சிஸ்கோ (www.cisco.com) போன்ற பாரம்பரிய டெக் நிறுவனங்களில் ஆள் குறைப்பு செய்வதாக வெளிவந்தபடி இருக்கும் செய்திகள், இந்தத் துறையில் இருக்கும் புதிய வரவுகளைச் சற்றே கலங்கவைத்து இருப்பதைக் கவனிக்க முடிகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்னவாக இருக்குமோ என்பதைப் பற்றிய கலக்கங்களைத் தவிர்க்க முடியாதுதான் என்றாலும், அவ்வப்போது இந்தத் துறையில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையைப் புரிந்துகொள்வது அவசியம்.
சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட அனைத்து நாடுகளும், வளர்ச்சியையும் தொய்வையும் சுழற்சி முறையில் அனுபவிப்பது வெளிப்படையான ஒன்று. 80 மற்றும் 90-களின் இறுதியில் வந்த தொய்வுகளுக்கு இடையே ஏற்பட்ட வளர்ச்சியில் மிகவும் பயன் பெற்றது டெக் இண்டஸ்ட்ரி. மீண்டும் மற்றொரு மந்த நிலையைத்தான் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்னால் இழுத்து மூடிய சந்தையாக இருந்த இந்தியா, இப்போது உலகமயமாக்கலில் முக்கியப் பங்கு வகிப்பதால், மற்ற நாடுகளின் பொருளாதார நிகழ்வுகள் உடனடியாக உள்நாட்டையும் பாதிக்கவே செய்கிறது. வணிக அடிப்படைகளை மீறி வளர்ச்சி செயற்கையாக வீங்கியபடி இருக்கும்போது அதைச் சமன் செய்யத் தொய்வு அவசியம்; அது உண்மையான நிலைக்கு உலகப் பொருளாதாரத் தைக் கொண்டுவரும் என்று இதற்கு ஆதரவாகப் பேசும் பொருளாதார நிபுணர்களும் இருக்கிறார் கள்.
பொருளாதாரத் தொய்வின்போது, அத்தியாவசியச் செலவுகளைத் தவிர, மற்றவற்றைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வாடிக்கை. முன்னர் திட்டமிடப்பட்டு இருக்கும் சில புராஜெக்ட்டுகளைத் தள்ளிப்போடுவதும் நடக்கலாம். அப்படி நடக்கும்போது வேலைக் குறைப்புகள் போன்றவற்றை இந்த நிறுவனங்கள் தடுப்பது கடினம்.
'அதெல்லாம் இருக்கட்டும் அண்டன், இன்றைக்கு இருக்கும் இந்தச் சூழலில் டெக் உலகில் இருக்கும் / நுழைய விரும்பும் நான் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வி எழுகிறதா? ஆம் என்றால், உங்களுக்குத்தான் இந்த வாரக் கட்டுரை.
உங்களுக்கு மிகமிக முக்கியமான தேவை மாற்றத்தை விரும்பும் மனோநிலை. மாற்றம் மட்டும் மாற்றம் இல்லாதது என்பது, வேறு எந்தத் துறைகளுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, டெக் துறைக்கு ரொம்பவும் பொருந்தும். புகழ் பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் (www.gartner.com) உருவாக்கப்படும் எந்த மென்பொருளுக்கும் சராசரி வாழ்க்கை மூன்றில் இருந்து ஐந்து வருடங்கள் மட்டுமே என்கிறது. 10 வருடங்களுக்கு முன்னால் மெயின்ஃப்ரேம் கணினிகளில் இருந்த Y2K சிக்கலைத் தீர்க்க பில்லியன்களில் பணம் செலவழிக்கப்பட்டது. இந்தியாவின் ஐ.டி. துறை உலக அரங்கில் அடுத்த அடி எடுத்துவைக்க இந்த நிகழ்வு காரணமாக இருந்தது என்றுகூடச் சொல்லலாம். ஆனால், மெயின்ஃப்ரேம் துறையில்தான் என் காலம் முழுவதும் கழிப்பேன் என்று யாராவது திட்டமிடுவது எத்தனை ஆபத்தானது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. வந்துகொண்டு இருக்கும் மாற்றங்களை உற்றுக் கவனித்து, அவற்றைப் பற்றிய ஒருங்கிணைந்த மேலார்ந்த பார்வை மற்றும் புரிதல் ஏற்படுத்திக்கொள்வது அவசியம். அதே நேரத்தில், குறிப்பிட்ட தொழில்நுட்பக் கூறு ஒன்றில் ஆழம் ப்ளஸ் அகலத்தையும் தெரிந்துகொண்டு இருத்தல் தேவை.
பெரும் கணினிகளில் இயங்கும் வலைதளங்களும், அவற்றுக்குச் செல்ல கணினிகள் மட்டுமே வேண்டும் என்று சில வருடங்கள் முன்னிருந்த வரை இருந்த நிலை இன்று இல்லை. மொபைல் சாதனங்கள் இணையத்தின் முக்கிய அங்கமாகிவிட்டன. இந்த டிரெண்ட் இன்னும் பல வருடங் களுக்குத் தொடர்ந்தபடியேதான் இருக்கப் போகிறது. இதுபோல முக்கியமான மாற்றங்கள் வருகையில், சில தொழில்நுட்பங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு; சில சீக்கிரமாக மறைந்துபோகும். Palm தொழில்நுட்பத்தை உதாரணமாகச் சொல்லலாம். கையில் ஏந்திச் செல்லக் கூடிய PDA என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட Personal Digital Assistant சாதனங்களை இயக்கும் மென்பொருளைக் கொண்டுவந்தது இந்த நிறுவனம்தான். இன்று இந்தத் தொழில்நுட்பம் இருக்கும் இடம் தெரியவில்லை. அதே நேரத்தில் HTML5 என்பது சற்று முன் முளைத்த காளான்போல இருந்தாலும், அதற்கு மிக நீண்ட எதிர்காலம் இருக்கிறது.
HTML5?
இந்தத் தொடரின் தொடக்கத்தில் ஓரிரு கட்டுரைகளில் HTML5 பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன். ஆழமான தகவல்களை மற்றொரு சமயத்தில் பார்க்கலாம் என்றும் சொல்லியிருந்தேன். அந்த வேளை வந்துவிட்டது. இணையத்தின் சர்வதேச மொழியான HTML - யின் இலக்கண விதிகளை நிர்வகிப்பது World Wide Web Consortium. சுருக்கமாக, W3C என்ற அமைப்பு. உலக நாடுகளுக்கு எப்படி ஐக்கிய நாடுகள் அமைப்பு இருக் கிறதோ, அதுபோலவேதான் இணைய உலகுக்கு W3C என்று தோராயமாகச் சொல்லலாம்.
W3C உருவாக்கப்பட்டபோது, தகவல்கள் எழுத்து வடிவிலும் (text) படங்கள் (image) மூலமாக மட்டுமே இருந்தன. சத்தம், வீடியோ போன்றவற்றை இணையம் மூலமாகப் பகிர்ந்துகொள்ளும் தேவையும் இல்லை; அதற்கான வலிமையும் (bandwidth) இணையத்துக்கு இல்லை. அதோடு, முக்கியமாக மொபைல் சாதனங்கள் என்பதும் இல்லை. அவர்கள் வெளியிட்ட முதல் சட்டதிட்டத்தைப் ( HTML 1.0 ) பார்த்தால் அது தெரியவரும்.
Fast forward செய்து நிகழ்காலத் துக்கு வந்து, பைனாகுலர் மூலமாக எதிர்காலத்தைப் பார்க்க முற்பட்டால், குறுந்தகவலில் இருந்து, முழு நீளத் திரைப்படம் வரை இணையத்தை ஊடகமாக வைத்துப் பகிர்ந்துகொள்ளப்படப் போவது தெரியவரும். இதை மேற்கொள்ள உதவுவது W3C - யின் லேட்டஸ்ட் வெளியீடு HTML5 சட்டதிட்டம்!
|
No comments:
Post a Comment