இந்தத் தொடரின் வாசகர்களுக்கு ஆப்பிளின் தொடர்ந்த வெற்றிகளைப்பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கும். கணினி தயாரிப்பு நிறுவனம் என்பதைவிட, பயனீட்டாளர் மின்னணு சாதனத் தயாரிப்பாளர் என்ற நிலைக்கு இந்த நிறுவனம் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஆப்பிளின் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தும் 200 மில்லியன்களுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள், தமது தகவல்களைச் சேகரித்து, அவற்றை மொபைல் சாதனங்களில் பயன்படுத்த கணினியுடன் வயர் மூலம்
இணைத்தாக வேண்டும். ஆப்பிளின் iTunes என்ற மென்பொருள் மூலமாக மட்டுமே உங்களது தகவலைச் சேமிக்க முடியும். இதன் மூலம் மிக நெருக்கமான பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தி வந்தது ஆப்பிள். இந்த வாரம் வரை!
இந்தக் கட்டுரை எழுதப்படும் நாளின் காலையில் சான்ஃபிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிளின் WWDC மாநாட்டில் ஆப்பிள் மேகக்கணினியம் சார்ந்த ஏதோ சேவை ஒன்றை வெளியிடப்போகிறது என்று பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. காரணம், சில வாரங்களுக்கு முன் ஸ்வீடன் நாட்டு நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமாக இருந்து வந்த iCloud.com என்ற வலைதளப் பெயரை ஆப்பிள் வாங்கியது உறுதிபடத் தெரியவில்லை என்றாலும், கிட்டத்தட்ட 5 மில்லியன் டாலர்களுக்கு இந்தத் தளத்தின் பெயர் வாங்கப்பட்டது என்பது டெக் இண்டஸ்ட்ரி நிபுணர்களின் யூகம். (பை தி வே, வலைதளத்தின் பெயரை 10 டாலர்களுக்கும் வாங்கலாம். இப்படி வலைதளப் பெயர்களை வாங்கி விற்கும் சந்தைபற்றி இன்னொரு வாரம் விரிவாகப் பார்க்கலாம்!)
இந்தத் தளத்தின் பெயரை வாங்கியதால் மட்டுமல்ல; ஆப்பிள் ஒரு மூடிய தன்மை உள்ள, குறுகிய நோக்கம் உள்ள நிறுவனம் என்பது டெக் இண்டஸ்ட்ரியின் பொதுக் கருத்தாகவே மாறிவிட்டு இருந்தது. அதை மாற்ற எந்தக் குறிப்பிட்ட முயற்சியும் ஆப்பிளால் எடுக்கப்படவில்லை. அதே வேளையில், கூகுள் இணையம் மற்றும் இணையம் சார்ந்த மேகக் கணினியத் தொழில்நுட்பத்தில் முழு நம்பிக்கை வைத்து, அவர்களது வெளியீடுகள் ஒவ்வொன்றும் இதைச் சார்ந்திருக்கும்படி பார்த்துக்கொண்டது. அவர்களது டாக்ஸில் இருந்து ( docs.google.com )மொபைல் தொழில்நுட்பமான ஆண்ட்ராயிட், விரைவில் வெளியாகப்போகும் க்ரோம் ஓஎஸ் என எதை எடுத்துக்கொண்டாலும், இணையத்தைச் சார்ந்தே இவை கட்டமைக்கப்பட்டு இருப்பது தெரியும். கூகுள் மட்டுமல்ல, உலகின் மிகப் பெரிய ஆன்லைன் பல்பொருள் அங்காடி எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் அமேசான், தொடர்ந்து மேகக் கணினியம் சார்ந்த சேவைகளை வரிசையாக வெளியிட்டபடி இருக்கிறது. குறிப்பாக, சென்ற மாதம் அவர்கள் வெளியிட்ட Cloud Drive தொழில்நுட்பம், மேகக் கணினியத்தை எவராலும் எளிதாக, அதுவும் 5 GB வரை இலவசமாகவும், நுகர வைக்கும்படி இருந்தது. ஆப்பிளின் குளிகைக்
கணினிக்குப் போட்டியாக அமேசான் தனது குளிகைக் கணினியை வெளியிடும் நாள் தூரத்தில் இல்லை என்பதும் ஆப்பிளுக்குத் தெரியாததல்ல!
சரி, iCloud-க்கு வருவோம். இன்னும் சில மாதங்களில் பயனீட்டாளர்களுக்கு வெளியிடப்படப் போகிற இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்கள் என்ன? பார்க்கலாம்.
ஆப்பிள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து பவராக இருந்தால், உங்களது கோப்புகள், இசை, இ-மெயில், புகைப்படங்கள், வீடியோக்கள் இன்னபிற தகவல்கள் அனைத்தையும் நீங்கள் உங்களது iCloud கணக்கில் சேமித்து வைத்துக் கொண்டு கணினி, ஐ-பாட், ஐ-போன், உள்ளிட்ட அனைத்துச் சாதனங்களிலும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், உங்களது டிஜிட்டல் தகவல் பெட்டகம், கணினி என்ற சிறிய அறையில் இருந்து எடுக்கப்பட்டு, இணையம் என்ற எல்லையற்ற பெருவெளியில் உங்களுக்காகக் கொடுக்கப்படும் பிரத்யேக அறையில் வைக்கப்படும். இணையத்தில் இணைக்கும் உங்களது ஒவ்வொரு சாதனமும் இந்தத் தகவலை எளிதாகப் பயன்படுத்த முடியும். உதாரணத்துக்கு, உங்களது போனில் இருக்கும் கேமராவைப் பயன்படுத்தி புகைப்படம் ஒன்று எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதை இ-மெயில் மூலமாகவோ, SMS மூலமாகவோ அல்லது கணினியுடன் இணைத்துப் புகைப்படங்களைத் தரமிறக்குவதன் மூலமாகத்தான் பகிர்ந்துகொள்ள முடியும். iCloud வந்த பின்னர் இது அவசியம் இல்லை. நீங்கள் போனில் எடுக்கும் புகைப் படங்களை உங்களது கணினியில் உடனுக்குடன் பார்க்க முடியும். அமேசானைப் போலவே, 5 GB அளவு உள்ள உங்களது கணக்கு, இலவச மாகக் கொடுக்கப்படும் என்கிறது ஆப்பிள். GB கணக்கு தெரியாதவர்களுக்கு, 5 GB-யில் கிட்டத்தட்ட 2,000 இசைக் கோப்புகளைச் சேமிக்கலாம்.
iCloud-வுடன் சேர்ந்து இசை பற்றிய மற்ற முக்கியமான அறிவிப்பையும் கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். iTunes Match என்ற பெயரில் ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் இந்தச் சேவை, ஆப்பிளைத் தவிர வேறு எந்த நிறுவனத்தாலும் செய்ய முடியாத ஒன்று என்றே நான் நினைக்கிறேன்.
ஆப்பிளின் iTunes Match தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்களது இசை கலெக்ஷன் அனைத்தையும் சட்டப்படி உரிமை உள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும். அது மட்டுமல்ல, நீங்கள் 'சுட்ட’ இசையின் தரம் குறைவானதாக இருக்கலாம். iTunes Match ஒரிஜினல் இசைக் கோப்பை இதற்குப் பதிலாகக் கொடுக்கும். அதோடு, இப்படி வாங்கப்படும் இசை அவர்கள் கொடுக்கும் 5 GB கணக்கில் வராது என்பது எக்ஸ்ட்ரா போனஸ்.
ஆப்பிள் கைவசம் 18 மில்லியன் இசைக் கோப்புகள் இருப்பதால், உங்களது இசைப் பெட்டகம் முழுவதையும் இப்படி மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், இந்தச் சேவைக்கு வருடாந்தர சந்தாவாக 25 டாலர் கட்ட வேண்டும்.
மொத்தத்தில், இந்த வார டெக் உலக ஹீரோ ஆப்பிள்தான்!
|
No comments:
Post a Comment