Thursday, April 7, 2011

சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும்…


விரல் நகங்களை மிக நீளமாக வளர்த்து வைத்திருப்பது நல்லதல்ல. நகங்களுக்கு கீழுள்ள இடத்தில் அழுக்கும், நோயை உண்டாக்கும் கிருமிகளும் தங்கியிருக்கும். நாம் சாப்பிடும் போது, நகத்திலிருந்து சாப்பாட்டுடன் சேர்ந்து இவைகளும் வாய்க்குள் போய் விடும். அதே போல, நகத்தைக் கடிப்பதும் நல்ல பழக்கமல்ல. சிலருக்கு நகத்தைக் கடிப்பது, நிறுத்த முடியாத ஒரு பழக்கமாக ஆகி விடுகிறது. இது தவறு.
நகத்தை வளர வளர வெட்டிக்கொண்டே இருந்தால், நகத்துக்கடியில் கிருமி சேர வாய்ப்பே இல்லை. தினமும் வளர்ந்து கொண்டிருக்கும் நகம், நாம் உயிரோடிருக்கும் வரை வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அதை தடுக்க முடியாது. நாம் தான் அதை ஒழுங்காக, வளர, வளர, வெட்டி விட்டுக் கொண்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் வயல்களில் வேலை செய்பவர்களின் விரல் நகங்களில், வேலை பார்க்கும் போது மண், அழுக்கு முதலியவை உள்ளே போய் சேர்ந்து, கறுப்பாக, பார்க்கவே அசிங்கமாக இருக்கும். இவர்களெல்லாம் வேலையில்லாமல் சும்மா உட்கார்ந் திருக்கும் போது, நகத்துக்கடியில் இருக்கும் அழுக்கை, தென்னங்குச்சியை வைத்து நோண்டி சுத்தம் பண்ணிக் கொண்டிருப்பார்கள். வேலை பார்க்கும் போது நகத்துக்கடி யில் மண், அழுக்கு முதலியவை சேருவது மிகவும் சகஜம். இதை தவிர்க்க முடியாது. ஆனால் இவர்கள் முதலிலேயே விரல் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருந்தால், வேலை பார்க்கும் போது மண்ணோ, அழுக்கோ சேர வாய்ப்பில்லை அல்லவா!

கால் விரல்களிலும் நகங்களை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கால் நகங்கள் வாய்க்கு வரவேண்டிய வேலை இல்லை. அதனால் விட்டு விடலாம், எனவே கைவிரல் நகங்களைப் பற்றித் தான் அதிகமாக கவலைப்பட வேண்டும். இடது கை விரலில் நகங்கள் வளர்ப்பது இன்னும் மோசம். காலைக் கடன்களுக்கு இடது கைதான் அதிக மாக உபயோகப்படுகிறது. எனவே இடது கை விரல் நகங்கள் மிக மிக சுத்தமாக எப்பொழுதும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கை, கால் விரல் நகங்களை உரசி விட்டு, ஒழுங்காக, அழகாக, வெட்டி விட்டு சுத்தம் செய்து, நெயில் பாலிஷ் போட்டுவிட்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்படி செய்ய அழகு நிலைங்கள் தற்போது நிறைய இருக்கின்றன. கை விரல் நகங்களுக்கு ரூ.150 லிருந்து ரூ.300 வரையிலும், கால் விரல் நகங்களுக்கு ரூ.250 லிருந்து ரூ.600 வரை யும் வாங்குகிறார்கள். இப்படியிருக்கும் போது, நகத்தை வளர்க்கக் கூடாது. வெட்ட வேண்டும் என்று சொன்னால் நகம் வளர்ப்பவர்களுக்கு கோபம் தான் வரும். என்ன செய்வது! நல்ல விஷயத்தை சொல்லித்தானே தீர வேண்டும். விரல் நகங்கள் நூறு சதவிகிதம் சுத்தமாக இருக்காது என்பதனால் தான், தற்பொழுது வெளிநாடுகளில் உணவு தயாரிக்கும் இடத்திலும், உணவு பரிமாறும் இடத்திலும் ரோபோக்களை பயன் படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதேபோல் அழுக்கான நகம், செத்துப் போன நகம், காய்ந்து போன நகம், நோயினால் பாதிக்கப்பட்ட நகம்- இம்மாதிரி பார்ப்பதற்கு நன்றாக இல்லாத நகம் உடையவர்களுக்காகவே, தற்பொழுது `செயற்கை நகம்’ வந்து விட்டது. இயற்கை நகத்துக்கு மேலே, இந்த செயற்கை நகத்தை `க்ளிப்’ போல மாட்டிக் கொள்கிறார்கள்.
நகங்களை ஒழுங்காகவும், சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண் டும். நகங்களுக்குக் கீழே அழுக்கு சேர விடக்கூடாது. கொஞ்சம் நகம் வளர்ந்தாலே, உடனே வெட்டி விட வேண்டும். நகங்களை வெட்டுவதற்கு `நக வெட்டிகள்’ பலவித மான மாடல்களில் கிடைக்கின்றன. நகத்தை வெட்டுகிறேன் என்று சொல்லி விட்டு, சிலர் நகத்தோடு சேர்த்து சதையையும் வெட்டிக்கொள்வார்கள். அந்த இடம் வீங்கி, சிவந்து, புண்ணாகி ஆறுவதற்கு ஒரு வாரம் ஆகும். அதிலும் சர்க்கரை வியாதி இருக்கிறவர்களுக்கு சில நேரத்தில் விரலையே எடுக்கும்படி ஆகி விடும். ஆகவே கவனமாக வெட்டுங்கள். வெட்டுவதற்கு முன்பும், பின்பும், வெந்நீரில் கைகளையும், நகவெட்டியையும் நன்கு கழுவிவிட்டு, அதற்குப் பின் வெட்டுங்கள்.
`நகச்சுத்து’ என்று சொல்வார்களே, அதுவும் இந்த மாதிரி காரணங்களினால் ஏற்படுவது தான். ஒருவர் உபயோகிக்கும் நகவெட்டியை, இன்னொருவர் உபயோகித்தால் கூட, ஒருவருடைய நகத்திலிருக்கும் `பங்கஸ் நோய்’ அடுத்தவருக்கு மிகச் சுலபமாக வர வாய்ப்புண்டு. வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனியாக நக வெட்டியை வைத்துக் கொள்ள முடியாது. எனவே நகவெட்டியை உபயோகப்படுத்துவதற்கு முன்பு, வெந்நீரில் போட்டு, எடுத்து அதற்குப் பின் உபயோகியுங்கள். அதே மாதிரி நகங்களை வெட்டு வதற்கு முன் கை, கால்களை `டெட்டால்’ போன்ற கிருமி நாசினியை வெந்நீரில் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும்.

நகம் வெட்டுவதற்காக அழகு நிலையங்களுக்கெல்லாம் போக வேண்டிய தேவை யில்லை. வீட்டிலேயே பொறுமையாக அழகாக வெட்டிக் கொள்ளலாம். நன்கு நீளமாக வளர்ந்த பிறகு வெட்டலாம் என்று நினைப்பதை விட, ஞாயிற்றுக்கிழமைகளில், வாரத் திற்கொரு முறை எவ்வளவு அதிகமாக வளர்ந்திருக்கிறதோ, அவ்வளவு நகத்தையும் வெட்டி விடுங்கள். வலது கையால், இடது கைவிரல் நகங்களை வெட்டுவது சுலபம். அதே நேரத்தில் இடது கையால், வலது கை விரல் நகங்களை வெட்டுவது சற்று கடினம். பார்த்து செய்யுங்கள்.
நகங்களை வெட்டிய பின், வெட்டிய பாகங்களை நன்றாக தேய்த்து பாலீஷ் செய்து விடுங்கள். அடுத்தவர்களை விட்டு நகங்களை வெட்டச் சொல்லாதீர்கள். அவர்கள் நகத்தோடு, சதையையும் சேர்த்து வெட்டிவிட வாய்ப்புண்டு.
சிறிய குழந்தைகளுக்கு நகத்தை வெட்டிவிடும்போது, மிகவும் ஜாக்கிரதையாக செய்யுங்கள். கைகளை அடிக்கடி கழுவும் பழக்கமுள்ளவர்கள், அதிக ஸ்ட்ராங் இல்லாத லோஷன் அல்லது சோப்பில் கழுவ வேண்டும். அதிக நேரம் துணியுடனும், சோப்புடனும், பாத்திரத்துடனும் இருப்பவர்கள், கையில், கையுறை போட்டுக் கொள்ள வேண்டும். அதே மாதிரி சமையல்காரர்கள், பெயிண்ட் அடிப்பவர்கள் கையுறை போட்டுக் கொள்வது நல்லது. நெயில் பாலிஷ் போடுவது நல்லது என்று சிலர் சொல் வதுண்டு. நகங்கள் உடைவதற்கு நெயில் பாலிஷ்தான் காரணம். இயேசு பிறப்பதற்கு முன்பிருந்தே, நகங்களுக்கு பாலிஷ் போடும் பழக்கம் இருந்ததாக கூறுவதுண்டு. நெயில் பாலிஷ் ரிமூவர் உபயோகிப்பதும் நல்லதல்ல.
இதைப் படிப்பவர்களில் சிலருக்கு, கையால் சாப்பிடுவதை விட்டு விட்டு, ஸ்பூனில் சாப்பிடலாமே என்று தோன்றும். கையில் சாப்பிடும் திருப்தி, ஸ்பூனில் கிடைக்குமா!
சற்று நீள நகங்கள், தொழில் ரீதியாக சிலருக்கு உபயோகப்படத்தான் செய்கிறது. இருப்பினும் அந்த நகங்களுக்கு உள்ளே, அழுக்கும், கிருமியும் வேண்டாதவைகளும் சேர வாய்ப்பு அதிகம் என்பதால், நகம் வளர்ப்பதை விட, வளர்க்காமல் இருப்பதே நல்லது.
சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் நன்றாக கைகளை கழுவுங்கள். சோப்பை உபயோகித்து, அடிக்கடி விரல்களையும், நகங்களையும் கழுவுங்கள். பச்சைக்காய்கறி கள், பழங்கள், கேரட், பால், மீன் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நகங்கள் ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய அனைத்தும் நல்லவையே.
கின்னஸ் சாதனைக்காக சிலர் நகங்களை வளர்க்கிறார்கள். இது சாதனைக்கு மட்டும்தான் உபயோகப்படுமே தவிர, வேறு எதற்கும் உபயோகப்படாது. ஹோட்டல்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் கையுறை எதுவும் போடாமல்தான் மாவைப் பிசைகிறார்கள். காய்கறிகளை வெட்டுகிறார்கள். இன்னும் சமையலறையில் நிறைய வேலைகளில், கரண்டிக்குப் பதிலாக, கைகள்தான் உபயோகத்தில் இருக்கின்றன. அவர்கள் இவ்வாறு வெறும் கைகளை சமையலுக்கு உபயோகிக்கும் போது, அந்த கைவிரல் நகங்களுக்கு உள்ளேயிருக்கும் அழுக்கும், கிருமியும், அந்த சமையலிலும் போய்ச் சேருமல்லவா! இது நல்லதா! எங்கெல்லாம் வெறும் கையில் உணவு தயாரிப் பதை நீங்கள் பார்க்கிறீர்களோ, அங்கெல்லாம், நீங்களே உடனடியாக அவர்களை `கையுறை’ போட்டு வேலை பார்க்கச் சொல்லுங்கள். நகம் வளர்ந்திருந்தால் உடனே வெட்டச் சொல்லுங்கள். அடுத்தவர்களை சொல்வதற்கு முன்பு, முதலில் நீங்கள் விரல் நகங்களை சுத்தமாக வைத்திருங்கள். வீட்டில் உள்ளவர்களையும் வாரா வாரம் நகத்தை வெட்டச் சொல்லுங்கள். குழந்தைகளுக்கு சிறிய வயதிலிருந்தே இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். அதிகமாக வளர்க்கப்படும் விரல் நகங்கள், நோய்க்கிருமிகளை சுமந்து கொண்டிருக்கும் ஒரு வேண்டாத பொருள் தானே தவிர, அழகுப் பொருள் அல்ல.

No comments:

Post a Comment