கருப்புப்பெட்டி (Blackbox) என்பது விமானங்களின் தொழில்நுட்ப நிலைகளைப் பதிவு செய்ய விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு தகவல் சேமிப்பு கருவி. விமானத்தில் கருப்புப்பெட்டி பொருத்துவதென்பது ஓவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக முயற்சிக்கப் பட்டு மேம்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக 70 வருடங்களுக்கு முன்னால் பிரான்ஸில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதே இதன் ஆரம்பம். வரலாறு ரொம்ப சொன்னா கொட்டாவி வரும் ஆபத்திருப்பதால், நாம் கருப்புப் பெட்டிக்குள் நுழைவோம்.
கருப்புப்பெட்டி ஒரு சுவாரஸ்யமான கருவி, அதன் குணாதிசயங்கள் ஆச்சர்யமானவை. 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 60 நிமிடங்களுக்கு மேலாகவும், அழுத்தம் மிகுந்த கடல் நீரில் நான்கு வாரம் வரைக்கும், சுமார் முப்பாதாயிரம் அடி உயரத்தில் இருந்து தரையில் வீழ்ந்தாலும், 2000 கிலோ வரையிலான சுமையைத் தாங்கினாலும் எந்த சேதாரமும் இல்லாமல் அமைதியாய் இருக்கும். எப்படி? முதலில் அலுமினியம், பின்னர் உலர் சிலிகா, அதன் பின்னர் டைட்டானியம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு மிக மிக உறுதியான கொள்கலனுக்குள் வைக்கப் பட்டிருப்பது தான் எதையும் தாங்கும் இதயமாக கருப்புப்பெட்டி இருக்கக் காரணம். இவ்வளவு பாதுகாப்பாகத் தயாரிக்கப்பட்டாலும், எல்லா சம்பவங்களிலும் கருப்புப்பெட்டி சேதமின்றி கிடைப்பதில்லை. இந்தக் கருப்புப்பெட்டி கருப்பு வண்ணத்தில இருக்காது, சிவப்பு அல்லது அடர்மஞ்சள் வண்ணத்தில் இரவிலும், பகலிலும், தண்ணீருக்கடியிலும் எளிதில் அடையாளங்காணும் வகையில் இருக்கும். இருந்தாலும் ஏன் கருப்புப்பெட்டி என்று பெயர் வந்தது?, ஆரம்ப காலத்தில் photosensors (தமிழில்?) பயன்படுத்தித் தான் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுவந்தது, அதனால் ஒளி ஊடுருவ இயலாத வகையில் பெட்டி வடிவமைக்கப்பட்டதால் blackbox கருப்புப்பெட்டி என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் photosensors நீக்கப்பட்டு மின்காந்த நாடாக்கள் (Electromagnetic tapes) அதன் பின் மெமரி போர்டுகளாக மாற்றம் பெற்றது.
கருப்புபெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால்பகுதியிலேயே பொருத்தப்பட்டிருக்கும், சில சமயங்களின் மேற்கூரையிலும் பொருத்தப்படுவதுண்டு. காரணம் அந்த பகுதிகளில் தான் விபத்தின் போது ஏற்படும் அதிர்வுகள் குறைந்து இருக்கும், மேலும் அனேகமாக கடைசியாக விபத்தினால் பாதிக்கப்பட போகும் இடமாகவும் இருக்கும். கருப்புப்பெட்டியில் இரண்டு பகுதிகள் உண்டு, விமானிகளின் கட்டுப்பாட்டு அறையில் எழும் அனைத்து ஒலிகளையும் பதிவு செய்ய cockpit voice recorder (CVR) மற்றும் விமானத்தின் பறக்கும் உயரம் உட்பட இயந்திர பாகங்களின் செயல்பாட்டு நிலைமை அனைத்தையும் பதிவு செய்ய flight data recorder (FDR). பெருவாரியான விபத்துகள் அத்துவானக் காடுகளிலோ அல்லது கடல்பகுதியிலேயோ தான் நடைபெறுகின்றன. விபத்து குறித்துத் தகவல் கிடைத்தவுடன் மீட்புப்பணிகள் ஒருபுறம் நடந்தாலும் அதைவிட பரபரப்பாக விசாரணை அதிகாரிகளின் கருப்புப்பெட்டித் தேடல் வேலையும் நடந்து கொண்டிருக்கும்.
FDR மற்றும் CVR தவிர beacon எனப்படும் ultrasonic ஒலிக்கருவியும் கருப்புப்பெட்டியில் இருக்கும். ஒருவேளை விபத்துகள் கடல்பகுதியில் நடந்தால், தண்ணீரில் மூழ்கிய மறுகணம் ஒவ்வொரு நொடியும் beacon கருவி ultrasonic ஒலியலைகளை சுமார் 14000 அடி வரை பரப்பும். தேடல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் sonar கருவிகள் மூலம் ஒலியலைகளை இனம் கண்டு கடலுக்கடியில் இருக்கும் கருப்புப்பெட்டியைக் கண்டுபிடிப்பார்கள். இந்த beacon கருவி கருப்புப்பெட்டியை மட்டுமின்றி விமான விபத்து நடந்த கடல்பகுதியையும் கண்டுபிடிக்க உதவி செய்து, அதன் மூலம் யாரேனும் தப்பிப்பிழைத்திருந்தால் அவர்களையும் கூடுமானவரை விரைவில் மீட்டெடுக்க உதவி புரிகிறது.
விபத்துக்கான சரியான காரணங்கள் பற்றியும், அதனைத் தவிர்ப்பதற்கான விமானிகளின் கடைசி நிமிட போராட்டங்கள், அவர்கள் கையாண்ட உத்திகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமின்றி எதிர்காலத்தில் அது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க விமானிகளுக்கு சிறப்புப் பயிற்சி அல்லது விமான வடிவமைப்பில் அதிக நவீனப்படுத்தப்பட்ட மாற்றம் ஆகியவற்றின் தேவை குறித்து முடிவெடுக்கவும் கருப்புப்பெட்டியே மூலாதாரம்.
கருப்புப்பெட்டி குறித்து ஓரளவு அறிமுகம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த பகுதியில் கருப்புப்பெட்டியில் இருக்கும் தகவல்களை எவ்வாறு மீட்டெடுப்பது, மீட்டெடுக்க்ப்படும் பணியில் உள்ள சிக்கல்கள், எந்தெந்த நாடுகளில் கருப்புப்பெட்டித் தகவல்களைப் படிக்கும் வசதி உள்ளது ஆகியவைக் குறித்துப் பார்க்கலாம்.
ஒரு விமானத்தின் கருப்புப் பெட்டி அந்த விமானத்தை இயக்கும் நிறுவனத்தின் சொத்து. அதில் உள்ள தகவல்கள் குறித்து அந்த விமான நிறுவனத்துக்கும் விபத்து நடந்த நாட்டைச் சேர்ந்த விசாரணைக்குழுவுக்குமே முழு அதிகாரம் உண்டு. அவர்கள் விரும்பினால் வெளியிடலாம் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, காக்கா மோதியதால், மோசமான வானிலை காரணமாக என்று மிளகாய் அரைக்கப்படலாம். அவை விபத்துக் காரணங்களில் உள்ள வில்லங்கத்தைப் பொறுத்தது. விமான விபத்து என்பது பெரும்பாலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கருப்புப்பெட்டித் தகவல்கள் அதிமுக்கியம் வாய்ந்தவையாக கருதப்படும்.
ஒரு கருப்புப்பெட்டி எந்த ஒரு நிலையிலும் கடந்த 25 மணி நேர விமானத் தகவலும், 30 நிமிட விமானி அறையின் உரையாடல்களையும் கொண்டிருக்கும். கருப்புப்பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்றுகளும், பூஜ்யங்களுமாகவே இருக்கும் (Binary Format). கருப்புப்பெட்டியில் இருக்கும் மெமரி, data frame எனப்படும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த data frame பகுதிகளில் தகவல் சேமிப்பதற்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஒரு data frame என்பது 48 bits கொண்ட ஒரு binary word ஆக இருக்கும். இதற்கும் மேலாக இந்த data frame தன்னிடத்தில் சேமித்து வைத்திருக்கும் ஒன்றுகளும், பூஜ்யங்களும் விமானத்தகவல்களில் எதைக் குறிக்கின்றன, எந்த வரிசையில் குறிக்கின்றன (உயரம், நேரம், இயந்திரங்களின் நிலைகள்) இவையெல்லாம் பற்றிய தகவல் கோர்வையே data frame layout என்று அழைக்கப்படுகிறது. கருப்புப்பெட்டி மெமரியின் data frame layout பற்றித் தெரியாமல் ஒருவர் அதிலுள்ள தகவல்களைப் பார்த்தால் வெறும் ஒன்றுகளும் பூஜ்யங்களுமாகத் தான் தெரியும்.
கருப்புப்பெட்டி உலகில் பல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனங்கள் சர்வதேச வரைமுறைகளின் படி தயாரித்தாலும். data frame layout என்பது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். எனவே எந்த ஒரு விமான சேவை நிறுவனமும் தாங்கள் இயக்கும் அனைத்து விமானங்களிலும் இருக்கும் கருப்புப்பெட்டி குறித்தான தகவல்கள் மற்றும் அவற்றின் data frame layout ஆகியவ்ற்றை உயிரினும் மேலாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். விபத்து நடந்த பின் கருப்புப்பெட்டித் தகவல்களின்றி தலை சொரியும் விமான சேவை நிறுவனங்கள் தங்கள் உரிமத்தைக் கூட இழக்க நேரிடும்.
எப்பொழுதுமே இந்த கருப்புப்பெட்டி செய்திகளில் அடிபடும் போதெல்லாம் கூர்ந்து கவனித்தால் விபத்து குறித்த தகவல்கள் தெரிவிக்க பத்து நாட்களாகும், ஒரு மாதமாகும் என்று சொல்லுவார்கள். ஏன்?. உண்மையில் கருப்புப்பெட்டியில் இருக்கும் தகவல்கள் கணினிகளில் சில நிமிடங்களில் மேலே படத்தில் உள்ள கருவி (Blackbox readout interface module) மூலம் சேமிக்கப்படும். மற்ற ஒன்பது நாட்களும் சேமித்த தகவல்கள் அனைத்தையும் மீள்கட்டமைப்பு (decoding) செய்வதிலே தான் செலவாகும். இந்த தகவல்களை மீள்கட்டமைப்பு செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. அதைச் செய்ய ஒரு குழு அமைக்கப்படும். விபத்துக்குள்ளான விமானத் தயாரிப்பு நிறுவனம், விசாரணைக் குழு, விமானத்தின் உரிமையாளர்/நிறுவனம் இவர்கள் அனைவரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் தான் தகவல்களை மீள்கட்டமைப்பார்கள். தொழில்நுட்ப ஆலோசனைகளை உடனுக்குடனே பெறவும், தகவல் பறிமாற்றம் எளிதாக நடக்கவுமே இந்த ஏற்பாடு.
இவை அனைத்துக்கும் மேலே கருப்புப்பெட்டி விபத்துக்குப்பின் கண்டுப்பிடிக்கப்படும் போது உள்ள நிலையும் தாமதத்திற்குக் காரணமாக அமையும். பெரும்பாலும் அடிவாங்கிய சொம்பு போல தான் கருப்புப்பெட்டி கிடைக்கும். சில சமயங்களில் மெமரி போர்டுகளும் பாதிப்படைவதுண்டு. தண்ணீருக்குள் இருந்து கண்டெடுக்கப்படும் கருப்புப்பெட்டிகள் ஆய்வு மையங்களுக்கு அனுப்பப்படும் போது beacon கருவியை நீக்கிவிட்டு ஒரு தண்ணீர் நிரப்பிய பாலிதீன் பையில் வைத்தே அனுப்புவது வழக்கம். ஈரம் உலர்வதால் ஏற்படும் ரசாயன மாற்றங்களைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. ஆய்வு மையத்தை அடைந்ததும் கருப்புப்பெட்டித் திறக்கப்பட்டு மெமரி போர்டுகளுக்கு முதலுதவி அளித்து, பாதிக்கப்பட்ட உதிரி பாகங்களை மாற்றி தகவல்களை மீட்டெடுப்பார்கள்.
இந்த கருப்புப்பெட்டி ஆய்வகம் அமைப்பதென்பது எளிதானது தான் என்றாலும் அதற்குரிய நிபுணர்கள் உலகளவில் மிகக்குறைவு. மேலும் அனுபவமிக்க நிபுணர்கள் மிகமிகக் குறைவு. மேலும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் நிபுணர்கள் அவ்வப்போது கருப்புப்பெட்டித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுத்து நாங்களும் யூத்து தான் என்று சொல்ல முடிந்தால் மிக நன்று. இந்த ஆய்வக வசதிகள் உலகில் எந்தெந்த நாடுகளில் உள்ளன?
நைஜீரியா,தென்னாப்பிரிக்கா,ரஷ்யா, இந்தியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், தைவான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனோசியா, தென் கொரியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, சால்வடர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, பிரேசில் மற்றும் கொலம்பியா என கோபால் பல்பொடி கிடைக்கும் அனைத்து நாடுகளிலும் கருப்புப்பெட்டி ஆய்வகங்களும் இருப்பது தனிச்சிறப்பு.
மற்ற நாடுகள் தங்கள் நாட்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மேற்கூறிய நாடுகளில் ஒன்றுக்கு அனுப்பி விசாரணையைத் தொடங்குவார்கள். அதுபோக கைப்பற்றப்பட்டக் கருப்புப்பெட்டியின் நிலைமை, ஆய்வக வசதி இருந்தாலும் அந்நாட்டின் நிபுணர்களின் அனுபவம், மெமரி போர்ட் பாதிப்புகள் ஆகியவற்றைப் பொருத்து அனுபவமிக்க நாடுகளுக்கு அனுப்புவதும் உண்டு. கருப்புப்பெட்டி விபத்து மர்மங்களுக்கு அருமருந்தாக இருப்பதை அனுபவத்தில் உணர்ந்து கார் தயாரிப்பாளர்கள் பல உயர்ரக கார்களிலும் கூட கருப்புப்பெட்டி பொருத்தத் துவங்கினர் உ.தா. pontiac sunfire.
எதிர்வரும் காலங்களில் கருப்புப்பெட்டி அல்லது விமான விபத்துகள் பற்றிய செய்திகளை நீங்கள் எதிர்கொள்ளும் போது உங்களின் பார்வை மாறியிருக்கும். அப்படி மாற்றுவதே இப்பதிவின் நோக்கம். ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கு நன்றி கூறி இத்தொடர்
|
No comments:
Post a Comment