Thursday, April 7, 2011

2011-12 ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்



              யில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி  2011-12  ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை பிப்ரவரி 25-ஆம் தேதியன்று மக்களவையில் சமர்ப்பித்தார்.

இந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணங்களில் மாற்றம் ஏதும் செய்ய வில்லை.   ரயில்வேக்கு ரூ.57,630 கோடி திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய வழித்தடங்கள் ஏற்படுத்த ரூ.9,583 கோடி ஒதுக்கீடு, 1,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இருப்புப்பாதை, 867 கிலோ மீட்டர் இருப்புப்பாதை இருவழிப் பாதைகளாக மாற்றம், 1,017 கிலோமீட்டர் தூரம் இருப்புப் பாதை அகலவழிப் பாதை யாக மாற்றம்,  56 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், 3 புதிய சதாப்தி, 9 துரந்தோ ரயில்கள் அறிமுகம், புதிய சூப்பர் குளிர்சாதனவசதி பெட்டிகள் அறிமுகம் போன்றவை சிறப்பான அறிவிப்புகள் ஆகும்.

கணினி முறை பயணச்சீட்டுப் பதிவுக்கு புதிய இணையதளம், பான்-இந்தியா பல்முனை ஸ்மார்ட் கார்டு பயன்பாடு ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். 236 ரயில் நிலையங்கள் மாதிரி ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தவும், மும்பையில் 47 புறநகர் ரயில் சேவைகளும், கொல்கத்தாவில் 50 புதிய புறநகர் ரயில் சேவைகளும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. அதேபோல கேரளாவில் இரண்டு புதிய பயணிகள் ரயில் முனையங்களும், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு புதிய ரயில் நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட ரயில் போக்குவரத்து சிரமங்களை கணக்கில் எடுத்துக் கொண்டார் அமைச்சர். அதன்படி பாஸஞ்சர் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 முதல் 200 கிலோமீட்டர் அதிகரிப்பது, 8 ரயில்வே மண்டலங்களிலும் மோதலைத் தடுப்பதற்கான கருவி அமைத்தல், பனி மூட்டம் காரணமாக ஏற்படும் சேதத்தைத் தடுக்க கணினி முறை யிலான பனிமூட்ட பாதுகாப்பு கருவி, முதலியவை துவங்கப்படும். ஆளில்லாத 3 ஆயிரம் ரயில்வே கிராசிங்கு களை அகற்றவும்  அகில இந்திய அளவில் பாதுகாப்பு உதவிக்காக ஒரே எண்ணைக் கொண்ட பாதுகாப்பு உதவி தொலைபேசி அமைக்கவும் உத்தேசித்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த 7 ஆண்டுகளில் சிக்கிம் தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் தலை நகரங்கள் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்படுமெனவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாலங்களுக்கான தொழிற்சாலை ஒன்றும் ஜம்முவில் பாலம் மற்றும் குகை பாதைகள் அமைப்பதற்கான கழகம் ஒன்றும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மணிப்பூரில் டீசல் என்ஜின்களுக்கான மையம், ஜலிங்காம் மற்றும் நியூ பொங்கை காம் ஆகிய இடங்களில் ரயில் தொழிற்சாலை பூங்காக்கள், நாக்பூர், சண்டிகர் மற்றும் போபால் ஆகிய இடங்களில் துணிகளை தூய்மைப்படுத்துவதற்கான நிலையங்கள், மகாராஷ்டிராவில் தக்குர்லி என்ற இடத்தில் 700 மெகாவாட் திறனுள்ள எரிவாயு மின் நிலையம் போன்றவை அமைக்கப்படும்.
அதேபோல 2011-12-ஆம் ஆண்டில் 18 ஆயிரம் ரயில் பெட்டிகள் வாங்கப்படும். பிரதம மந்திரி ரயில் விகாஸ் திட்டத்தின்படி, சமூகத்திற்கான பயனுள்ள திட்டங்கள் துவக்கப்படும். மும்பை, சீல்டா, சிலிகுரி, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ரயில் பாதைகளுக்கு அருகே வசிப்பவர்களுக்காக 10 ஆயிரம் தங்குமிடங்கள் முன்னோடித் திட்டமாக அமைக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் சலுகைகள் ராஜதானி, சதாப்தி ரயில்களிலும் விரிவு படுத்தப்படும் என சமூக அக்கறையுடன் பட்ஜெட்டில் சில சலுகைகள் தெரிவிக்கப்பட்டன.        

பத்திரிகையாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை அளிக்கப்படும் 50 சதவிகித சலுகைக் கட்டணம் இருமுறை வழங்கப்படும். மூத்த குடிமக்களுக் கான சலுகைக் கட்டணம் 30 சதவிகிதத் திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்படும். 

நிரப்பப்படாமல் உள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான காலியிடங்கள் உட்பட சி மற்றும் டி பிரிவில் காலியாக உள்ள 1.75 லட்சம் பணியிடங்களை நிரப்பப்படும்.. விளையாட்டுக்கான சிறப்பு பிரிவு ஒன்று அமைக்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2011-12 ஆம் ஆண்டை அனுசரிக்க ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 6.4 சதவிகித மாகவும்,  சரக்குகள் போக்குவரத்து 993 மெட்ரிக் டன்னாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து வருவாய் ரூ.1,06,239 கோடியாக உயரும் என்றும் முதல் முறையாக ரூபாய் ஒரு லட்சம் கோடி என்ற அளவை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடைமுறை செலவுகள் ரூ.73,650 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது என ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார்.

No comments:

Post a Comment