உலகிலேயே மிகப்பெரும் பணக்கார இந்தியர் என்ற இடத்தை முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தக்க வைத்து கொண்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அவரது தம்பி அனில் அம்பானி இந்த டாப் 10 பட்டியலில் இடமிழந்தார்.
உலக அளவில் முன்னணியில் உள்ள 100 இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளிநாட்டில் இருந்து வெளியாகும் ‘போர்ப்ஸ்’ என்ற வர்த்தக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 100 இந்திய பெரும் பணக்காரர்களின் பட்டியல், ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் இந்திய பதிப்பில் நேற்று வெளியானது.
அதன்படி, உலகிலேயே மிகப்பெரும் பணக்கார இந்தியர் என்ற இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தக்க வைத்து கொண்டுள்ளார்.
அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி (22.6 பில்லியன் டாலர்) ஆகும். அவரது சொத்து மதிப்பு, கடந்த ஓராண்டில் ரூ.22 ஆயிரம் கோடி (4.4 பில்லியன் டாலர்) வீழ்ச்சி அடைந்துள்ளது. அதையும் மீறி, அவர் தொடர்ந்து நம்பர் 1 பணக்கார இந்தியராக இருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, வெளிநாட்டு வாழ் இந்திய தொழில் அதிபர் லட்சுமி மிட்டல், இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.96 ஆயிரம் கோடி (19.2 பில்லியன் டாலர்) ஆகும். ரூ.65 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார் விப்ரோ கம்ப்யூட்டர் நிறுவனத் தலைவர் அஸீம் பிரேம்ஜி.
4-ம் இடத்தில் எஸ்ஸார் குரூப்பை சேர்ந்த சசி ரூயா, ரவி ரூயா ஆகியோரும் (ரூ.61 ஆயிரம் கோடி), 5-ம் இடத்தில் சாவித்ரி ஜிண்டாலும் (ரூ.47 ஆயிரத்து 500 கோடி), 6-ம் இடத்தில் பார்தியின் சுனில் மிட்டலும் (ரூ.48 ஆயிரம் கோடி), 7-ம் இடத்தில் கவுதம் அதானியும் (ரூ.41 ஆயிரம் கோடி), 8-ம் இடத்தில் குமார் மங்கலம் பிர்லாவும் (ரூ.38 ஆயிரத்து 500 கோடி), 9-ம் இடத்தில் பல்லுன்ஜி மிஸ்திரியும் (ரூ.38 ஆயிரம் கோடி), 10-ம் இடத்தில் ஆதி கோத்ரெஜும் (ரூ.34 ஆயிரம் கோடி) உள்ளனர்.
நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.37 ஆயிரம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.29 ஆயிரத்து 500 கோடி ஆகும். அவர் முதன்முறையாக, டாப் டென் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் தற்போது 13-ம் இடத்தில் உள்ளார்.
இந்த ஆண்டு பட்டியலில் 14 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். 100 பேர் பட்டியலில் 57 பேர் பில்லியனர்கள்.
பணக்கார இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் (ரூ.30 ஆயிரம் கோடி) வீழ்ச்சி அடைந்திருப்பதாக இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பண வீக்க உயர்வு, ஊழல், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பங்கு சந்தை வீழ்ச்சி ஆகியவையே காரணம் என்று ‘போர்ப்ஸ்’ தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில், சன் பார்மசூட்டிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் திலீப் சாங்வி, ஹீரோ குரூப் பி.எம்.முஞ்சால் ஆகியோர் உள்பட 19 பேரை தவிர, மற்றவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்து இருப்பதாக இந்த பட்டியல் தெரிவிக்கிறது.
ஒவ்வொருவரது நிறுவனங்களின் பங்கு மதிப்புகள், குடும்ப சொத்துகள், பண பரிவர்த்தனை விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டு இருப்பதாக ‘போர்ப்ஸ்’ தெரிவித்துள்ளது.
|
இந்த அருமையான தகவலுக்கு மிக்க நன்றி.
ReplyDelete