டெக் உலகின் இந்த வார சுடச் சுடச் செய்தியைத் தருவது கூகுள். அவர்களது கீணீறீறீமீt தொழில்நுட்பம் இந்தக் கணத்தில் பரபரப்பாக அலசப்படுகிறது.
காரணம், Near Field Communications, சுருக்கமாக NFC எனப்படும் அருகாமைத் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூகுள் எடுத்திருக்கும் முயற்சி. இது எப்படி இயங்கப்போகிறது என்பதை முதலில் பார்க்கலாம்.
வணிகமும் அதைச் சார்ந்த பொருளாதாரமும் பண்டமாற்று முறையில் இருந்தது ஒரு காலம். பிறகு நாணயங்கள், ரூபாய்கள், வங்கிகள் என்று வளர்ந்து கடன் அட்டை காலத்தில் நிற்கிறோம். கையில் பைசா இல்லாமல், நுகர் வோரைச் செலவழிக்கச் செய்யும் நடைமுறை மூலமே Visa, Mastercard, Discover என மிகப் பிரமாண்டமான நிறுவனங்கள் வளர வழி வைத்தது. கடன் அட்டைகளை வங்கியோடு தொடர்பில் இருக்கும் ஒரு இயந்திரத்தில் இணைத்தால்தான் பணப் பரிமாற்றம் நிகழும் என்பது இந்த எக்ஸ்பிரஸ் யுகத்தில் ஒரு பின்னடைவுதான்!
வணிகத்துக்கு இணைய வளர்ச்சியில் என்ன பங்கு உண்டு? இணைய தொழில்நுட்பம் இ-மெயில், சிம்பிளான வலைதளம் என்பதைத் தாண்டி முதிர்ச்சியடையும். 90 - களின் தொடக்கத்தில் பணப்பரிமாற்ற நிகழ்வுகளை இணையத்தில் நிகழ்த்தும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அடியோடு வேரறுக்கும் தொழில்நுட்பம் ( Disruptive Technology) எதையும் வங்கிகளாலோ, கடன் நிறுவனங்களாலோ கொண்டு வர முடியவில்லை. அதிகபட்சம், தமது வலைதளங்களில் பயனீட்டாளர் கள் சில அடிப்படைப் பரிவர்த்தனைகள் செய்துகொள்ளும் வசதி மட்டுமே செய்து கொடுக்க முடிந்தது.
சென்ற வருடத்தில் வெளியாகி, இப்போது சக்கைப் போடு போட்டபடி இருக்கும் ஸ்கொயர் ( www.squareup.com) நிறுவனம், இந்தத் துறையில் வேறொரு கோணத்தில் இருந்து அட்டாக் செய்கிறது. 'கடன் அட்டைகளைப் படிக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாதனம் தேவை இல்லை. உங்கள் அலைபேசியையே எளிதாக அப்படி மாற்றிக்கொள்ளலாம்’ என்கிறது ஸ்கொயர். இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியால், வர்த்தகர்கள் மிக எளிதாகக் கடன் அட்டைப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும் என்பதால், ஸ்கொயர் நாளரு மில்லியனும் பொழுதொரு பாய்ச்சலுமாக வளருகிறது. சென்ற மாதத் தகவலின்படி, ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் டாலர் பரிமாற் றம் ஸ்கொயர் மூலம் நடக்கின்றனவாம்.
ஸ்கொயர் சாதனம் வர்த்தகர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தாலும், நுகர்வோருக்குப் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. அவர்கள் பல்வேறு கடன் அட்டைகளைக் கொண்டு சென்றாக வேண்டும்.
இங்கேதான் NFC தொழில்நுட்பம் நுழைகிறது. இத் தொழில்நுட்பத்தின் மூலம் உங்களது அலைபேசியை மின்னணு தொடர்பு சாதனமாக மாற்ற முடியும். ஐ-போன் பயனீட்டாளர்களுக்கு bump என்ற மென்பொருள் மிகவும் பரிச்சயம். http://bu.mp நிறுவனத்தில் இருந்து வெளியிடப்படும் இந்தத் தொழில்நுட்பம், ஒரு அலை பேசியில் இருந்து அதற்கு மிக அருகில் இருக் கும் இன்னொரு அலைபேசிக்குத் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது.
உதாரணத்துக்கு, ரயில் நிலையத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கல்லூரி நண்பரைச் சந்திக்கிறீர்கள். அவரது தொடர்புத் தகவல்கள் உங்களுக்கும், உங்களுடையது அவருக்கும் தேவை. தொலைபேசி எண்களில் இருந்து, விலாசம் வரை ஒவ்வொன்றாக எழுதிப் பரிமாறிக்கொள்ள அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக, bump மென்பொருள் பதிவேற்றப்பட்ட அலைபேசிகளை நீங்கள் இருவரும் வைத்திருந்தால், அவற்றை ஒன்றுடன் ஒன்றை லேசாக இடிப்பதன் மூலம் உங்கள் தகவல்களைப் பரஸ்பரம் பெற்றுக்கொள்ளலாம். ஒரு அலைபேசியில் இருந்து மற்றதற்குத் தகவல் நேரடியாக அனுப் பப்படுவது இல்லை. மாறாக, அருகருகே உள்ள இரண்டு அலைபேசிகளின் அதிர்வை அடிப்படையாக வைத்து, அவற்றின் தகவல்கள் இணையத்தில் பதிவேற்றமாகி இருக்கும் டேட்டாபேஸ்களில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதனால், இணையத்தில் அலைபேசிகள் இணைக்கப்படவில்லை என்றால், bump தொழில்நுட்பம் இயங்காது. (மேல் தகவல்கள் வேண்டும் என்றால், http://bu.mp/faq உரலியைப் பாருங்கள்)
NFC தொழில் நுட்பம் அப்படி அல்ல. அலைபேசியை அப்படியே அருகில் கொண்டுசென்று NFC தொழில்நுட்பம் கொண்டு மற்ற சாதனத்துடன் தொடர்புகொள்ள வைக்க முடியும். ஆக, உங்களது வங்கிக் கணக்குகளையும், கடன் அட்டைகளின் தகவல் களையும் அலைபேசியில் ஏற்றிக்கொண்டால் போதும். உங்களது அலைபேசி டிஜிட்டல் பர்ஸாக மாறிவிடும்.
Google Wallet என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம் அடுத்த இரண்டு ஆண்டு களில் நமது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாம். அல்லது வேவ், பஸ் போல சில மாதங்களில் புஸ்ஸென்றும் போகலாம். ஏன் என்பதை விரிவாக அடுத்த வாரத்தில் பார்க்கலாம். அது வரை ஆர்வம் தாங்கவில்லை என்றால், இப்போதைக்கு இந்த உரலியைப் பாருங்கள் http://www.google.com/wallet//
|
No comments:
Post a Comment