மழை, குளிர் காலம் தரும் அவஸ்தைகள் ஏராளம். சளி, தும்மல், இருமல், தலைவலி என்று பாடாய்படுத்தி விடும். குளிர் காற்று காதில் நுழைந்து தொண்டையில் அமர்ந்து செய்யும் சேட்டைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள சில வழிகளைச் சொல்லட்டுமா?
குளிர் காற்று அதிகாலையில் வீட்டில் வேலைகளைத் துவங்கும் பெண்களை அதிகம் தாக்குகிறது. அதிகாலை எழுந்து விடும் அனைவரையும் குளிர் தாக்கும். குளிர் காலங்களில் அதிகாலை நேரத்தில் வெளியில் நடமாட நேர்ந்தால் உல்லன் துணிகளால் காதுகளை நன்றாக மூடி கட்டிக் கொள்ளலாம். [ஜாக்கிரதை முகமூடித் திருடனென முக்கில் நிர்க்கும் போலீஸ் சந்தேகத்தில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.] பஸ், பைக்கில் பயணிக்கும் போதும் இதை கடைபிடிப்பது சிறந்தது.
காதுத் தொற்று நோய்களின் மூலம் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். காதுத் தொற்று ஏற்படும் போது உடனடியாக மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஜலதோஷம் உள்ளிட்ட சுவாசத் தொற்றுகளின் வழியாகவே காது பாதிப்புக்கு உள்ளாகிறது. சளி காரணமாக எலும்புக் குழி மற்றும் யூஸ்டேச்சியன் குழல்களில் உள்ள படலங்களில் அழற்சி ஏற்பட்டு வீக்கம் உண்டாகும். குறிப்பாக குழந்தைகளின் யூஸ்டேச்சியன் குழல் பெரியவர்களைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். இதனால் அழற்சி ஏற்படுத்தும் தொற்றுகளினால் அவை உடனடியாக அடைபடும் வாய்ப்பு உள்ளது. அதனால் குழந்தைகளின் விஷயத்தில் கவணம் கொஞ்சம் அதிகமாக இருக்கனும்.
நடுக்காதில் திரவ தேக்கம் ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பல்கி பெருகும் சூழல் குளிர்காலத்தில் அதிகம் இருக்கும். இவற்றை தடுக்க காதில் வலி ஏற்பட்ட உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். சளித் தொல்லையின் அடுத்தகட்ட வளர்ச்சி இருமல்.
இருமல் மூலம் சுவாசப் பாதையில் அடைபட்டிருக்கும் சளி வெளியேற்றப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி இருமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தொடர் இருமலால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். அதே போல் சுவாசப்பாதையான மூக்கில் வைரஸ் தொற்றின் மூலம் சளி மற்றும் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் உண்டாகும்.
இந்த தொற்றின் அடுத்த கட்டமாக குரல் வளையில் வீக்கம் ஏற்பட்டு குரல் கரகரப்பதுடன் பேச முடியாத நிலை ஏற்படும். குளிர்காலத்தில் தூசு அலர்ஜி மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டியது மிகவும் அவசியம். இல்லை எனில் அவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும். குளிர்கால நோய்கள் காது, மூக்கு, தொண்டையை உடனடியாக பாதிக்கும் வாய்ப்புள்ளதால் அவற்றை தடுப்பதற்கான பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். சிறிய பிரச்னை வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியதும் அவசியம்.
சரி இதுக்கெல்லாம் என்ன ரெசிபி? இயற்க்கையான சில தீர்வுகள் சில சொல்கிறேன்.....
1. வெண்டைக்காய் சூப்:
6 வெண்டைக்காய்களை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வெறும் வாணலியில் வழவழப்பு போக வறுத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, தக்காளி 1 ஆகியவற்றை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். இத்துடன் வெண்டைக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பருப்பு வேக வைத்த தண்ணீர் இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் இரண்டு வெட்டிப் போடவும். சீரகம், மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இறக்கும் போது நான்கு சொட்டு எலுமிச்சை சாறு, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து இறக்கவும். குளிருக்கு குடிப்பதற்கு இதமாக இருக்கும்.
2. காலிபிளவர் சப்ஜி:
பெரிய காலிபிளவர் பூ ஒன்றை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் சின்ன வெங்காயம் ஒரு கப், தக்காளி 2, அரை மூடி துருவிய தேங்காயில் இருந்து எடுத்த தேங்காய்ப்பால், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், தக்காளி சாஸ் 1 டீஸ்பூன், தேவையான அளவு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கவும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூளை சேர்க்கவும். காலிபிளவரையும் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கடைசியில் தேங்காய்ப்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் தக்காளி சாஸ், உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். இதுவும் குளிரைத் தாங்கும் ஆற்றலைக் கொடுக்கும்.
3. அரிசி போண்டா:
இட்லி மாவு இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் நிலக்கடலையை மிக்சியில் பொடி செய்து இந்த மாவுடன் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கொட்டவும். இத்துடன் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைக்கவும். அரை மணி நேரம் மாவு ஊறிய பின்னர் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதுவும் சக்தியான குளிருக்கேற்ற சுவையான உணவுதான்.
சில உணவுக்கட்டுப்பாடுகள். (டயட்)
குளிர் காலத்தில் ஏற்படும் காது, மூக்கு, தொண்டை பிரச்னையைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம்?
குளிர் காலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த காற்றே இருப்பதால் சுவாச பிரச்னைகள் இருக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களை சுவாச பிரச்னைகள் எளிதில் தாக்கும். மேலும் சரியான உணவுப்பழக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களையும் குளிர்கால நோய்கள் உடனடியாக தாக்கும். குளிர்காலத்தில் டான்சில் பிரச்னையை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். எனவே குளிர்ச்சியான உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை (குறிப்பாக வெளிநாட்டில் தனியாக வாழும் ஆட்களுக்கு) வைத்து சாப்பிடுவதை தவிர்க்கவும். மீறி சாப்பிட்டே ஆக வேண்டுமென்ற கட்டாயத்திலிருப்பவர்கள் ஃபிரிட்ஜில் வைத்திருந்த உணவை சாப்பிடுவதற்கு சிறிது நேரம் முன்பு வெளியில் வைத்திருந்து நன்றாக சுட வைத்து சாப்பிடவும். ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் கீரை வகைகளை குறைவாக உணவில் சேர்க்கவும். குளிர் காலத்தில் ரத்தம் உறையும் தன்மை அதிகரிப்பதால் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதுவே சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் வருவதற்கு காரணம். குளிர் காலத்தில் நோய்த் தொற்று ஏற்படும் நபர்கள் உணவு வகைகள் சூடாக எடுத்துக் கொள்வது அவசியம். மசாலா வகை உணவுகள் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகள் தான் இந்த காலத்துக்கு ஏற்றது. பருப்பு வகைகள், முட்டை, மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். பாலில் குறைந்தளவு சர்க்கரை மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் குடிப்பதன் மூலம் தொண்டை சார்ந்த பிரச்னைகள் குறையும். உறையும் தண்மையுடைய கொழுப்பு எண்ணை மற்றும் உணவுகளைத் தவிர்க்கவும்.
இதேபோல் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி சத்து உள்ள பழங்கள், காய்கள் சாப்பிட வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி, தக்காளி, முட்டைக்கோஸ், கேரட் உள்ளிட்ட சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தமிழ்ப் பெண்ணாயிருந்து விட்டு பாட்டி வைத்தியம் சொல்லாமல் போவதா? இதோ சில பாட்டி வைத்தியம்..
* ஆடா தொடை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் போட்டுக்காய்ச்சி, அந்த எண்ணெய் யைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக் கட்டு, தலைவலி குணமாகும்.
* ஆடா தொடை வேர், கண்டங்கத்திரி வேர், திப்பிலி மூன்றையும் ஒன்றாக பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.
* ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.
* ஆகாயத் தாமரை இலைச்சாறுடன் பன்னீர், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாகும்.
* அவரை இலைச்சாறை துணியில் நனைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலை வலி, தலைபாரம், சைனஸ் பிரச்னைகள் சரியாகும்.
* ஒரு பிடி அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி, சைனஸ் ஆகியவை சரியாகும்.
* அதிமதுரம், ஆடாதொடை இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.
* அகில் கட்டை, திப்பிலி, சுக்கு, சித்தரத்தை அனைத்தையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் நோய்கள் குணமாகும்.
* அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப் பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.
குறிப்பு-
ஆடா தொடை, கண்டங்கத்திரி, அகில் கட்டை, திப்பிலி, சுக்கு, அதிமதுரம் இவைகள் எல்லாம் பக்கத்திலிருக்கும் நாட்டு மருந்துக் கடையில் கேட்டால் கிடைக்கும்.
|
No comments:
Post a Comment