Friday, December 9, 2011

பிளஸ் டூ மாணவிகளின் தற்கொலை எண்ணம்... தீர்வு என்ன?

'எங்கள் ஹாஸ்டலில் ஒரு மாணவி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டாள். அவளுக்கும் எனக்கும் பெரிதாக தொடர்பு இருந்திராத போதிலும், சமீப நாட்களாக அவளது தற்கொலை முடிவு, என்னையும் துரத்துவதாக உணர்கிறேன். அற்பக் காரணங்களுக்குகூட 'தற்கொலை செய்துகொண்டால், பிரச்னைக்கு வாய்ப்பு இருக்காதே' என்று எண்ண ஆரம்பித்து விடுகிறேன். இது விபரீதத்தில் கொண்டுபோய் விடுவதற்குள் விடுபட வழி காட்டுங்களேன்...''

- பெயர் குறிப்பிடாமல் கோயம்புத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அனுப்பியிருக்கும் நீண்ட கடிதத்தின் சாராம்சம் இது. அவருக்கு வழிகாட்டுகிறார், தற்கொலை தடுப்புக்காக திருச்சியில் செயல்படும் 'நம்பிக்கை’ மையத்தின் மருத்துவ உளவியல் நிபுணர் டி.ரன்தீப் ராஜ்குமார்.

''இந்த வயதினருக்கே உரிய இயல்பான ஆளுமை சம்மந்தப்பட்ட குறைபாடு இது. கொஞ்சம் ஸ்ட்ராங்காக யோசித்தால்.. சுலபமாக இதிலிருந்து விடுபடலாம்.
தோல்விகளைச் சந்திக்காத ஜீவன்களே உலகத்தில் இல்லை. நடைமுறை வாழ்க்கையில் வெற்றியைப் போல தோல்வியும் உங்களுக்கு உதவுவதற்காக நிகழக்கூடியதுதான். இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு வெற்றியின் பாதையிலும் ஏராளமான தோல்வித் தடங்கள் தென்படுவதே யதார்த்தம்!

ஆனால், குழந்தை வளர்ப்பில் இருந்தே 'தோல்வியே கூடாது; எப்போதும் எதிலும் வெற்றியே வேண்டும்’ என்ற திணிக்கப்பட்ட மனநிலையில் வளர்த்தெடுக்கப்படுகிறோம். எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு தோல்வி வழியில் இடறும்போது, பதறிப் போகிறோம். அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாகவும், காரணங்களைக் கற்பித்துக் கொள்ளும் முயற்சியாகவும் எதையேனும் பற்றிக்கொள்ளத் தேடுகிறோம். சிலருக்கு அப்படியான காரண கற்பிதங்களில் ஒன்றுதான்... தற்கொலை முயற்சி. விபரீதம் புரியாது இந்த புதைகுழி மனப்பான்மையில் கால் வைப்பவர்கள், தம்மை அறியாது ஒரு கட்டத்தில் புதைந்துபோவதும் உண்டு.

இல்லை என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால், 'எனக்கு மட்டும் எதுவுமே இல்லை' என்கிற எண்ணம் கூடாது. பிரச்னைகள் சிறிதோ, பெரிதோ... அல்லது நீங்கள் குறிப்பிடுவதுபோல அற்பமானதோ... நேரடியாகச் சந்திப்பதும், போராட முயல்வதுமே ஆரோக்கியமான குணம். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதும், விடுபட்டு ஓட முயற்சிப்பதும் எதிர்மறை விளைவுகளையே தரும்.

பொதுவாக, பிளஸ் டூ படிப்புவரை பெற்றோரின் கதகதப்பான அரவணைப்பில் வளர்பவர்கள், திடீரென கல்லூரிச் சூழல் தரும் சுதந்திரத்தை எதிர்கொள்ள முடியாது தடுமாறுவார்கள். தன்னுடைய வயதுக்கு இயல்பான செய்கைகள்கூட குற்ற உணர்வைத் தோற்றுவிக்க, உள்ளுக்குள் குமைந்து போவார்கள். தன்னைத் தானே தண்டித்துக்கொள்ள ஏதேனும் அற்ப காரணங்களைக் கற்பித்துக்கொள்ள முயற்சிப்பார்கள். மிதமிஞ்சிய கட்டுப்பாடான வளர்ப்பு, அளவுக்கு மீறிய ஆன்மிக நம்பிக்கைகள் போன்றவையும்கூட அதிகப்படியான குற்ற உணர்வுக்கு காரணமாகக் கூடும். வெளியில் அதிகமாகப் பிறரிடம் பழகினால், இந்த சூழ்நிலை மாற்றம் சரியாக வாய்ப்புண்டு.

இன்னொரு பக்கம், இம்மாதிரி எண்ண விபரீதங்கள் மனநிலை பலவீனமானவர்களுக்கு மட்டுமே அதிகம் இருக்கும். எனவே, எண்ணங்களை வலுப்படுத்த உடலுக்கும் மனதுக்குமான பல பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பரந்துபட்ட வாசிப்பு, அறிவான ஆன்மிகம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை இதற்கு உதவும்.

இந்த வயதில் மற்றவர் கவனத்தை தன் பக்கம் திசைதிருப்பும் மனப்பான்மை இயல்பானது. இந்த மனப்பான்மையில் சற்று தூக்கலாக, தன்னைப்பற்றிய எண்ணம் மட்டுமே இருப்பவர்கள்... ஏதாவது ஏடாகூடத்தைச் சொல்லியோ, செய்தோ மற்றவர் கவனம் தன் பக்கம் இருந்தாக வேண்டும் என்கிற பிரயாசையுடன் செயல்படுவார்கள். இவர்களின் நடவடிக்கைகளிலும் தற்கொலை பிரயோகமோ, முயற்சியோ தென்படலாம்.

ஒரு எண்ணம் தவறென்று தெரிந்த பின்னரும் அதிலிருந்து விடுபடமுடியாது, திரும்பத்திரும்ப தலைகாட்டும் அந்த எண்ணங்களால் நடைமுறை வாழ்க்கையில் தடுமாற்றம் தென்பட்டால், அது எண்ண சுழற்சி நோயாக இருக்கவும் வாய்ப்புண்டு.

இந்த இரண்டு சூழ்நிலையில் சிக்கித் தவிப்பவர்களுக்கும் உடனடி மனநல ஆலோசனை அவசியம். நெருங்கிய உறவினர் அல்லது நண்பருடன் மனநல மருத்துவரையோ, கவுன்சிலரையோ அணுகினால் சுலபத்தில் பிரச்னையிலிருந்து விடுபட அவர்கள் உதவுவார்கள்.

எப்போதுமே, ஒரு எண்ணம் விபரீதமாக நெருடினால், உங்கள் மனதுக்கு நெருக்கமான, சற்று பக்குவமான நபரிடம் அதைப் பகிர்ந்து கொள்வது ஆரோக்கிய மானது. அது பாரத்தைக் குறைக்கும். அவர்கள் தரும் அனுபவ ஆலோசனைகளேகூட சில சமயம் தீர்வைத் தந்துவிடும். இதுதவிர, சூழ்நிலை மாற்றமும் அவசியம். தனிமையைத் தவிர்க்க வேண்டியதும் கட்டாயம். போன் மூலமாவது உங்களுக்கு நெருக்க மானவர்களுடன் தொடர்பில் இருங்கள். யோகா, தியானம், கல்லூரி குழு நடவடிக்கைகளில் பங்கேற்பது, மற்றவர்களுக்கு உதவுவது போன்றவை நல்ல மனநிலைக்கும், நிம்மதிக்கும் உத்தரவாதம் அளிக்கும்.''

No comments:

Post a Comment