'மார்ச் 15-ம் தேதி ஃபேஸ்புக் மூடப்படப்போகிறது. புகைப்படங்கள் உள்ளிட்ட அத்தனை தகவல்களையும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்!’ என்று திகிலாகப் பரவிய வதந்தியின் source என்ன என்பதைச் சமீபத்தில் கண்டுபிடித்தேன்.
கிட்டத்தட்ட 'லூஸுப் பையன்’ ஸ்டைலில் கற்பனை பகடி செய்திகளை வெளியிடும் வலைதளமான http://weeklyworldnews.com/ என்ற தளத்தில்தான் இந்த 'செய்தி’ முதன்முதலாக வெளிவந்தது. ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க், ''எனக்குப் பணம் முக்கியம் இல்லை. முன்னிருந்த வாழ்க்கை போதும்!'' என்று நிருபர்களிடம் சொன்னதாகக் கலாட்டா செய்யும் இந்தப் பதிவை அப்படியே நம்பி, மக்கள் மட்டுமல்ல, சில மீடியா நிறுவனங்களும் உண்மைச் செய்தியாக்கியது தான் காமெடி. மார்ச் 15 கடந்துவிட்டது. ஃபேஸ்புக் வளர்ந்தபடியேதான் இருக்கிறது.
டெக் உலகத்திலும் கடந்த வாரத்தில் கடும் அனல். கிளப்பியது எதிரும் புதிருமாக டெக் உலகின் பிரதான இடம் வகிக்கும் பல நிறுவனங்கள் தொடர்ந்திருக்கும் பல்வேறு வழக்குகள். இதை ஆரம்பித்துவைத்தது மைக்ரோசாஃப்ட். வழக்கு தொடர்ந்திருப்பது பார்ன்ஸ்-நோபிள் என்ற புத்தகக் கடைகள் நிறுவனத்தின் மீது.
'புத்தகக் கடை மீதா? மைக்ரோசாஃப்ட்டை அது என்ன செய்துவிட்டது? என்ன செய்திருந்தாலும், இது என்ன அத்தனை முக்கியமான டெக் உலகச் செய்தியா?’ என்று பல கேள்விகள் உங்களுக்கு எழலாம்.
இந்தத் தொடரின் வாசகர்களுக்குப் பல முறை மின் புத்தகப் படிப்பான்களை ( (e-readers ) பற்றி நான் எழுதியிருப்பது நினைவில் இருக்கலாம். அமேசானின் கிண்டில்தான் இதில் முன்னோடி. அதன் வெற்றி யைத் தொடர்ந்து, பல நிறுவனங்களும் விதவிதமான படிப்பான்களை வெளியிட்ட படி உள்ளன. காரணம், சென்ற வருடத் தொடக் கத்திலேயே அமேசான் அச்சுப் புத்தகங்களைவிட, மின் புத்தகங்கள் அதிகம் விற்பதாகச் சொன்னது. பல புத்தக விற்பனை நிறுவனங்கள் தங்களது சொந்த பிராண்ட் கொண்ட படிப்பான்களை வெளியிட ஆர்வத்தைக் கொண்டு வந்தது. பார்டர்ஸ் நிறுவனம் கோபோ (http://www.borders.com/online/store/MediaView_koboereader) என்ற சாதனத்தை வெளியிட, பார்ன்ஸ்-நோபிள் நூக் என்ற போட்டி சாதனத்தை அறிமுகப்படுத்தியது.
பொதுவாக, மின் புத்தகப் படிப்பான்களை மூன்று விதங்களாகப் பிரிக்கலாம்.
கணினியுடன் வயர் மூலம் படிப்பானை இணைத்து, தரவிறக்கம் செய்யப்பட்ட புத்தகங்களைப் படிப்பானுக்குள் கொண்டுவரலாம். இந்த வகைப் படிப்பான்களுக்கு நுகர்வோரிடம் அத்தனை வரவேற்பு இல்லாதது தெளிவாகத் தெரிகிறது. சோனி நிறுவனம் வெளியிட்ட PRS படிப்பான்கள் சந்தையில் போணி ஆகவில்லை.
கணினி தேவை இல்லாமல், லோக்கலாகக் கிடைக்கும் வயர்லெஸ் இணைய இணைப்பின் (WiFi) மூலம் புத்தகங்களைப் பதிப்பாளர் வலை தளத்தில் இருந்து நேரடியாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். புத்தகங்களைத் தரவிறக்கம் செய்த பின்னர், இணைய இணைப்பு தேவை இல்லை. ஆனால், புதிய புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ வாங்க வயர்லெஸ் இணைப்பு தேவை.
கணினி மற்றும் லோக்கல் வயர்லெஸ் இணைப்பு இரண்டுமே தேவைப்படாத படிப்பான்கள்தான் இப்போது பிரபலம். இந்த வகைப் படிப்பான்கள் இணையத்தில் அலைபேசித் தொழில்நுட்பம்கொண்டு இணைக்கப் படும். ஒருவிதத்தில் சொல்லப்போனால், இந்த படிப்பான் ஓர் அலைபேசி போலவேதான். ஆனால், இதைப் பயன்படுத்திப் பேச முடியாது. புத்தகங்கள் வாங்கவும் தரவிறக்கம் செய்யவும் மட்டுமே அலைபேசி இணைப்பு பயன்படும்.
மைக்ரோசாஃப்ட்டின் வழக்குக்கு வருகிறேன்...
அமேசானின் கிண்டில் சாதனத்தை அவர்களது சொந்த மென்பொருள் (Operating System) இயக்குகிறது. அலைபேசி, படிப்பான்கள் போன்ற சாதனங்களில் இயக்க மைக்ரோசாஃப்ட் Windows CE என்ற மென்பொருளை வைத்திருக் கிறது. ஆனால், இதைச் சீண்ட அதிகமான நிறுவனங்கள் இல்லை. காரணம், இந்த மென் பொருளைப் பயன்படுத்த மைக்ரோசாஃப்ட் டுக்கு லைசென்ஸ் கொடுத்தாக வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்னால், கூகுள் தனது Android மென்பொருளை Open Source லைசென்ஸ் வகையில் வெளியிட்டது. இந்த வகையில், மென்பொருளைப் பயன்படுத்தும் சாதனத் தயாரிப்பாளரோ, நுகர்வோரோ, எந்தவித லைசென்ஸ் கட்டணமும் யாருக்கும் செலுத்த வேண்டியது இல்லை. எனவே, பார்ன்ஸ் - நோபிள் நிறுவனம் தனது படிப்பானை இயக்க Android-ஐத் தேர்தெடுத்ததில் ஆச்சர்யம் இல்லை. கூகுளின் நேரடிப் போட்டியில் இருக்கும் மைக்ரோசாஃப்ட், சுற்று வழியாகக் கொடுக்கும் தாக்குதலாக உணரப்படும் இந்த வழக்கில், அடித்தளம் ஆடிப்போன மைக்ரோசாஃப்ட்டின் அச்சம் தெளிவாகத் தெரிகிறது. 'நூக் சாதனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சில மென்பொருள் கூறுகளுக்கு எங்களிடம் காப்புரிமை இருக்கிறது’ என்று சப்பையாகக் காரணங்களைச் சொல்லி இருக்கிறது மைக்ரோசாஃப்ட். இப்படிச் செய்வது மூலமாகவாவது மற்ற சாதனத் தயாரிப்பாளர்களிடம் Windows CE லைசென்ஸ் விற்கலாம் என்பது எண்ணம். வழக்கின் முடிவு எப்படி இருக்கிறது பார்க்கலாமா?
அடுத்த வழக்கு, அமேசான் மீது ஆப்பிள் தொடர்ந்திருப்பது. தனது சாதனங்களில் இயங்கும் மென்பொருள்களைப் பயனீட்டாளர்களுக்கு விற்க இணையத்தில் நடத்தும் கடைக்கு AppStore என்ற பெயரை வைத்தது.
இந்த வாரம் அமேசான் நிறுவனம், கூகுளின் Android சாதனங்களில் இயங்கும் மின் பொருள்களை வாங்கிக்கொள்ள 'Appstore for Android’ என்று அமேசான் தளத்துக்குள்ளா கவே திறந்துவைக்க, ஆப்பிள் ஜெர்க் ஆகி, 'அது எப்படி என் கடை பேரை நீ வைக்கலாம்’ என்று கேட்டபடி அமேசானை கோர்ட்டுக்கு இழுத்திருக்கிறது.
'டீச்சர், இவன் என் பல்பத்தை எடுத்துட்டான்... நான்தான் முதல்ல வந்தேன்!’ - ஸ்டைலில்இந்த பில்லியன் டாலர் நிறுவனங்கள் சட்டை கிழியப் போட்டுக்கொள்ளும் சண்டைகள், வேகமாக மாறி வரும் டெக் உலகில் தங்களது நலன்களைப் பாதுகாக்க என்ன வேண்டுமா னாலும் செய்யும் என்பதற்கான ஆதாரம்!
|
No comments:
Post a Comment