்து தப்பிக்கத்தான்!
ஆக, பாஸிடிவ் உணர்ச்சி வெளிப்படுத்தும் ஆட்களை விரும்பி நாடுவது, நெகடிவ் உணர்ச்சி ஆசாமிகளைக் கண்டால் ஒதுங்கி விலகுவது, இதுதான் மனித நடைமுறை. இப்போது சொல்லுங்கள். சிரித்த முகமாக இருக்கும் பெண்ணைப் பார்த்தால், அவளோடு நேரம் செலவிடத் தோன்றும்தானே!
சிரிப்பு பொதுவாக எல்லோரையுமே ஈர்க்கும். அழும் குழந்தையைவிட, சிரித்த முக குழந்தையைக் கொஞ்சத் தான் எல்லோரும் விரும்புவார்கள். சிடுமூஞ்சி பெண்களைவிட சிரித்த முக பெண்களைத் தேர்ந்தெடுத்து, மாடலாக்கினால்தான் வியாபாரம் ஓடும். ஆக சிரித்த முகம் கூடுதல் வசீகரம், இதுதான் பொதுவிதி.
இந்த பொதுவிதி போக, பெண்ணின் சிரிப்புக்கு இன்னொரு முக்கியமான பணி உண்டு. பெண் சிரித்தால், ``அருகே வா'' என்கிற அழைப்பு மணி கேட்டுவிடும் சில ஆண்களுக்கு. இவளின் வெறும் இந்த புன்முறுவலாலே, உடனே அவள் அருகில் வந்துவிடும் உந்துதல் ஏற்பட்டுவிடும் ஆணுக்கு.
பெண்ணின் சிரிப்பு, ஆணுக்கு அத்தனை போதை ஏற்படுத்தும் தன்மை உண்டு.
``உன் ஒரு சிரிப்புக்காக ஊரையே தரலாமே'' என்கிற சினிமா வசனமாகட்டும், ``ஏன் உம்முனு இருக்கே, சிரிச்சா முத்தா உதிர்ந்திடும்'' என்று கெஞ்சும் காதலனாகட்டும், ``வீட்டுக்குப் போனா அவ மூஞ்சை தூக்கி வெச்சிருப்பா, பார்க்கும் போதே பத்திக்கிட்டு வரும்' என்று புகாரிடும் கணவர்களாகட்டும், எல்லாமே பெண்ணின் புன்னகை எத்தனை வலிமையான ஆயுதம் என்பதைச் சொல்லும் உதாரணங்களே.
இவ்வளவு வலிமையான ஆயுதம் என்பதினால் தான், ``பொம்பளை சிரிச்சாப் போச்சு!'' என்பது மாதிரி கட்டுப்பாடுகளை ஆணாதிக்க சமுதாயங்கள் முக்கிய கோட்பாடாகவே முன்வைக்கின்றன. ``இவப் பாட்டுக்கு சிரிச்சு வெச்சு, எவனாவது இவ பின்னாடியே வந்து தொலைச்சான்னா, எப்படிச் சமாளிக்கிறது?'' என்று பெண்களை அடக்கி ஆளும் போக்கும், அவர்களை கெடுபிடியாய் நடத்தும் போக்கும் இதனாலேயே ஏற்பட்டன. யார் என்ன கட்டுப்படுத்தினாலும், பெண்கள் தொடர்ந்து இயற்கை ஏவிய வழிகளில் இயங்கிக்கொண்டேதான் இருந்தார்கள் என்பது வேறு விஷயம்.
சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். உங்கள் ஆணை ஹேண்டில் செய்ய நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது, அவனைப் பார்த்து புன்னகை பூத்திடுங்கள். உங்களுக்கு அவனை உண்மையிலேயே பிடித்திருந்தால், நீங்கள் முயலாமலே தானாகவே உங்கள் முகம் புன்னகையில் மலர்ந்து விடுமே. முசுடு பாஸ், மோசமான கணவன், மூடியான மகன் இவர்களிடம் வலுக்கட்டாயமாகவேணும், ஒரு புன்னகையைப் பொழிந்து வையுங்கள். உடனே, உங்களை அவர்கள் நடத்தும் விதமே மாறிவிடும்.
இதே சிரிப்பென்னும் அஸ்திரத்திற்கு இன்னொரு ஆபத்தான முனையும் உண்டு. பெண்களைக் கவருகிறேன் பேர்வழி என்று எசகு பிசகாக உளறிக்கொட்டும் ரோட்டோர ரோமியோ, ஜொள்ளு விட்டே பிராணனை வாங்கும் சகா, மேலதிகாரி என்ற மிதப்பில் பெண்களிடம் தவறாக நடக்க முயலும் சீப்பான ஆசாமிகள், பெண்ணைப் பார்த்ததுமே தன் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லிப் பீற்றிக்கொண்டே தீருவது என்று குறியாய் இருக்கும் மொக்கைகள்... இப்படிப்பட்ட ஆசாமியாக இருந்தால் மறந்தும்கூட சிரித்து வைத்து விடாதீர்கள். அப்புறம் அவ்வளவுதான்... ஏகத்துக்கு குஷியாகி ஓவராய் வழிந்து கொட்டி உங்களைத் திணறடித்து விடுவார்கள். ``ஏன்யா உனக்கு இந்த வேண்டாத வேலை?'' என்று யாராவது கேட்டால், ``நான் சும்மாதான் இருந்தேன். அவதான் என்னைப் பார்த்துச் சிரிச்சா, அதனாலதான் பேசினேன்'' என்பார்கள்.
நீங்கள் என்னதான் ``பாவம் பார்த்துச் சிரித்தேன், சும்மா சிரிச்சேன், வேறு யாரையோ பார்த்துச் சிரித்தேன்'' என்று சொல்லி நழுவ முயன்றாலும், அநாவசிய வம்பில் மாட்டிக்கொள்ளக் கூடும்.
அதனால் அஸ்திரம் நம்பர் நாலான இந்த சிரிப்பு, ரொம்பவே கூரானது என்பதை உணர்ந்து, அதை பிரயோகிக்கப் பழகுவதே உங்களுக்கான இந்த வார ஹோம் ஒர்க். இந்த அஸ்திரத்தைத் திறமையாக உபயோகிக்க நீங்கள் பழகிவிட்டீர்கள் என்றால், அடுத்த பாடத்தைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயார்.
|
No comments:
Post a Comment