கூடி வாழ்வதற்கும், பொதுநலம் பேணுவதற்கு நாம் பறவைகளை உதாரணமாகக் கூறுகிறோம். ஆனால் சில பறவைகளிடம் அசாதாரணமான ஏமாற்றுக் குணம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.கூட்டமாக வாழும் இயல்புடைய பறவைகள், எதிரிகள் வந்தால் எச்சரிக்கைக் குரல் எழுப்பி சகாக்களை உஷார்ப்படுத்தும். சில பறவைகளோ பொய்யான அபாய எச்சரிக்கைக் குரலை எழுப்பித் தம் சக பறவைகளை விரட்டி ஓடி ஒளியச் செய்கின்றன. அதன் மூலம், தமது சுயநலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றன. அமெரிக்கா நியூயோர்க் விலங்கியல் சங்கத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் மன். அவர், தென் அமெரிக்காவின் பெரு நாட்டு அமேசான் காடுகளில் பல இனப் பறவைகள் கலந்து கூட்டமாக வாழும் முறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வினோதமான நிகழ்ச்சியை சார்லஸ் கண்டார். அம்மாதிரியான கலப்புக் கூட்டங்களில், வழக்கமாக ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பறவைகளே காவல் பணியை மேற்கொள்ளும். அக்கம்பக்கத்தில் கழுகு போன்ற எதிரிகளின் நடமாட்டம் தெரிந்தால், அவை ஒரு குறிப்பிட்ட வகையான அபாய ஒலியை எழுப்பும். அதைக் கேட்டதும் மற்ற பறவைகள் சட்டென்று தலைமறைவாகிவிடும்.
இதுபோல காவல் காப்பதற்கு, `காவல் பறவைகளுக்கு’ மற்ற பறவைகள் `கைமாறு’ செய்கின்றன. அதாவது, தாவரங்களில் இருந்து பூச்சிகளை உதிர்த்துவிட்டு, அவற்றுக்கு நிறைய இரை கிடைக்கும்படி செய்கின்றன. இப்படி இரு தரப்புப் பறவைகளும் பலனடைகின்றன. காட்டின் வெவ்வேறு பகுதிகளில் காவல் பணியாற்றும் இரண்டு இனப் பறவைகளை சார்லஸ் ஆராய்ந்தார். `டானேஜர்’ என்ற பறவைகளும், உச்சாணிக் கொமபுகளில் நடமாடும் `ஆன்ட்ஷ்ரைக்’ என்ற பறவைகளும் தாழ்வான கிளைகளில் காவல் பணியாற்றுவது அவருக்குத் தெரிந்தது. காவல் பறவைகள் இரையெடுக்கும்போது மற்ற பறவைகளும் போட்டிக்கு வந்துவிடுகின்றன. பூச்சிகளைப் பிடிக்கும்போது துரத்தல்களும், சண்டைகளும் சகஜம். அதுபோன்ற போட்டிக் குழப்பங்களின்போது இரண்டு காவல் பறவைகளும் அபாய அறிவிப்புக் குரலை எழுப்பியதைக் கண்டு சார்லஸ் ஆச்சரியப்பட்டார். மற்ற பறவைகளின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவை போலியான அபாய அறிவிப்பு ஒலியை எழுப்புகின்றனவோ என்று அவர் சந்தேகப்பட்டார். ஏனெனில் அப்போது அக்கம்பக்கத்தில் எதிரிகள் யாரும் கண்ணில் படவில்லை. மேலும் காவல் பறவை தன்னை மறைத்துக்கொள்ளவும் முயலவில்லை. காவல் பறவைகள் ஏன் இப்படி பொய்யான ஒலியை எழுப்பி ஏமாற்ற வேண்டும்? மற்ற பறவைகளை பயமுறுத்தி ஓட்டி விடுவதன் மூலம் தாம் நிறைய இரையைப் பிடிப்பதுதான் அவற்றின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். தொடர்ந்து அவர் பறவைகளைக் கண்காணித்து வந்தார். காவல் பறவைகள் தமது குஞ்சுகளுக்காக அதிக உணவு தேட வேண்டிய தேவை ஏற்படும் போது, அவை போலியான அபாய அறிவிப்பு ஒலியை எழுப்புவது அதிகமாகிறது. ஆனால் பொய்யோ, மெய்யோ, சத்தம் கேட்டதும் மற்ற பறவைகள் கொஞ்சம் கூட `ரிஸ்க்’ எடுக்காமல் உடனே ஒளிந்து கொள்வதையும் சார்லஸ் மன் கண்டுபிடித்தார். |
No comments:
Post a Comment