Friday, December 9, 2011

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 15

வருங்காலத் தொழில்நுட்பம் 86 : புதுமை செய்யும் ஆற்றலுக்குரிய ஐந்து திறமைகள் என்ன?

இன்னொரு புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டது. தொழில்நுட்பப் படிப்புகளின் மீதுள்ள ஆர்வம் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்தியா வில் இருக்கையில், தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.


கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் சேரப்போகும் சோனேஷின் பெற்றோர்கள் இருவரும் டாக்டர்கள் என்றாலும், சோனேஷின் விருப்பம் தொழில்நுட்பம். கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கும் ரோஷனின் அப்பா பஸ் கண்டக்டர், அம்மா ஆரம்பப் பள்ளி ஆசிரியை. ஒவ்வொருவருக்கும் பலவிதக் கனவுகள். 10 வருடங்களுக்கு முன் தொழில்நுட்பம் கற்றால் ஏதோ ஒரு நிறுவனத்தில் வசதியாக வேலை கிடைக்கும் என்பது மட்டுமே உந்துகோலாக இருந்தது. இணையமும், அலைபேசித் தொழில்நுட்பங்களும், மாறி வரும் உலகச் சூழலும் தொழில்முனைதல் (entre preneurism) மற்றும் புதுமை செய்தல் (inno vation) போன்றவை அத்தனை கடினம் அல்ல என்ற நிலையைக் கொண்டுவருவது தெளிவாகப் பார்க்க முடிகிறது.
அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் (Apple) போலவோ, லேரி பேஜ் (Google) போலவோ மார்க் ஸக்கர்பெர்க் (Facebook) போலவோ வருவதற்கான வாய்ப்புகள் என்ன?

வெற்றிகரமான Innovator ஆவதற்குப் பிறப்பிலேயே திறமை இருக்க வேண்டுமா? அதெல்லாம் தேவை இல்லை என்கிறார்கள் 'The innovators DNA: Mastering the five skills of disruptive innovators’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள். பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் (Problem Solving Skills), தீவிரப் பயிற்சியோடு (Practice) இணையும்போது புதுமை செய்யும் ஆற்றல் வந்துவிடுகிறது. இதற்கு ஜீன்ஸ் தேவை இல்லை என்பதுதான் புத்தகத்தின் அடிப்படை.

அந்த ஐந்து திறமைகள் என்ன? பார்க்கலாம்.

கேள்வி கேட்டுக்கொண்டே கேளுங்கள்!

குறிப்பாக, 'What if’ வகை கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருங்கள். பயனீட்டா ளர்கள் உங்களது பொருளுக்குக் குறைந்த விலையே கொடுக்கத் தயாராக இருந்தால், அதை எப்படி வடிவமைப்பீர்கள்? அவர் களுக்குப் பணம் ஒரு பொருட்டாகஇல்லை என்றால், உங்கள் வடிவமைப்பு எப்படி மாறும்? நீங்கள் உங்கள் பொருளை/தீர்வை வெளியிடும் முன், இன்னொரு போட்டி யாளர் வெளியிட்டால் என்ன செய்வீர்கள்? என்ற ரீதியில் கேட்டுக்கொண்டே இருங்கள். மற்றவர்களிடம் அல்ல... உங்களிடம் நீங்களே!

மற்றவர்கள் பார்க்காதவற்றை உற்று நோக்குங்கள்!

இருக்கும் இடங்களில் உள்ளவற்றை வெறுமனே பார்க்காதீர்கள் அவற்றை உற்றுநோக்கி, உள்வாங்கிக்கொண்டு மனதில் அலசுங்கள். இந்தத் திறனை வளர்க்க அடிக்கடி புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது உதவும். தெரியாத புதிய இடங்களுக்குச் செல்லும்போது, அங்கு இருப்பவர்கள் அந்தச் சூழலைப் பார்ப்பதைவிட, நீங்கள் கூர்மையாக உற்றுநோக்குவீர்கள். நாளடைவில், அது உள்ளார்ந்த திறனாகவே மாறிவிடும்!

சரியான நட்பு வட்டத்தில் ஈடுபடுங்கள்!

பொதுவாக, மக்களின் மனோநிலை அவர்களைப் போன்றவர்களுடன் நட்பு வட்டத்தில் இணைவதுதான்- Birds of the same feather fly together - ஆனால், புதுமை செய்ய விரும்பும் தொழில்முனைவோர், தமது சமூக வட்டத்தைத் தாண்டி புதிய network ஐ வளர்த்துக்கொள்வது மிகமிக அவசியம். அப்போதுதான் உங்களது எண்ணங்கள் விசாலமாகும். அது புதுமைக்கு இழுத்துச் செல்லும்!

பரிசோதனை மூலம் கற்றுக்கொள்ள பயப்பட வேண்டாம்!

விர்ஜின் நிறுவனத்தின் ரிச்சர்ட் ப்ரான்சன் இதற்கு நல்ல உதாரணம். ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத, கிட்டத்தட்ட 300 நிறுவனங்களை நடத்துகிறார் இவர். என்ன துறையில் பிசினஸ் தொடங்க வேண்டும் என்றாலும், இவர் தயார். லாபமாக நடந்தால் தொடர்ந்து நடத்துவார். நஷ்டம் அடைந்தால், மூடிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்.

இந்த நான்கு திறமைகளையும் பயிற்சி செய்தபடியே இருந்தால், ஐந்தாவது தானாகவே வந்துவிடும். அது...

Associational Thinking!

சம்பந்தம் இல்லாத பல பிரச்னைகளை யும் அவற்றைத் தீர்ப்பதற்கான ஐடியாக் களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்க முடிகிற திறன் என்று இதைச் சொல்லலாம். வெற்றிகரமாகப் புதுமைகளைச் செயல் படுத்தும் தொழில்முனைபவர்களிடம் இந்தத் திறன் இருப்பது தெரியவரும் என்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள்.

'சிங்களத் தீவினுக்கோர்
பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி
வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும்
நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்
செய்குவோம்!’

என்றெல்லாம் பிரமாண்ட கட்டுமானத் தொழில்நுட்பக் கனவுகளை மட்டுமே ஒரு காலத்தில் காண முடிந்தது. இந்தியா போன்ற வளரும் பொருளாதாரச் சமூகத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். ஒவ்வொரு பிரச்னையின் தீர்வும் புதுமை செய்வதற்கான வாய்ப்பு. இந்தக் கட்டுரையின் தாக்கத்தினால் 'யாரிடமாவது வேலைக்குப் போவதைவிட, கம்பெனி ஒன்று தொடங்கப் போகிறேன்!’ என்று ஒரு மாணவராவது முடிவு செய்தால், அதை இந்தக் கட்டுரைத் தொடரின் மிகப் பெரிய வெற்றியாகக் கருதுவேன்!

No comments:

Post a Comment