Thursday, April 7, 2011

வானிலையை எப்படி அறிகிறார்கள்?


வானிலையியல் என்பது வளிமண்டலத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களால் உண்டாகும் காற்று, மழை போன்ற இயற்கையின் விளைவுகளை ஆராயும் ஒரு விஞ்ஞான முறையாகும். இயற்பியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய வானிலையியல், சற்றுக் கடினமான ஒரு விஞ்ஞானம் ஆகும்.
நவீன வானிலையியல், கி.பி. 1709-ம் ஆண்டு காற்றழுத்தமானி, பாதரச வெப்பமானி போன்ற உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தோன்றியதாகக் கூறலாம்.
இந்தியாவில் முதல் வானிலையியல் ஆய்வுக் கூடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் 1892-ம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியால் தொடங்கப்பட்டது.
பல தீவிரமான புயல்கள், மழையின்மை காரணமாக உண்டான கடும் பஞ்சங்கள் அன்றைய அரசாங்கத்தை உலுக்கின. அதன் விளைவாக, 1875-ம் ஆண்டு கல்கத்தாவில் இந்திய வானிலைத் துறை அமைக்கப்பட்டது. அதன் கிளை தற்காலிகமாக சிம்லாவில் நிறுவப்பட்டது.
ஆரம்ப காலத்தில், வானிலை ஆய்வுக் குறிப்புகளைப் பதிவு செய்ய சில நிலமட்ட ஆய்வுக் குறிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டன. அவற்றில், காற்றின் அழுத்தம், வெப்பநிலை, காற்றின் திசை, வேகம், மழை அளவு, காற்றில் உள்ள ஈரப்பதம், மேகங்களின் தன்மை, அளவுகள், சமநோக்குதூரம், அப்போதைய வானிலையை அளப்பதற்கு முன், ஒரு மணி நேரத்தின் வானிலை ஆகியவை பதிவு செய்யப்பட்டன. அன்றைய நிலையுடன் ஒப்பிட்டால் தற்போது இந்தியாவில் 571 நிலமட்ட வானிலை ஆய்வுக்கூடங்கள் உள்ளன. தென்துருவத்துக்கு அருகில் அண்டார்டிகாவிலும் நமது வானிலை ஆய்வுக்கூடம் உள்ளது.

இவற்றில் பெரும்பாலான நிலையங்கள் மூன்று மணிக்கு ஒருமுறை மேலே குறிப்பிட்ட வானிலைக் குறிப்புகளைச் சம்பந்தப்பட்ட வானிலை மையங் களுக்கு அனுப்புகின்றன. அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற நிலையங்கள் உள்ளன.
பலூன் மூலம், மேல்மட்டக் காற்றின் வேகம், வீசும் திசை ஆகியவற்றைக் கணிக்கும் 63 ஆய்வுக்கூடங்கள் நம் நாட்டில் உள்ளன. பலூன் மூலம் ஆய்வு நடத்தும் `ரேடியோ சாண்ட்’ வாயிலாக வளிமண்டலத்தில் 25- 30 கிலோமீட்டர் உயரத்தில் வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம் பற்றி ஆராயவும் 34 கூடங்கள் உள்ளன. ரேடியோ நுண்ணலைகள் வாயிலாக காற்றின் திசை, வேகம் அறியும் ரேடார் நிலையங்கள் உள்ளன. புயலைக் கண்டறியும் ரேடார்களும் உள்ளன.
ஒரு வானிலை அறிவிப்பில் மூன்று வகையான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
முதல் வகையில், எந்த வகை சந்தேகமும் இல்லாத வாக்கியங்கள் உபயோகிக்கப்படும். உதாரணமாக, `இன்று வானம் தெளிவாக இருக்கும்’, `நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும்.’
இரண்டாவது வகையில் சந்தேகம் தொனிக்கும். `அனேகமாக’, `உண்டாகக்கூடிய’, `வாய்ப்புகள்’ போன்ற வார்த்தைகள் இடம்பெறும்.
மூன்றாவது வகையில், `மழை உண்டாகக்கூடிய சூழ்நிலைகள் சாதகமாக உள்ளன’, `மழை பெய்யலாம்’ என்பது போன்ற வாக்கியங்கள் இருக்கும்.
———————————————————-
`மிகைப்படுத்தல்’ ஏன்?
ஒரு வானிலை முன்னறிவிப்பில் சிலநேரங்களில், `சற்றே மிகைப்படுத்தல்’ தவிர்க்க முடியாதது. சிறிய வாய்ப்பே இருந்தாலும், பலத்த காற்று பற்றிய எச்சரிக்கையை வானிலை மையங்கள் வெளியிடும். அதை ஆங்கிலத்தில், `To erron the safeside’ என்கிறார்கள். இதில் பலத்த காற்று வீசும் வாய்ப்புக்கான சதவீதம் குறைவாக இருந்தாலும், ஒருவேளை பலத்த காற்று வீசினால் ஏற்படும் சேதம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் இவ்வாறு அறிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment