Thursday, February 10, 2011

மீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(?)


May Almighty ALLAH  (SWT) guide all of us to the Right Path and give all of us the courage to accept the Truth in the light of Qur’an and Sunnah and to reject all things which are in contradiction to the Holy Qur’an and Sunnah, Aameen.

ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். இது அருள் நிறைந்த மாதம். உலகத்தை ஒளிபெறச் செய்யும் மாதமுமாகும், ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று எண்ணி மீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(?) வெகு கோலாகலமாக பல முஸ்லிம்களின் வீடுகளிலும் பள்ளிகளிலும் நடைபெறும். இஸ்லாத்திற்கும் இச்செயலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது (வாஜிபாகும்) கட்டாயமாகும்
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். யார் தன் பிள்ளை பெற்றோர் மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வில்லையோ அவர் உண்மையான முஃமினாக முடியாது.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 9:24)
தன் பெற்றோர், பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக தன் பெற்றோர் இன்னும் பிள்ளைகளைவிடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
(ஒருநாள்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களையும் விட உங்களை நான் மிகவும் நேசிக்கின்றேன் என உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக உன்னை விட நான் மிக நேசமுள்ளவராக ஆகும் வரை நீர் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இப்போது நீங்கள் என் உயிரை விடவும் என்னிடத்தில் மிக நேசமானவர்கள் எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இப்போதுதான் நீங்கள் உண்மையான முஃமீன் எனக்கூறினார்கள். ஆதாரம்: புகாரி
இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நபி(ஸல்) அவர்களை உண்மையான முறையில் நேசிப்பது வாஜிபாகும் (கட்டாயமாகும்).
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?
நபி(ஸல்) அவர்களை நேசிப்பதென்பது அல்லாஹ்வும் இன்னும் அவனின் தூதர் நபி(ஸல்) அவர்களும் ஏவியவைகளை எடுத்தும் தடுத்தவைகளை தடுத்தும் நடப்பதுதான் உண்மையான நேசமாகும். இப்படித்தான் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும்.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்
(நபியே!) நீர் கூறும், “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 3:31)
யார் என்னுடைய இயற்கை பண்புகளை நேசிக்கின்றாரோ அவர் என் வழியை பின்பற்றட்டும், திருமணமும் என் வழியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனன் ஸயீத் இப்னு மன்ஸுர், சுனனுல் குப்ரா லில் பைஹகி)
நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை எப்படி நேசித்தார்கள்?
கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை அடிதவறாமல் பின்பற்றினார்கள் என்று சொல்வதைவிட நபி(ஸல்) அவர்களின் அசைவுகளையும் பின்பற்றினார்கள் என்பதுதான் பொருத்தமாகும். அதைக் குறிப்பிடும் சில வரிகள்..
1. நீங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை எப்படி நேசிக்கக்கூடியவர்களாக இருந்தீர்கள்? என அலி(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்கள் எங்களின் பொருட்கள், பிள்ளைகள், தந்தை, தாய்மார்கள் மற்றும் தாகத்தின் போது குளிர் தண்ணீரை விடவும் எங்களிடம் மிகவும் நேசமுள்ளவர்களாக இருந்தார்கள் என விடை பகிர்ந்தார்கள்.
2. மக்கா முஷ்ரிக்கீன்களுக்கு அடிமையாக இருந்த ஜைத் இப்னு ததினா என்னும் நபித்தோழரை கொலை செய்வதற்காக மக்கா முஷ்ரிக்கீன்கள் ஹரத்தின் எல்லையை விட்டும் வெளியே எடுத்துச் சென்ற போது அபூ சுஃப்யான் இப்னு ஹர்பு(ரலி) அவர்கள் (அப்போது அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை) கேட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னை உன் குடும்பத்தோடு வாழ விட்டுவிட்டு உன் இடத்தில் முஹம்மதை வைத்து அவரின் கழுத்து துண்டாடப்படுவதை நீ விரும்புவாயா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் என் குடும்பத்தோடு இருந்து நபி(ஸல்) அவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே நோவினை தரும் ஒரு முள் குத்துவதைக்கூட நான் விரும்பமாட்டேன் எனக் கூறினார்கள். அப்போது அபூ சுஃப்யான் இப்னு ஹர்பு(ரலி) அவர்கள் முஹம்மதை அவரின் தோழர்கள் நேசிப்பது போன்று மனிதர்களில் யாரும் யாரையும் நேசிப்பதாக நான் பார்க்கவில்லை என்று கூறினார்கள்.
3. நபி(ஸல்) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி உஹது யுத்தத்தில் பரவிய போது நபித்தோழர்கள் திகைத்துப் போனார்கள். அப்போது ஒரு நபித்தோழி திகைத்துப் போன நிலையில் நபி(ஸல்) அவர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக உஹதுப் போர்களத்திற்கு வந்தபோது தன்னுடைய மகன், தந்தை, கணவன் இன்னும் சகோதரர் ஷஹீதாக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்படுகின்றார்கள். அவர்களில் யாரை முதலில் பார்த்தார்கள் என்பது எனக்குத் தெரியாது அந்த நபித்தோழி ஷஹீதாக்கப்பட்டவர்களை கடந்து செல்லும் போதெல்லாம் இவர் யார் என வினவிய போது இது உமது தந்தை, உமது சகோதரர், உமது கணவர், உமது மகன் என்று சொல்லப்பட்டது. அப்படி சொல்லப்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்கே? என்றுதான் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கொஞ்சம் முன்னால் நிற்கின்றார்கள் என நபித் தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்த அவர்கள் அன்னாரின் ஆடையின் ஓரத்தைப் பிடித்தவாறு, பின்பு கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் அற்பணமாகட்டும், நீங்கள் நலமடைந்து விட்டால் நான் எந்த அழிவைப்பற்றியும் கவலைப்படமாட்டேன் எனக்கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) ஆதாரம்: தப்ராணி
மற்றொரு அறிவிப்பில்: உங்களின் நலத்திற்குப் பின் எல்லா கஷ்டங்களும் மிக இலேசானதே என்றார்கள். (ஷீறா இப்னு ஹிஷாம்)
நபித்தோழர்களும் நபித்தோழிகளும் உண்மையாகவே நபியவர்களை நேசித்தார்கள் என்பதற்கு இது போன்ற எத்தனையோ வரலாற்றுக் குறிப்புகளை கூறலாம்.
நபி(ஸல்) அவர்கள் ஏவியதையும் தடுத்ததையும் நபித்தோழர்கள் எடுத்தும் தடுத்தும் நடந்தார்கள் என்பது மட்டுமல்லாமல், நபி(ஸல்) அவர்களுக்காக தன் உயிரையே அற்பணித்தார்கள். நபியவர்களின் விருப்பத்தை தன் விருப்பமாக்கினார்கள். இப்படித்தான் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் விட்டுவிட்டு, ரபீவுல் அவ்வல் மாதத்தில் நபியவர்கள் பேரில் மெளலிது படித்துவிட்டு அல்லது மீலாது விழா நடத்திவிட்டு நாம் நபி(ஸல்) அவர்களை புகழ்ந்து விட்டோம் என்பது போலி நேசமாகும். இன்னும் இவர்களில் அதிகமானவர்கள்,
நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திலிருந்து வெகு தூரமானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மெளலிது படிப்பதும் மீலாது விழா நடத்துவதும்
நபி(ஸல்) அவர்களை நேசிப்பதாக இருந்திருந்தால் அதை நிச்சயமாக நபித்தோழர்கள் செய்திருப்பார்கள். ஆனால் நபித்தோழர்களோ, தாபியீன்களோ, தப்உத்தாபியீன்களோ, சிறப்பிற்குரிய எந்த இமாம்களோ இதைச் செய்யவில்லை. அதாவது சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டிலும் இது நடைபெறவில்லை, இதை முதலில் அரங்கேற்றியவர்கள் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த பாதினிய்யா கூட்டத்தைச் சேர்ந்த ஃபாத்திமியின்கள் என்பவர்கள்தான். இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாத்தில் நுழைய வைக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தார்கள்.
ஃபாத்திமியீன்கள் யார் என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமாகும். இவர்கள் பாதினிய்யா (பல தவறான கொள்கைகளை உள்ளடக்கியவர்கள் என்பது இவ்வார்த்தையின் பொருளாகும்) என்னும் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையை கொண்டுள்ள யூத பரம்பரையைச் சேர்ந்த அப்துல்லா இப்னு மைமூன் அல் கத்தாஹ் என்பவனின் வம்சாவழியாவார்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள். இஸ்லாமியப் போர்வையிலே இஸ்லாத்தை அழிக்க முற்பட்டவர்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்துவிட்டு இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாமியப் பெயரில் இஸ்லாத்தினுள் நுழைத்தவர்கள். அலி(ரலி) அவர்களை இறைவனென்றும் அல்லது நபித்துவத்திற்கு தகுதியுள்ளவரென்றும் வாதிடக்கூடியவர்கள். நபித்தோழர்களை ஏசுபவர்கள். மறுமையை மறுப்பவர்கள், காபிர்கள், நெருப்பு வணங்கிகள். தவறான வம்சாவழியில் உள்ளவர்கள் என்ற பல குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள். இவர்களைப் பற்றி சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்கள் பின்வருமாறு.
இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மனிதர்களில் மிகக் கெட்டவர்களும் மிகவும் அல்லாஹ்வை நிராகரிப்பவருமாவார்கள். யாராவது இவர்கள் ஈமான் உள்ளவர்கள் என்றோ அல்லது இறையச்சம் உள்ளவர்கள் என்றோ அல்லது நல்ல வம்சாவழியில் உள்ளவர்கள் என்றோ கூறினால் அவர்கள் பற்றிய அறிவில்லாமல் அவர்களுக்கு சான்று கூறுவதேயாகும். அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:36)
அல் காழி அபூபக்ரில் பாகில்லானி(ரஹ்) அவர்கள் ‘இரகசியத்தை வெளிப்படுத்தி முகத்திரையை கிழிப்பது‘ என்ற தனது பிரபல்லியமான புத்தகத்தில் கூறுகின்றார்கள்:
நெருப்பு வணங்கிகளின் வம்சா வழிகள், இவர்களின் கொள்கை யூத கிறிஸ்தவர்களின் கொள்கையைவிட மிக மோசமானது. அலி(ரலி) அவர்களை கடவுளென்றும் அல்லது அவர்கள் தான் நபியென்றும் வாதிடுபவர்களைவிட மிகவும் கெட்டவர்கள்.
அல் காழி அபூ யஃலா(ரஹ்) அவர்கள் தனது ‘அல் முஃதமது‘ என்னும் புத்தகத்தில குறிப்பிடுகின்றார்கள்.
‘மறுமையை மறுப்பவர்கள், இறைநிராகரிப்பாளர்கள்‘
இன்னும் பல இஸ்லாமிய அறிஞர்களும் இவர்கள் முனாஃபிக்குகள், மறுமையை மறுப்பவர்கள் இஸ்லாத்தை வெளியில் காட்டிகொண்டு உள்ளே குஃப்ரை மறைத்து வைப்பவர்கள், இவர்கள் யூத மற்றும் நெருப்பு வணங்கிகளின் வம்சாவழியினர் என்ற ஒற்ற கருத்தை கொண்டுள்ளனர்.
இவர்கள், ஹிஜ்ரி 362 ரமளான் மாதம் பிறை 5ல் எகிப்தின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்கள்தான் நபி(ஸல்) அவர்கள் மீது பிறந்தநாள் (மீலாது) கொண்டாடுவதை முதலில் ஆரம்பித்தவர்கள். இவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது மாத்திரம் இவர்கள் மீலாது விழாவை ஆரம்பிக்கவில்லை அவர்களின் குடும்பத்தாரான ஃபாத்திமா(ரலி), அலி(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) இன்னும் ரஜப் முதல் இரவு மற்றும் அம்மாதத்தின் நடு இரவை கொண்டாடுவது, அவ்வாறு ஷஃபான் முதல் மற்றும் நடுஇரவு இன்னும் இது போன்ற பல கொண்டாட்டங்களை இவ்வுலகிற்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார்கள் மீதும் மீலாது விழா நடத்தியது இஸ்லாத்தையோ நபி(ஸல்) அவர்களையோ நேசித்ததற்கல்ல! இஸ்லாமியப் போர்வையில் இஸ்லாத்தை அழிப்பதற்காகவும் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் உண்மையான அகீதாவை (கொள்கையை) விட்டும் தூரமாக்குவதற்குத்தான்.
மீலாது விழாக்களுக்காக பல இலட்சக்கணக்கான தொகையை உணவுக்காகவும் இனிப்பு பண்டங்களுக்காகவும் அன்பளிப்புகளுக்காகவும் அரசு பணத்தில் செலவு செய்து அன்றைய தினத்தை அரசு விடுமுறையாகவும் பிரகடனம் செய்தார்கள். இவ்வாறு செய்ததினால் அதிக மக்களின் உள்ளங்களிலே அவர்கள் பற்றிய நல்லெண்ணங்களை பெற்றுக் கொண்டார்கள். இதனால் அவர்களுடைய ஆட்சியும் நீண்டது. அவர்களின் கொள்கையும் மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவியது. இதற்காகவே இந்த மீலாது நாடகத்தை அவர்கள் அரங்கேற்றினார்கள்.
அவர்கள் எகிப்தின் ஆட்சியை கைபற்றிய போது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் நெருப்பு வணங்கிகளுக்கு அவர்களின் அரச சபைகளிலும் அரசாங்க வேலை வாய்ப்புகளிலும் இடமளித்தார்கள். மந்திரிகளாகவும் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரான முஸ்லிம்களை கொடுமைப்படுத்தினார்கள். மேலும் அவர்களை தங்களின் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அரசாங்க வேலை வாய்ப்பு பெறுவதற்கு அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொள்வதை நிபந்தனையாக்கினார்கள். இதனால் பல யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஷீஆ (ஷியா) கொள்கையை தங்களின் கொள்கையாக (மத்ஹபாக) ஏற்றுக் கொண்டார்கள். அரசாங்க தொழிலிலுள்ள அனைவரும் அவர்களின் கொள்கையை எற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். நீதிமன்றத்திலுள்ள நீதியரசர்களையும் அவர்களின் கொள்கைப்படியே தீர்ப்பளிக்க வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்தார்கள்.
ஹிஜ்ரி 372ல் எகிப்தை ஆட்சி செய்த பாத்திமிய்யீன்களின் மன்னரான அபுல் மன்சூர் நஸார் இப்னுல் முஇஸ் இப்னுல் காயிம் இப்னுல் மஹ்தி அல் உமைதி என்பவர் ரமளான் மாதத்தில் தொழப்படும் தராவிஹ் தொழுகையை தடைசெய்தார். ஹிஜ்ரி 393ல் லுஹா தொழுத 13 பேரை மூன்று நாட்கள் சிறையிலடைத்து தண்டனையும் வழங்கினார். ஹிஜ்ரி 381ல் முஅத்தா இமாம் மாலிக் என்னும் ஹதீத் கிரந்தம் ஒருவரிடத்தில் இருந்த காரணத்தினால் அவரை ஊரைச்சுற்றவைத்து அவமானப்படுத்தி அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. ஹிஜ்ரி 395ல் எல்லாப் பள்ளிவாசல்களின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் பள்ளியின் கதவுகளிலும் இன்னும் மண்ணறைகளிலும் முன்னோர்களான நபித்தோழர்களையும் நல்லடியார்களையும் அவமதிக்கும் வாசகங்கள் எழுதப்பட்டும் பொறிக்கப்பட்டுமிருந்தது. அவர்களின் கடைசி மன்னரின் ஆட்சி காலம்வரை நபித்தோழர்களை அவர்களின் மிம்பர்களிலும் மேடைகளிலும் ஏசுவது அவர்களின் சின்னமாக காணப்பட்டது.
இத்தோடு அவர்களின் ஆணவத்தை அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் மன்னர்களில் ஒருவரான மன்சூர் இப்னு நஸார் என்னும் அல் ஹாகிம் என புனைப் பெயர் சூட்டப்பட்டவர் தன்னை கடவுள் நிலைக்கே கொண்டு வந்துவிட்டார். மிம்பரில் குத்பா பிரசங்கம் செய்யும் இமாம், இவருடைய பெயரை கூறிவிட்டால் இவரை கண்ணியப்படுத்துவதற்காக மக்கள் எல்லோரும் எழுந்து நின்று விடுவார்களாம். இவரின் பெயர் கூறப்பட்டால் இவருக்காக சுஜுது செய்யும்படி மிஸ்ர் நாட்டு மக்களுக்கு அவர் கட்டளையும் இட்டிருந்தார், அவ்வாறே அம்மக்களும் செய்தார்கள். எந்தளவுக்கென்றால் ஜும்ஆத் தொழுகைகூட தொழாதவர்கள், இவரின் பெயர் கேட்டு அவர்கள் கடைவீதிகளில் இருந்தால் கூட சுஜுதில் விழுந்து விடுவார்களாம்.
அவர்களின் ஆட்சி காலத்தில் மிம்பரிலும் வேறு மேடைகளிலும் நபித்தோழர்களை ஏசினார்கள், சபித்தார்கள். குறிப்பாக மூன்று கலீபாக்களையும் (அபூபக்ர்(ரலி) உமர்(ரலி) உத்மான்(ரலி)) விமர்சித்தார்கள், இம்மூவரும் அலி(ரலி) அவர்களின் பகைவர்கள் எனக் கூறினார்கள்.
ஆறாம் நூற்றாண்டின் கடைசி அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இர்பில் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் முளஃப்பர் அபூ ஸயீத் கோக்பூரி என்பவர் இவர்களுக்குப் பின் மக்கள் மத்தியில் இந்த மீலாது மேடையையும் மெளலிது ஷரீபையும்? மிக பிரபல்லியப்படுத்தினார்.
இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் ‘அல்பிதாயா வன்னிஹாயா‘ என்னும் வரலாற்றுக் குறிப்பில் ‘அபூ ஸயீத் கோக்பூரியின்‘ வரலாற்றைக்கூறும் போது
ரபீவுல் அவ்வல் மாதத்தில் மெளலிது ஓதி மாபெரும் மீலாதுவிழாக் கொண்டாடுவார். இவர் ஏற்பாடு செய்யும் மெளலிது விருந்துபசாரத்தில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளும் பத்தாயிரம் கோழிகளும் ஒரு இலட்சம் தயிர்க்கோப்பைகளும் முப்பது ஆயிரம் ஹல்வாத் தட்டுக்களும் ஏற்பாடு செய்வார் என்று, இவர் ஏற்பாடு செய்த சில மெளலிது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் கூறினார்கள். இன்னும் ளுஹர் நேரத்திலிருந்து ஃபஜ்ர் நேரம் வரை ஸுஃபியாக்கள் பாட்டுப்பாடுவதற்காக ஒலிபெருக்கிகளை ஏற்பாடு செய்து அவர்களுடன் சேர்ந்து இவரும் நடனமாடுவார். ஆதாரம்: அல்பிதாயா வன்னிஹாயா
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
இதுதான் மீலாது விழாவின் லட்சணம்! இவர்கள்தான் மீலாது விழாவை உலகிற்கு இறக்குமதி செய்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் முறையா? நிச்சயமாக இல்லை. நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதுதான் அவர்களைப் நேசிப்பதற்கு உண்மை அடையாளமாகும்.
மீலாது விழா கொண்டாடுபவர்கள் எடுத்து வைக்கும் சில சந்தேகங்களும் அதற்குரிய விடைகளும்
சந்தேகம் -1
மீலாது விழாக் கொண்டாடுவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தவதாகும்.
விடை: நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதென்பது அவர்கள் ஏவியதை எடுத்தும், தடுத்ததை தவிர்த்தும் நடப்பதாகும். பித்அத்துக்களையும் பாவங்களையும் செய்வது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதாகாது. மீலாது விழாக் கொண்டாடுவது அந்த பாவமான காரியத்தைச் சேர்ந்ததே. நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை அதிகம் கண்ணியப்படுத்தியவர்கள். அவர்கள் மீலாது மேடை நடத்தவில்லை. மீலாது மேடை நடத்துவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தவதாக இருந்திருந்தால் நிச்சயம் அதை நபித்தோழர்கள் செய்திருப்பார்கள். நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை எந்தளவு கண்ணியப்படுத்தினார்கள் என்பதை பின்வரும் ஹதீது தெளிவுபடுத்துகின்றது.
உர்வா இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கைஸர், கிஸ்ரா, நஜ்ஜாசி மன்னர்களிடம் சென்றிருக்கின்றேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் நபி(ஸல்) அவர்களை நேசிப்பது போல் வேறு எந்த மன்னர்களையும் அவர்களின் தோழர்கள் நேசிப்பதாக நான் பார்க்கவில்லை. (ஹதீஸின் ஒரு பகுதி)
ஆதாரம்: புகாரி
இவ்வளவு கண்ணியம் காத்த நபித்தோழர்கள் ஒரு தடவைகூட மீலாது மேடை நடத்தவில்லை. மீலாது மேடை நடத்துவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதாக இருந்திருந்தால் நிச்சயம் அதைச் நபித்தோழர்கள் செய்திருப்பார்கள்.
சந்தேகம் -2
பல நாடுகளில் அதிக மக்கள் செய்கின்றார்கள்.
விடை: நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்தான் ஆதாரமாகும். மக்கள் செய்யும் செயல்கள் ஆதாரமாக முடியாது, அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சரியே. நபி(ஸல்) அவர்கள் எல்லா பித்அத்துக்களையும் தடுத்துள்ளார்கள். மீலாது மேடையும் அந்த வகையைச் சேர்ந்ததே. மனிதர்கள் செய்யும் செயல்கள் குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சரியே.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (அல்குர்ஆன் 6:116)
சந்தேகம் – 3
மீலாது விழா கொண்டாடி நபி(ஸல்) அவர்களை நினைவு படுத்துகின்றோம்.
விடை: நபி(ஸல்) அவர்களை ஒவ்வொரு நாளும் ஒரு முஸ்லிம் நினைவுபடுத்தியாக வேண்டும். நாம் செய்யும் பர்லான சுன்னத்தான ஒவ்வொரு அமல்களும் இன்னும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலின்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நபி(ஸல்) அவர்களின் நினைவூட்டலே. நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறாமல் அதான் இகாமத் சொல்ல முடியுமா

No comments:

Post a Comment