Thursday, February 10, 2011

இஸ்லாமிய திருமணம்



(எங்கள் இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்: உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் 1:4,5) 
அல்லாஹ் அறிவுறுத்துகிறான்:
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக நாம் ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகப் படைத்தோம். (அல்குர்ஆன் 51:49,)

மணம் முடித்து மகிழுங்கள்: 
ஓ மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், இவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்: ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைத் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தத்தமது உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள்) மேலும் (உங்கள்) இரத்த பந்தங்களையும் ஆதரியுங்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிக்கிறான். (அல்குர்ஆன் 4:1) 
(இது எல்லாத் திருமண (பிரசங்கம்) குத்பாவிலும் ஒதுப்படும் இறைவசனமாகும்) 
உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையற்ற நற்குணமுள்ள) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32) 
ரசூல் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்: 
‘திருமணம்’ எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. அறிவிப்பு : அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல் : புகாரி) 
எங்களைத் திருமணம் புரியும்படி கட்டளையிட்டதுடன், திருமணம் புரியாதிருப்போரை கடுமையாக ரசூல் (ஸல்) கண்டித்தார்கள். அறிவிப்பு அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : முஸ்னத் அஹமத், இப்னு ஹிப்பான். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
‘எவருக்கு திருமணப் பருவம் வந்துவிட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களுக்கும், வெட்க ஸ்தலத்திற்கும் அரணாகும். எவருக்குத் திருமணம் செய்ய வசதிப்படவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்.’ அறிவிப்பு : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆதாரங்கள் : புகாரி: 1v3, முஸ்லிம்: 2v3231-35, அபூதாவூத், நஸயீ, தாரமி, திர்மிதி, இப்னுமாஜா,இப்னு ஜாருத், பைஹகீ, 
குறிப்பு : திருமணத்தில் மஹர்தருதல், வலீமாவிருந்து, தனது மனைவிக்குரிய உணவு, உடை, இருப்பிடத்திற்கான செலவுகள், மணமகன் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். மணமகளுக்கு இந்த வசதிகளைப் பற்றி பொறுப்பில்லை. எனவே இது மணமகனுக்கு மட்டும் கூறப்படும் நபிமொழியாகும் 
நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்: 
‘மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.’ அறிவிப்பு : அபூஹூரைரா (ரலி), ஆதாரங்கள் : திர்மிதி, ஹாகிம், முஸ்னத் அஹ்மத். 
மணமக்களின் தகுதிகள் 
அல்லாஹ் வரையறுக்கின்றான்: (அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய (முஃமினான) ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளும் வரை (முஃமினான பெண்களை) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணைவைப்பவன் உங்களுக்கு கவர்ச்சியூட்டுபவனாக இருந்தபோதிலும், ஒரு முஃமினான அடிமை அவனை விட மேலானவன். (அல்குர்ஆன் 2:221) 
‘விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யமாட்டான், விபச்சாரி விபச்சாரணையோ அல்லத இணைவைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு எவரையும்) திருமணம் செய்ய மாட்டாள். இது இறை நம்பிக்கையாளர்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.’ (அல்குர்ஆன் 24:3) 
‘பெண்களை அவர்களின் அழகுக்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம், அவர்களின் செல்வத்திற்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் செல்வம் அவர்களை தடுமாறி தவற செய்துவிடலாம், அவர்களின் நல்லொழுக்கத்திற்காக மணம் முடியுங்கள். நல்லொழுக்கமுள்ள அழகற்ற அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள) அழகிய பெண்ணை விட மேலானவள்’ அறிவிப்பு: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி), ஆதாரங்கள்: இப்னு ஹிப்பான், முஸ்னத் அஹ்மத். 
அன்பு செலுத்தும்;, அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் (பாரம்பரிய) பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள். உலக மக்களுக்கு மத்தியில் (நீங்கள் அதிகமாக இருப்பது கண்டு) நான் பெருமிதம் அடைவேன் என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: மஃகலு பின் யஸார் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், நஸயீ, முஸ்னத் அஹ்மத். 
பெண் பார்த்து நிச்சயித்து மணம் முடியுங்கள் 
நபித்தோழர் முகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த ரசூல் (ஸல்), நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப்பகன்றார்கள்.’ ஆதாரங்கள்: நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத். 
ஒரு நபித்தோழர் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்துதான் ஒரு மதீனத்து (அன்சார்) பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! (பின் விவகாரமாகக் கூடாது) எனக் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத். 
‘ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க பேசிக் கொண்டிருக்கையில் மற்றொருவர் அப்பெண்ணை மண முடிக்க (நிச்சயம்) பேசக்கூடாது’ என நபி (ஸல்) அவர்களை வலியுறுத்தினார்கள். அறிவிப்பு: அபூஹீரைரா, இப்னு அமர், உக்பா இப்னு அம்மார். ஸம்ரா பின் ஜூன்தும் (ரலி அன்ஹூம்) ஆதாரங்கள்: ஸஹீஃபா ஹம்மாம், முஅத்தா மாலிக், புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரமி, திர்மிதி, இப்னுமாஜா.. 
ரசூல் (ஸல்) அவர்கள் மணமுடித்த ஒரே கன்னிப் பெண்ணான ஆயிஷா (ரலி) அவர்களை அல்லாஹ் கனவில் இருமுறைக் காட்டி உங்களது மனைவியென பிரகடணப்படுத்தினான். அறிவிப்பு: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி. 
குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்வில் மணமுடித்த அனைத்து மனைவிகளையும் நேரில் பார்த்து அவர்களது முழு சம்மதத்துடனே மணமுடித்தார்கள் என்பது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். 
நபி (ஸல்) அவர்களின் அருமை மகள் பாத்திமா (ரலி) அவர்களை நேரில் கண்டு பின் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு ஃபாத்திமா (ரலி) அவர்களை மணம் முடித்து தரும்படி அலீ (ரலி) அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதனை ஏற்று நபி (ஸல்) அவர்களும் மணம் முடித்து வைத்தார்கள். ஆதாரம்: இப்னு ஸஃது 
ஒரு திருமணம் முழுமை பெற தேவையானவைகள் 
மணமகன், மணமகளின்றி 
  1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலீ)
  2. இருநீதமுள்ள சாட்சிகள்
  3. மணமகளின் முழுமையான சம்மதம்
  4. மணமகளின் உரிமையான மஹர் தொகை
நபி (ஸல்) கூறினார்கள்: எந்த ஒரு பெண் தன் பொறுப்பாளர் (வலீ) அனுமதியின்றி திருமண சம்மதம் தெறிவிக்கிறாளோ அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது. அப்பெண்ணுடன் உடலுறவு கொள்வதை மஹர் தொகை அனுமதிக்கிறது. எவளொருவளுக்கு வலீயில்லையோ அவளுக்கு அரசர் வலீயாவார். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி. 
நபி (ஸல்) கூறினார்கள்: ஒரு (மணப்) பெண்ணை மற்றொரு பெண் (வலீயாக இருந்து) மணம் செய்விக்கக் கூடாது. மணப்பெண் தன்னையே (வலீயின்றி) மணம் செய்தல் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: இப்னுமாஜா, தாரகுத்னி, பைஹகி 
மணப்பெண்ணின் முழு சம்மதம் தேவை 
ரசூல் (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்:’அயிம்மா’ (விதவை, விவாக முறிவுப் பெற்ற) பெண்களை அவர்களது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள், பாகிரா (கன்னிப்) பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணத்தால் தன் எண்ணத்தைக்) தெளிவாகக் கூற வெட்கப்படுவாளே! என சிலர் வினவினார்கள். 
அதற்கு ரசூல் (ஸல்);: ‘அவளது மௌனமே சம்மதமாகும்’ என்றார்கள்.அறிவிப்பு: ஆயிஷா, இப்னு அப்பாஸ், அபூஹூரைரா (ரலி அன்ஹூம்), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத் 
அல்லாஹ் அறிவுறுத்துகிறான்: ‘இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.’ (அல்குர்ஆன் 4:19) 
நபித்தோழி கன்சா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது தந்தை கிதாம் (ரலி) அவர்கள் எனது (முழு சம்மதமின்றி) எனக்குப் பிடிக்காத இடத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். ஆதாரங்கள்: முஅத்தா மாலிகி, மபகாரி, அபூதாவூத், நஸயீ, தாரமி, 
இதற்குப் பின் கன்சா (ரலி) அவர்கள் தனது முழு சம்மத்ததுடன் நபித்தோழர் அபூலுபாமா (ரலி) அவர்களை மணமுடித்ததாக அப்துல் ரஹ்மான் பின் யஜீத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மஹர் கொடுத்து மணம் முடியுங்கள் 
அல்லாஹ் ஆணையிடுகின்றான்: நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4) 
மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள். (அல்குர்ஆன் 4:24,25) 
மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:20) 
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் பேரித்தம் பழமளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு மதீனத்து பெண்ணை மண முடித்தார்கள். அறிவிப்பு: அனஸ் பின் மாலிக் (ரலி). ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி.. 
ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி 
ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த ரசூல் (ஸல்) அவர்கள் ‘உனக்கு எதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னின்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்’ என்றார்கள். அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி 
போர் கைதியாக பிடிக்கப்பட்ட ஸஃபிய்யா என்ற யூதப் பெண்ணை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை போர் கைதியிலிருந்து விடுவித்தலே அவருக்கான மஹராக இருந்தது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, திர்மிதி.. 
மஹர்-திருமணக்கொடை-மணப்பெண்ணின் தனி உரிமை. அதில் தலையிடவோ, அதற்கு வரையறையிடவோ எவருக்கும் உரிமையில்லை. ஒரு மணப்பெண் ஒரு பொற்குவியலைக் கூட தனக்கு மஹராக கேட்க உரிமையுண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 4:20) 
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! அறிவிப்பு: அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் (ரலி-அன்கும்), ஆதாரங்கள்: புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா. 
திருமணத்தின் குறிக்கோள் 
திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாக பகிர்ந்து கொள்வது இஸ்லாமிய திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள். அறிவிப்பு: உக்பா பின் ஆமிர் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ 
குறிப்பு: பசிக்கு உணவு, தாகத்திற்கு நீர், உடல் தேவையான மற்றொரு துணை தேவை என்பது இயற்கையின் நீதியாகும். எனவே பசி, தாகம், மோகத்தை அடக்குவது இயற்கையின் நியதிக்கு விரோதமானதாகும். மேகத்தை அடக்கி மோட்சமடையலாமென வாதிடுவோர், அவர்களது பெற்றோர் அப்படிப்பட்ட மோட்சத்தை நாடியிருந்தால் இவர் பிறந்திருப்பாரா? என்பதை சிந்திக்கவும். 
இஸ்லாம், மோகத்தை நியாயமான (திருமண) வழியில் தீர்த்து அத்துடனே மோட்சத்தை அடைய முடியும் என்பதை கூறும் ஒரே மார்க்கமாகும். நியாயமான வழியில் தீர்க்காமல் மிருகங்களைப் போல தாறுமாறாக வாழ்வதால் இன்று எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் உருவாகியுள்ளதை அறியலாம். இன்று எல்லோரும் உங்கள் துணைவர்ஃதுணைவியர்களிடம் உண்மையாளர்களாக இருங்கள் (Be Faithful to your Spouse) எனக் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருமணத்தின் குறிக்கோளாக இஸ்லாம் இதனை வகுத்துள்ளது. 
தடுக்கப்பட்ட திருமண பந்தங்கள் 
‘ஷிஹார்’ திருமணம்: ஒருவர் தனது மகளையோ அல்லது சகோதரியையோ மற்றொருவருக்கு மணம் பேசி அவரது மகளையோ அல்லது சகோதரியையோ தனக்கு மணம் பேசி எவ்வித திருமணக்கொடை (மஹ்ரை)யும் குறிப்பிடாமல் திருமணம் செய்வதாகும். (விளக்கம்: அபூதாவூத் எண் 2069) 
நிக்காஹ் குத்பா:- 
இன்னல் ஹம்த லில்லாஹி நஸ்தயீனுஹூ வநஸ்தஃ பிருஹூ வனவூது பில்லாஹி மின்ஷூருரி, அன்புஸினா, வமின் ஐஷஆதி அஃமாலி னமன்யஹ்தில்லாஹூ ஃபலாமுழில்லஹூ வமனயுழ்லில் ஃபலா ஹாதியலஹூ வ அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்;லாஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹ் யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் ஹக்க துகாதிஹி வலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன், யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்தகுல்லாஹ் ஹல்லதீ தஸா அலூன பிஹி வர்அர்ஹாம் இன்னல்லாஹ கான அலைக்கும் ரகீபா: யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் வகூலூ கவ்லன், ஸதீதா யுஸ்ஸிஹ் லகும் அஃமாலகும் வயஃபிர் லகும் துனூபக்கும் வமன்யுதியில்லாஹ வரசூலஹூ ஃபகத் ஃபாஜ ஃபவ்ஜன் அளீமா என்று நபி (ஸல்) கற்றுத் தந்ததாக இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதி, அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. 
குத்பாவின் பொருள் : நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன். 
ஈமான் கொண்ட விசுவாசிகளே இறைவனை முழுமையாக அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிமாகயன்றி மரணிக்க வேண்டாம். (அல்குர்ஆன் 3:102) 
ஈமான் கொண்ட விசுவாசிகளே நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்: அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமகுரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்: மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக் அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1) 
ஈமான் கொண்ட விசுசாவிகளே சொல்வதை தெளிவாகவும் தீர்கமாகவும் சொல்லுங்கள். அல்லாஹ் உங்கள் வணக்கங்களை சீர்;செய்வான், உங்களது பாவங்களை மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்ம் கட்டுபட்டு நடக்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டார்கள். (அல்குர்ஆன் 33: 70,71) 
இல்வாழ்க்கை இன்பகரமானது 
அல்லாஹ் அறிவிக்கின்றான்: நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும்: உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளனதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21) 
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்.(அல்குர்ஆன் 2:187) 
உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களை அனுபவியுங்கள். (அல்குர்ஆன் 2:223) 
பெண்கள் ஆண்மக்கள் பொன்னிலும், வெள்ளியிலுமான பொற்குவியல்கள்: அடையாளமிடப்பட்ட (உயர்ந்த குதிரைகள், ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகள், சாகுபடி நிலங்கள். ஆகியவற்றின் மீதுள்ள இச்சைகள் மனிதர்களுக்கு அழகாகப்பட்டுள்ளது. இவையெல்லாம் இவ்வுலக வாழ்வின் சுகப் பொருட்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடமிருக்கிறது. (அல்குர்ஆன் 3:14) 
நபி (ஸல்) தெளிவாக்கினார்கள்: இவ்வுலகம் இன்பகரமானது, உலக இன்பங்களில் மிகவும் சிறப்பானது நல்ல (ஒழுக்கமான) மனைவியை அடைவதாகும். அறிவிப்பு: இப்னு உமர் (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத். 
நற்குணமுள்ளவர்கள் இறை நம்பிக்கையில் (ஈமானில்) முழுமையானவர்கள். தனது மனைவியிடம் நல்ல முறையில் நடப்பவர்கள் உண்மையில் நற்குணமுள்ளவர்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: திர்மிதி, முஸ்னத் அஹ்மத். 
கணவனின் கடமைகள் 
மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் உண்ணும்போது அவளுக்கு உணவளிப்பதும், நீர் அணியும் போது அவளையும் அணியச் செய்வதும், அவளது முகத்தில் அறையாதிருப்பதும், அவளை (தீய சொற்களால்) இழிவு படுத்தாதிருப்பதும், வீட்டில் தவிர (வெளியிடங்களில்) அவளைக் கண்டிக்காதிருப்பதும் (கணவனின் கடமை) என்று நபி (ஸல்) அறிவுறுத்தினார்கள். அறிவிப்பு: முஆவியா (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், இப்னுமாஜர், அஹ்மத். 
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ (உன் மனைவிக்கு) செலவு செய்த எந்த செலவுக்கும், ஏன்? உன் மனைவிக்கு அன்புடன் நீர் ஊட்டிவிட்ட உணவுக்கும் அல்லாஹ் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பு: ஸஃது இப்னு அபிவக்காஸ் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத் 
ஒருவன் தனது குடும்பத்திற்காக செய்யும் அனைத்து செலவுகளும் அல்லாஹ்விடம் (நன்மைகளாக) கணக்கிடப்படுகிறது. அவை அவன் செய்யும் தானந் தர்மமாகிறது. அறிவிப்பு: இப்னு மஸ்ஊத் அல்-பத்ரி (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத். 
ஒருவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி தனது செல்வத்தை அடிமையை விடுவிப்பதற்காகவும், ஏழைகளுக்கு தர்மமாகவும், அனாதைகளுக்கு உதவியாகவும், தனது மனைவி, மக்களை செம்மையாக வைத்திருக்கவும் செலவு செய்கிறார். இவற்றில் தனது மனைவி மக்களுக்கு செலவிட்டதே அனைத்து செயல்களிலும் மேலானதாகும். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி)
ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத் 
பெண்கள் வளைந்த எலும்பால் படைக்கப்பட்டவர்கள் அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய் அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டுவிட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத், புகாரி. 
ஒரு இறைநம்பிக்கையுடைய ஆண், இறைநம்பிக்கையுடைய தன் மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால், அவன் விரும்பக்கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத். 
பெண்களை நல்லமுறையில் நடத்துங்கள், அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமை இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: உம்மு ஸல்மா (ரலி), ஆதாரங்கள்: திர்மிதி, இப்னுமாஜா. 
தவறு செய்யும் மனைவியை வீட்டிலன்றி (வெளியிடங்களில் பலரறிய) கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: முஆவியத்துல் ஷீரி (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், நஸயீ, இப்னு ஹிப்பான். 
மனைவியின் கடமைகள் 
அல்லாஹ் கூறுகிறான்: நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34) 
ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக) தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டால், ‘நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்’ என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் நபின்றார்கள். அறிவிப்பு: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆதாரங்கள்: தப்ரானி, முஸ்னத் அஹ்மத். 
கணவன் தாம்பத்யத்திற்காக மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், வானவர்கள் விடியும் வரை அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத். 
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: கணவன் ஊரிலிருக்கும் போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (ரமழான் அல்லாத நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், புகாரி, அபூதாவூத், தாரமி, 
ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பு: உம்மு ஸல்மா (ரலி), ஆதாரங்கள்: திர்மிதி, இப்னுமாஜா 
அனைவருக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கை 
அல்லாஹ் கூறுகிறான்:(மனைவிகளாகிய) அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள், நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையாக இருப்பீராக! ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும். அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திடலாம். (அல்குர்ஆன் 4:19) 
அழகிய அறிவுரைகள்:- அல்லாஹ் அறிவிக்கிறான் செல்வமும், பிள்ளைகளும், இவ்வுலக வாழ்வின் அலங்காரங்களாகும், என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியவை நற்கருமங்களே! உம்முடைய இறைவனிடம் நன்மை பயப்பனவாகவும் (அவனிடம்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18:46) 
ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென நான் கட்டளையிட நாடியிருந்தால் மனைவி கணவனுக்கு தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன். (ஆனால் அதுவும் தவறே! எனவே அதனை அனுமதிக்கவில்லை) என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, பைஹகி 
வலிமா விருந்து 
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதினாவில் பெரும் செல்வந்தராக இருந்த அப்துர்ரஹ்மான்பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் ஒரு அன்சாரி பெண்ணை மணம் முடித்தார்கள். அத்திருமணத்திற்கு நபி (ஸல்) அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. மறுநாள் காலை அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தொழுகைக்கு வந்தார்கள். அவரது உடையில் மஞ்சள் நிற வாசனை பொருளின் கறை இருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் என்ன விசேஷம்? என வினவினார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்தது. தான் ஒரு மதீனத்துப் (அன்சாரிப்) பெண்ணை மணம் முடித்தேன் என பதிலளித்தார்கள். 
குறிப்பு: இந்த ஹதீஸில் வரும் ‘சுஃப்ரத்’ எனும் வார்த்தைக்கு ‘மஞ்சள் நிறம்’, ‘சந்தன நிறம்’ என்று மொழி பெயர்க்கப்படுகிறது. ஆயினும் இது ஒரு வாசனை பொருளின் நிறமே தவிர மளிகை பொருளான மஞ்சளோ, சந்தனமோ அல்ல என்பதும், பல நிறத்தில் இருக்கும் வாசனைப் பொருள்களைப் போல் இந்த நபித்தோழர் இங்கு மஞ்சள் நிற வாசனைப் பொருளை பயன்படுத்தி உள்ளார் என்பதை தவிர மஞ்சள் அல்லது சந்தனமோ (புனிதமானதாக) பயன்படுத்த இது ஆதாரம் அல்ல என்பதும், பொதுவாக வாசனைப் பொருட்கள் பயன்படுத்துவதையே இது குறிக்கிறது என்பதைக் கவனிக்கவும். 
ரசூல் (ஸல்) எவ்வளவு மஹர் கொடுத்தாய்? என வினவினார்கள். இப்னு அவஃப் (ரலி) ஒரு பேரித்தம் பழமளவு தங்கம்! என பதிலளித்தார்கள்.ரசூல் (ஸல்) ஒரு ஆட்டையாவது அறுத்து வலீமா விருந்து வைப்பீராக என்றார்கள். அறிவிப்பு: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: முஅத்தா மாலிகி, புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.. 
கவனிக்க: சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் நபி தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளை, உபதேசங்களையும் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்களின் கவனத்;திற்கு கொண்டு வந்தனர். ஆனால் அன்று மதீனாவில் பெறும் செல்வந்தராக திகழ்ந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தனது திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை என நபி (ஸல்) அவர்களும் கேட்கவில்லை. காரணம் பெரும் படோபத்துடன் பலரை அழைத்து பணத்தை விரயம் செய்து திருமணத்தை நடத்துவது இஸ்லாமிய நெறி அல்ல என நபி (ஸல்) கற்று தந்திருந்தார்கள். அதன்படி சிக்கனமாக சிறப்பாக அன்று வாழ்ந்த பெரும்செல்வந்தர் அப்துர்ரஹ்மான் பின அவ்ஃப் (ரலி) தனது திருமணத்தை முடித்தார்கள். அதனை சரி கண்ட ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டையாவது அறுத்து வலீமா (விருந்து) தர ஆணையிட்டார்கள். (ஆடம்பரமாக திருமணம் நடத்துபவர்கள் இதனை கவனிக்கவும்). 
நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்:’நீங்கள் வலீமா வீருந்துக்கு அழைக்கபடுவீர்களேயானால், அவ்வழைப்பை ஏற்றுச் சிறப்பளியுங்கள்.’ அறிவிப்பு: முஅத்தா மாலிக், ஆதாரம்: புகாரி 
நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்: எந்த ‘வலீமா’ விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவராவர். அறிவிப்பு: அபூஹூரைரா, இப்னு அப்பாஸ் (ரலி-அன்ஹூம்) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஅக்தா மாலிகி. 
நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒரு சிலவற்றிக்கு இரு முத்துக்கள் அளவுள்ள பார்லியில் தயாரிக்கப்பட்டதை வலீமா விருந்தாக கொடுத்தார்கள். (1 முத்து ‘ 750 கிராம் ஆகும்) அறிவிப்பவர்: ஸஃபிய்யா பின்து ஷைபா (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத். 
நபி (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம். 
மணமகள் வீட்டு சீதனம் 
நபி (ஸல்) அவர்களுக்கு ஜைனப், ருகையா, உம்முகுல்தும், ஃபாத்திமா (ரலி) என்ற நான்கு பெண் மக்களிருந்தனர். இவர்களில் ருகையா அவர்களை உஸ்மான் (ரலி) முதலில் மணமுடித்தர்கள். பத்ருபோரின் போது ருகையா (ரலி) அவர்கள் நோயால் இறந்து விடவே, நபி (ஸல்) அவர்களது தனது அடுத்த மகளான உம்முகுல்தும் (ரலி) அவர்களை மணமுடித்து வைத்தார்கள். இவ்விரு திருமணங்களிலும் செல்வந்தரான உஸ்மான் (ரலி) அவர்களை மருமகனாகப் பெற்ற நபி (ஸல்) அவர்கள் எந்த சீர்வரிசைகளையும், சீதனங்களையும் தனது மக்களுடன் மாப்பிள்ளை உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டுக்கு அனுப்பியதாக, அதிகாரபூர்வமாக ஆதாரங்களைப் பார்க்க முடியவில்லை. 
குறிப்பு: ஆனால் சீர்வரிசைகள் வரதட்சனை வாங்க இஸ்லாத்தில் அறவே இடமில்லை. 
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ) 
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير . 
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது 
… பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்… 
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. 
(பரகத்) என்னும் அரபி சொல்லுக்கு ‘புலனுக்கெட்டாத இறை அருள்’ என்பது பொருள். 
குறிப்பு: மேற்கண்ட இந்த துவாவை நாம் அனைவரும் மணமக்களுக்காக ஒதுவது தான் நபிவழி. சுன்னத் அதற்கு மாறாக, நாம் வேறுவிதத்தில் வாழ்த்துவது, மேற்கண்ட துவாவை புறக்கணிப்பதுடன் ஒரு நபி வழியை ஒரு சுன்னத்தையும் புறக்கணித்துவிடும் விதமாக, நம்மை ஒரு நூதனத்தை நடைமுறை படுத்தியவராக்கி விடும் என்பதை கவனிக்கவும். 
முஹம்மது நபி (ஸல்) கூறியுள்ளார்கள்: வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை (குர்ஆன்) நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை (சுன்னத்) காரியங்களில் கெட்டது பித்அத்துக்கள் (இஸ்லாம் மார்கத்தில் நபிவழிக்கு மாற்றமாக சேர்க்கப்பட்ட அதிகமாக்கப்பட்ட புதுமையானவைகள்) பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே, வழிகேடுகள் நரகத்தில் (கொண்டு) சேர்க்கும். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம்: புகாரி. 
குறிப்பு: ஆதலால் நாம் மேற்படி துவாவை ஒதி நபி வழிபடி செயல்படுவது நம்மை நரகத்திலிருந்து காக்கும் ஒரு சிலரிடம் மட்டும் நடைமுறையில் உள்ள ஸஅல்லிஃப் பைனஹூமா போன்ற துவாவை ஒதுவது அதற்கு நபி (ஸல்) கூறாத விதத்தில் ஆமீன், ஆமீன் என்று முழுங்குவதைனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 
இந்த துவா ஒதும் போது அலி, ஃபாத்திமா என்ற பெயர், வரும்போது பெண்ணுக்கு பெண்ணுடைய உறவினர் (தாலி)கருகமணி கட்டுவது போன்றவை ஆதாரமற்ற மூட நம்பிக்கையாகும். அதை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தில் நிக்காஹ்விலோ, நிக்காஹாவிற்கு பிறகோ தன் மனைவிகளுக்கோ அல்லது தன் மகள் ஃபாத்திமாவுக்கோ (தாலி) கருகமணி கட்டவே இல்லை என்பதும், (தாலி) கருகமணி கட்டுவது அதை கணவன் இறந்த பின் அறுப்பது பின் அந்த பெண்ணை விதவை கோலத்தில் வைத்து அபசகுணமாக கருதி ஒதுக்கி வைப்பது இவையாவும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவை. இவை பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகும். 
சீறா புராணத்தை இயற்றிய உமர் புலவர் நபி (ஸல்) அவர்களுக்கும் சுமார் ஆயிரம் வருடத்திற்குப் பின்னர் பிறந்துள்ளவர். தனது கற்பனையினால் சில கவிதைகளை இயற்றி அதில் இப்படி அலி (ரலி), ஃபாத்திமா (ரலி) திருமணத்தைக் கற்பனையாகப் பாடியுள்ளார். இதை செயல்படுத்தும் நமது தமிழ் உறுது முஸ்லிம் மக்கள் நபிவழியை சுன்னத்தை செயல்படுத்தவில்லை என்பதை அறியலாம். ஆகையால் நாம் நபி வழியை கடைபிடித்தால் இம்மையில், மறுமையில் வெற்றி பெறுவோம். 
மணமக்களின் பிரார்த்தனை (துஆ) 
لئن أتيتنا صالحا لنكو نن من الشاكرين ( الأعراف : أيه 189 ) . 
‘லயின் அதய்தனா ஸாலிஹன் லநகூனன்ன மினஷ் ஷாகிரீன்’ (7:189) 
எங்களிறைவா! எங்களிருவருக்கும் நீ நல்லதை (சந்ததியை) கொடுத்தால் நிச்சயமாக நாங்களிருவரும் நன்றியுடையவர்களாக இருப்போம். (அல்குர்ஆன் 7:189) 
(ஆதிமனிதர் ஆதம் (அலை) அவரது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுடன் கேட்ட பிரார்த்தனை) 
رب هب لى من لدنك ذرية طيبة إنك 
أنت السميع الدعاء ( ال عمران : آيه 38 ) . 
‘ரப்பீஹப்லி மின்லதுன்க துர்ரியய்யதன் தைய்யிபதன் இன்னக்க சமிஉத்துஆ’ 
இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளைச் செவிமடுப்பவன். (அல்குர்ஆன் 3:38) 
(ஜக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை) 
மணமகனின் பிரார்த்தனை (துஆ) 
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين 
واجعلنا للمتقين إماما ( الفرقان : آيه 74 ) . 
‘ரப்பனா ஹப்லலனா மின் அஜ்வாஜினா வ துர்ரிய்யாதினா குர்ரத்த அயுனின் வ ஜஅல்னா லில் முத்தகீன இமாமா’ 
எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியைத் தருவாயாக! இன்னும் இறையுணர்வுடையோர்க்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக. (அல்குர்ஆன் 25:74) 
(ரஹ்மானின் நல்லடியார்கள் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று பார்க்க 25:67 முதல் 75 வசனங்கள்) 
ஒரு பெண்ணை மணமுடித்ததும் அவளது முன்னெற்றி ரோமத்தை பிடித்திக் கொண்டு மணமகன்: 
اللهم إني أسألك خيرها وخير ما جبلت عليه 
وأعوذ بك من شرها وشر ما جبلت عليه . 
‘அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக ஹைரஹா வஹைர மா ஜபல்த்த அலைஹி வ அவூது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மாஜபல்த்த அலைஹி’ என்று பரகத்துக்காக துஆ செய்ய வேண்டும். 
பொருள்: இறைவா! இப்பெண்ணிடமிருந்து (எனக்கு) நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், இப்பெண்ணின் இயல்புகளிலிருந்து எனக்கு நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் இப்பெண்ணிடமிருந்து தீங்குகள் ஏற்படாமலிருக்கவும் உன்னிடம் வேண்டுகிறேன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்பின் ஆஸ் (ரலி) ஆதாரம்: ஹாகிம் 
இல்லறத்தின் ஒழுங்குகள் 
ஒருவர்தம் மனைவியுடன் கூடும்போது 
بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان مارزقتنا 
‘பிஸ்மில்லாஹி அல்லாஹூம்ம ஜன்னிப்னஷ் ஷைதான வஜன்னிப்ஷ்ஷைதான மா ரஸக்தனா’ என்று கூறுவாரானால் – அப்போது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஷைத்தானால் எந்த தீங்கும் ஏற்படாது என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். 
பொருள்: இறைவா! எங்களையும் எங்களுக்கு நீ வழங்கக்கூடிய குழந்தைகளையும் ஷைத்தானை விட்டும் நீ பாதுகாப்பாயாக! ஆதாரங்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா, புகாரி, முஸ்லிம் 
நபி (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் உண்ணவோ, உறங்கவோ விரும்பினால், தொழுகைக்குச் செய்வதுபோல் ஒளு செய்து கொள்வார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம். 
தன் மனைவியுடன் கூடிவிட்டு அவளது அந்தரங்கத்தை வெளியில் சொல்லித் திரிபவன் கியாமத் நாளில் அல்லாஹ்விடம் மிகவும் கெட்டவனாவான் என நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), ஆதாரங்கள்: முஸ்லிம், அஹ்மத் 
திருமண அநாச்சாரங்களை விட்டொழிப்போம் 
  1.  
    1. மணமக்களை பூமாலை மலர்களால் அலங்கரித்து அழைத்து வரல்.
    2. திருமணத்திற்கு முந்திய நாளிரவு மணமக்களுக்கு ரசம் (நலங்கிடல்) என்ற பெயரில் எண்ணெய் சடங்கு செய்தல்.
    3. கைக்கூலி எனும் வரதட்சணை வாங்குதல்.
    4. மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடல் போன்றவை.
    5. மணமேடைக்கு மணமகன் வருகையில் ஆரத்தி எடுத்தல், ஆட்டுத்தலை, கோழி போன்றவற்றை தலை சுற்றி எறிதல்.
    6. மணமகனுக்கு பெண் வீட்டார் நிறைகுட தண்ணீர்வைத்து அதில் அவரின் காலை கழுவி விடல்.
    7. மணமகனுக்கு தங்க மோதிரம், மைனர் செயின் அணிவித்தல்.
    8. மணமகளுக்கு தாலி மற்றும் கருகமணி கட்டுதல்.
    9. மணமக்களை வைத்து மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.
    10. நல்லநேரம், சகுணம் பார்ப்பது, சடங்குகளின் பெயர்களால் வரம்புமீறி, ஆண், பெண் (திரை) ஹிஜாபின்றி இஸ்லாம் அனுமதிக்காத விதத்தில் விளையாடி மகிழ்வது.
    11. மேடை அலங்காரம், வீடியோ, மேளவாத்தியம் என்று அனாச்சாரமாக பணத்தை செலவழிப்பது.
    12. பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயரில் பொருட்களை கேட்டு வாங்குவது.
    13. சுன்னத்தான தாடியை முகச்சவரம் என்ற பெயரில் வழித்தல்.
    14. திருமணதன்று பெண் வீட்டாரிடம் விருந்து கொடுக்க நிர்பந்திப்பது.
    15. மணமகனை பைத்ப்பாடி ஊர்வலமாக அழைத்து செல்வது.
    16. மணமக்களை தர்ஹாகளுக்கு அழைத்து செல்வது.
மேலே குறிப்பிட்ட அனைத்து சம்பிரதாயங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனென்றால்: 
நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள், எவர்கள் மற்றொரு சமுதாயத்தின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களே அவர்கள், அந்த சமுதாயத்தில் சேர்ந்தவராவர்கள். என்னைச் சார்ந்தவர்களல்ல. அறிவிப்பு: இப்து உமர் (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, அஹ்மத். 
குறிப்பு: இங்கு கருணை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மற்ற சமுதாய கலாச்சாரத்தை பின்பற்றாதீர்கள் என்று கூறுவது எந்த ஒரு சமுதாயத்தின் மீது உள்ள குரோதமோ, வெறுப்பினாலோ அல்ல என்பதையும், அப்படி செய்வது மனித யூகங்கள் கலந்த, இறைவனின் முழு அங்கீகாரம் அல்லாத ஒரு கலாச்சார செயலாக இருக்குமே அல்லாமல், இறைவனால் அளிக்கப்பட்ட எளிமையான, சீரான, ஒழுக்கமான ஒரு மார்க்கத்தின் கலாச்சாரமாக இருக்காத காரணத்தினால் இறை வெறுப்பும், தண்டைனையும் பெற வைக்கும் என்பதனாலேயே என்பதை உணரவும் மனித குலத்திற்கு அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் மூலம் இறைவன் மனிதர்களிடம் எதை விரும்புகிறானோ அதைத் காட்டி தரவே முஹம்மது (ஸல்) மூலம் அல்லாஹ் அவ்வாறு கூற வைத்துள்ளான் என்பதும் ஒரு காரணமாகலாம். 

No comments:

Post a Comment