ஐஸ்வர்யா ராய் பச்சன்... அபார அழகு தேவதை! தகுதியும் திறமையும்
அழகாகச் சங்கமித்த ஹைக்கூ கவிதை. பசையாக இழுக்கும் பச்சைக் கண்கள்தான் இன்று உலக அழகின் உச்சம்!
மங்களூரில் 1973-ம் வருடம் நவம்பர் 1-ம் தேதி பிறந்தார். பெற்றோர்கள் கிருஷ்ணராஜ் ராய் மற்றும் விருந்தா ராய். ஒரே ஒரு அண்ணன் ஆதித்யா ராய்!
அப்பா, அண்ணா இருவரும் கடற்படையில் பணி புரிந்தவர்கள். இதனால், தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்த ஐஸ், 'என் அம்மாவின் உற்சாகஊட்டல்தான் என் இப்போதைய சாதனைக்குக் காரணம்' என்பார்!
தேர்ந்த ஆர்க்கிடெக்ட் ஆக வேண்டும் என்பது தான் ஐஸ்வர்யாவின் லட்சியம். ஆனால், ஆர்க்கிடெக்ட் படிக்கும்போதே, மாடலிங் வாய்ப்புகள் குவிய, அழகுப் புயல் அப்படியே திசை திரும்பிவிட்டது!
கேமலின் நிறுவன விளம்பரத்தில் முதன்முதலில் ஐஸ் நடித்தபோது, அவருக்கு வயது ஒன்பது. பகுதி நேர புகைப்படக்காரரான தனது ஆசிரியர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாகத்தான், அந்த விளம்பரத்தில் நடித்தார்!
பள்ளி நாட்களில் டான்ஸ், டிராமா என ஏரியா வாரியாக வெளுத்துக்கட்டினாலும், கணக்கில் ஐஸ்வர்யா கொஞ்சம் வீக். 'நீ எல்லாவற்றிலும் சிறந்தவள் என்று என்னால் சொல்ல முடியாது!' என்று அவருடைய கணித ஆசிரியை சொன்னதை இன்றுவரை மறக்க வில்லை ஐஸ். அன்று முதல் இன்று வரை, கடுமையான விமர்சனங்களுக்கு ரொம்பவே மனம் வருந்துவார்!
1994 'மிஸ் இந்தியா' போட்டியில் சுஷ்மிதா சென் அழகிப் பட்டம் வென்றார். அதில் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது இடம். அதே வருடத்தில், உலக அழகிப் போட்டியில் இன்னும் தைரியம், நம்பிக்கை சேர்த்து கலந்துகொண்டார் ஐஸ். உலக அழகிப் பட்டத்தோடு மிஸ் போட்டோஜெனிக் பட்டமும் ஐஸ் வசம்!
ஐஸ்வர்யாவின் 21-வது பிறந்த நாள் பரிசாகக் கிடைத்தது 'உலக அழகிப் பட்டம்'! அழகி கீரிடம் சூடிய உடன், அரங்கில் இருந்து அனைவரும் தத்தமது மொழிகளில் 'பிறந்த நாள் வாழ்த்து' பாடிய பெருமை இவரைத் தவிர, வேறு அழகிகளுக்குக் கிடைக்கவில்லை!
'மற்ற நாட்டுப் போட்டியாளர்கள் 'இந்தியர்களைப் படிப்பறிவு இல்லாதவர்கள். துளியும் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள்' என்று மட்டம் தட்டிக்கொண்டே இருப் பார்கள். அதைப் பொய்யாக்கும் வேகம்தான் உலக அழகிப் பட்டம் பெற எனக்கு உத்வேகம் ஏற்படுத்தியது!' என பேட்டிகளில் அடிக்கடி குறிப்பிடுவார் ஐஸ்வர்யா!
மாடலிங் நாட்களில் இருந்தே ஐஸ்க்ரீம் தவிர்ப் பவர். நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர், கொஞ்சம் உடற்பயிற்சி, காய்கறி மற்றும் பழங்கள்தான் ஐஸின் ஃபிட்னெஸ் ரகசியம்!
1997-ல் மணிரத்னத்தின் 'இருவர்' படம்தான் சினிமாவுக்கு ஐஸின் அறிமுகம். அதே ஆண்டு பாபி தியோலுடன் ஐஸ் நடித்த முதல் இந்திப் படமான 'Aur pyar Ho Gaya' செம ஃப்ளாப். ஆனாலும், 'சிறந்த புதுமுகம்' விருது வென்றார் ஐஸ்!
1999-ல் இவர் நடித்து வெளியான 'Hum Dil De Chuke Sanam' படம் ஃபிலிம்பேர் விருது பெற்றுத் தந்தது. 'அழகு பொம்மை' அடையாளம் உடைத்து 'திறமையும் நிரம்பியவர்' என்று, முதல் அழுத்த முத்திரை பதித்தார்!
இளவரசி டயானாவுக்குப் பிறகு காதல், திருமணச் செய்திகளுக்காக பத்திரிகையாளர்கள் அதிகமாகப் பின் தொடர்ந்தது ஐஸ்வர்யாவை என்கிறார்கள்!
கர்னாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை முறையாகக் கற்றவர். தொடர்ந்து பரத நாட்டியமும் கற்றுக்கொண்டார். சினிமாக்களில் ஐஸ்வர்யாவின் பரத அசைவுகள் அனைத்தும் சொந்த முனைப்புதான்!
ஆயுர்வேதப் பொருட்களை மட்டுமே உபயோகிப் பார். வீட்டு சமையல் பொருட்களையே மேனி பராமரிப் புக்கும் பயன்படுத்துவார். இரவு உறங்கச் செல்லும்முன் மேக்கப் கலைக்க ஐஸ் பயன்படுத்தும்மாய்சரைஸர்... சுத்தமான பசும் பால்!
17 ஆயிரம் வெப்சைட்டுகள் ஐஸ்வர்யாவுக்காகத் தங்கள் தளத்தில் பிரத்யேக இடம் ஒதுக்கி இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக அதிக பக்கங்களை ஆக்கிர மித்து இருப்பவர் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்!
2004-ல் 'டைம்ஸ்' பத்திரிகை, உலக அளவில் மக்களை ஈர்த்த 100 அழகுப் பெண்களில் ஐஸ்வர்யாவையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது!
2005-ல் பார்பி நிறுவனம், இங்கிலாந்தில் ஐஸ்வர்யா ராயைப் போல் தோற்றம்கொண்ட பார்பி பொம்மைகளை விற்பனைக்கு வெளியிட்டது. ஒரே நாளில் எல்லா பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இன்றும் அந்த கலெக்ஷன் பொம்மைகளுக்கு ஏக டிமாண்ட் உண்டு!
அமெரிக்காவின் பிரபல 'ஓப்ரா வின்ஃப்ரே ஷோ'வில் கலந்துகொண்ட முதல் இந்திய நடிகை ஐஸ்தான். அந்த ஷோவில், 'நீங்கள் மிக விரைவாக சேலை கட்டிக்கொள்வீர்களாமே!' என்று ஓப்ரா கேட்க, பதில் சொல்லவில்லை ஐஸ்வர்யா. ஒரு சேலையை நான்கே நிமிடங்களில் ஓப்ராவுக்கு அணிவித்து அப்ளாஸ் அள்ளினார்!
லண்டனில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மெழுகு மியூஸியத்தில் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண் மெழுகுச் சிலை, அழகுச் சிலை ஐஸ்வர்யாவினுடையதுதான்!
இவரிடம் உள்ள வாட்ச்களை வைத்து ஒரு கண்காட்சியே நடத்தலாம். அவ்வளவு பெரிய கலெக்ஷன். இவர் பிராண்ட் அம்பாஸடராக இருக்கும் Longines வகை வாட்ச்களின் ஆரம்ப விலையே 18 ஆயிரம்!
'குரு' பட ஷூட்டிங் சமயம், ஹோட்டல் லாபியில் ஐஸ் நின்று கொண்டு இருந்தார். கையில் ஒற்றை ரோஜாவோடு வந்து அப்போது காதலைச் சொன்னார் அபிஷேக் பச்சன். தன்னைவிட, மூன்று வயது இளையவரான அபிஷேக் பச்சனுக்கு உடனே ஓ.கே. சொல்லிவிட்டார் ஐஸ்வர்யா ராய்!
சமீபத்திய பேட்டி ஒன்றில், 'என் அப்பாவைப்போல இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை!' என்று பூரித்தார் அபிஷேக் பச்சன். அடுத்த நொடியே, 'ஆனால், இதற்கு ஐஸ்வர்யா ஈடுபாடு காட்டவில்லை!' என்று தன் வருத்தத்தை யும் பதிவு செய்துவிட்டார்!
நிஜ வாழ்வில் ஐஸ்வர்யா, அபிஷேக் கெமிஸ்ட்ரி அபாரமாக இருந்தாலும், நிழல் பதிவான 'குரு' மற்றும் 'ராவணா'வில் அது எடுபடவில்லை என்பது தம்பதிகளுக்கே சற்று வருத்தம்தான்!
எத்தனையோ விளம்பரங்கள், சினிமாக்களில் உடல் மறைக்கும் நகைகள் அணிந்து நடித்து இருந்தாலும், தங்கத்தின் மீது ஒரு துளிகூட விருப்பம் இல்லாதவர்!
தன் நீலம் கலந்த பச்சை விழிகளே தனது இத்தனை புகழுக்கும் காரணம் என்று நம்புகிறார் ஐஸ்வர்யா!
|
No comments:
Post a Comment