தேர்தல் திருவிழா பர பரப்பிலும், 'சும்மா அதிருதில்ல’ பாணியில் தமிழக மக்கள் கொடுத்த தேர்தல் முடிவுகளின் அதிர்ச்சியிலும், சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் டெக் உலகை எப்படிப் பாதித்தன என்பதை எழுத இத் தொடருக் குப் பக்கங்கள் கிடைக்கவில்லை. ஒசாமா பின்லேடன், அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது சம்பந்தப்பட்ட இணைய நிகழ்வினை முதலில் பார்க்கலாம்:
பொதுவாக, வெள்ளை மாளிகை மீடியாவுக்கு வெளியிடும் புகைப்படங்களுக்குத் தனி அர்த்தம் உண்டு. புகைப்படங்கள் கேஷ§வலாக இருந்தாலும், அவற்றை வெளியிடுவதன் காரணங்கள் பல வகைகளாக இருக்கும். இந்த நிகழ்வை அடுத்து வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படங்கள் அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்துவது, தாக்குதல் நடந்தபோது அதைக் கவலை சூழ்ந்த முகத்துடன் பார்த்தபடி இருப்பது எனப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க பாயின்ட், எப்போதும்போல் அல்லாது, பாரம்பரிய ஊடகங்களுக்கு புகைப்படங்கள் கொடுக்கப்படவில்லை. மாறாக, புகைப்படங்களைப் பரிமாறிக்கொள்ளும் ஃப்ளிக்கர் (www.flickr.com) தளத்துக்குக் கொடுக்கப்பட, அது வெளியான ஒரு மணி நேரத்துக்குள் 6 லட்சம் பேர் புகைப்படங்களைப் பார்த்தனர். யாஹூ நிறுவனத்தால் இயக்கப்படும் ஃப்ளிக்கர் தளத்தில் 5 பில்லியனுக்கு மேற்பட்ட புகைப்படங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. வெள்ளை மாளிகையின் ஃப்ளிக்கர் ஆல்பத்தைப் பார்க்க, இங்கே சொடுக்கவும் - http://www.flickr.com/photos/whitehouse
பின்லேடனின் கொலையை அமெரிக்கர்கள் வீதிகளில் நள்ளிரவு நேரத்திலேயே கொண்டாட ஆரம்பிக்க, பல இடங்களில் பல விதங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் யூ டியூபில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டன. சில மணி நேரங்களில் 13,000-க்கும் மேற்பட்ட கொண்டாட்ட வீடியோக்கள்...
20 வருடங்களுக்கு முன்னால் இதுபோன்ற நிகழ்வுகளின்போது, செய்தித்தாள்களுக்கு டிமாண்ட் இருக்கும். ஸ்பெஷல் எடிஷன் என்றெல்லாம் பரபரப்பாக விற்பனை நடக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுபோன்ற நிகழ்வுகளை கவர் செய்ய டி.வி. என்ற பாரம்பரிய ஊடகம் இருந்தது. பில்லியன் மக்களுக்கு மேல் மக்களை இணைத்துவைத்து இருக்கும் இணையமும் அலைபேசித் தொழில்நுட்பமும் 'Breaking News’ என்றால், அது இணையத்தின் மூலமாக நுகர முடியும் என்பதை நோக்கி நகர்ந்துகொண்டு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
மிகப் பிரபலமான செய்தியாக இருப்பதால், இதைப் பயன்படுத்தி இணையப் பயனீட்டாளர்களை ஏமாற்றி, தங்களது வைரஸ் மென்பொருட்களை தரவிறக்கம் செய்யவைத்த சைபர் பொறுக்கித்தனம் நிறையவே நடந்தது. பின்லேடனின் சிதைக்கப்பட்ட முகத்தைக் காட்டும் புகைப்படம் தங்களிடம் இருப்பதாக வலைப்பக்கம் ஒன்று இருக்கும். ஆனால், புகைப்படம் தெரியாது. 'இதைப் பார்க்க plugin ஒன்று பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்!’ என்று வலைப் பக்கம் சொல்வதை நம்பி இந்த மென்பொருளைப் பதிவிறக்கம் செய்தால், உங்களுக்கு ஒரு உடான்ஸ் படம் காண்பிக்கப்படும். ஆனால், திரை மறைவில் உங்களின் நடவடிக்கைகளை வேவு பார்க்கும் மென்பொருள் இயங்கிக்கொண்டு இருக்கும். இணையத் துறையில் அத்தனை பரிச்சயம் இல்லாத சாதாரணப் பயனீட்டாளர்களை ஏமாற்றுவதற்கென்றே தருணம் பார்த்தபடி இருக்கும் இந்த வைரஸ் மென்பொருள் தயாரிப்பாளர்களை வேட்டையாட, அமெரிக்கப் படைகளை அனுப்புவது நல்லது!
அடுத்த நிகழ்வு, இங்கிலாந்து அரசு குடும்ப வைபவம்.
கிட்டத்தட்ட வளர்ப்பு மகன் திருமணத்தைப்போல கோலாகலமாக நடத்தப்பட்ட இந்தத் திருமணம்பற்றிய செய்திகளும் இணையதளங்களுக்கு வரும் ட்ராஃபிக்கை அதிகரித்திருப்பது தெரியவருகிறது. 'Royal Wedding’ என்ற பதத்துடன் 10 மில்லியனுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒரு நாளில் மட்டும் தங்களது பயனீட்டாளர்களால் எழுதப்பட்டன என்று
ஒருபுறம் ஃபேஸ்புக் சொல்ல, டிவிட்டரோ இந்த வைபவத்தின்போது பரிமாறிக்கொள்ளப்படும் ட்வீட்டுகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க அதிகப் பெருங்கணினிகளைத் தங்களது டெக் உள் கட்டமைப்பில் இணைத்ததாகச் சொன்னது.
இந்த இரண்டு நிகழ்வுகளில் எது மிகவும் பிரபலம்? கூகுள் டிரெண்ட் தளத்தை ( http://www.google.com/trends) பயன்படுத்தி அலசிப் பார்த்தேன்.
ஓசாமா கொலைதான் நம்பர் ஒன் நிகழ்வாகத் தெரிகிறது. புள்ளிவிவரப் பிரியர்கள் இந்த உரலிக்குச் செல்லலாம் http://www.google.com/trends?q=royal+wedding%2C+bin+laden&ctab=0&geo=all&date=mtd&sort=0
|
No comments:
Post a Comment