404-ல் இருந்து இந்த வாரத்தை ஆரம்பிக்க லாம். 404?
இணைய தொழில் நுட்பத்தில் இந்த எண் பிரபலமானது. இந்த எண்ணின் முக்கியத்துவத் தைப் பார்க்கும் முன்னால் சில அடிப்படைகள்... வலைதளம் ஒன்றுக்குச் செல்லும்போது, உங்களது கணினியும் (அல்லது மொபைல் சாதனம்), வலைதளத்தை இயக்கும் பெருங் கணினியும் எதிரும் புதிருமாகப் பேசிக் கொள்ளும்.
'ஹலோ, தளத்தின் முதல் பக்கத்தை அனுப்புறியா?’
'ஓ.கே. இந்தா இருக்கு முதல் பக்கம்!’
இந்தத் தகவல்கள் பரிமாறிக்கொள்வதற்கு எழுத்துக்களைவிட, குறிப்பிடப்பட்ட எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்துக்கு, மேலே கொடுத்த உதாரணத்தையே எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் வலைப் பக்கம் ஒன்றைக் கேட்க, அந்தப் பக்கம் பெருங்கணினியில் இருந்து வெற்றிகரமாக உங்களது கணினிக்கு வருகிறது என்பதன் குறியீட்டு எண்: 200. இந்த எண் பதிலாக வந்தால், உங்கள் கணினியில் இருக்கும் ப்ரவுசர், மகிழ்ச்சியாக அந்தப் பக்கத்தைக் காட்டும்.
ஒருவேளை, நீங்கள் சொடுக்கிக் கேட்கும் குறிப்பிட்ட பக்கம் பெருங்கணினியில் இல்லை என்றால்?
'இந்தப் பக்கம் இங்கே இல்லை!’ என்ற பதிலை பெருங்கணினி பதிலாக அனுப்பும். இதன் குறியீட்டு எண்தான் 404.
இந்தக் குறியீட்டு எண்கள் கணினி டு கணினி தொடர்பு மொழியைச் சார்ந்தவை என்பதால், இவை சராசரிப் பயனீட்டாளர்களுக்குப் பயனற்றவை. அதிகமாகத் தெரிந்துகொள்ளும் விருப்பம் இருந்தால், இந்த உரலியைச் சொடுக்குங்கள் http://www.w3.org/Protocols/rfc2616/rfc2616-sec10.html. அது இருக்கட்டும், 404 ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு வரலாம்.
பல தரப்பட்ட காரணங்களினால், மக்கள் தவறான உரலிகளைச் சொடுக்க நேரிடுகிறது. சில உதாரணங்கள்:
வலைப் பக்க உரலி, மற்றொரு வலைப் பக்கத்திலோ, அல்லது இ-மெயிலிலோ எழுதப்படுகையில் எழுத்துப் பிழை நிகழலாம். வலை தளம் தனது பக்கங்களை மேம்படுத்தும் முயற்சியின்போது, சில பக்கங்களின் உரலிகள் மாறக்கூடும். ஆனால், கூகுள் போன்ற தேடல் இயந்திரங்கள் புதிய உரலிகளை அடையாளம் கண்டுபிடித்துக் கொடுக்கப் பல வாரங்கள் ஆகலாம். இதற்கிடையில், கூகுளில் நீங்கள் எதையாவது தேடும்போது, பழைய உரலிகள் தேடல் பக்கத்தில் வரலாம்.
உங்களது தளத்தில் 404 எதனால் நிகழ்ந்தது என்பதைக் கண்டறியும் பல வழிகளை மற்றொரு வாரத்தில் விரிவாகப் பார்க்கலாம். பல்லாயிரக்கணக்கான பயனீட்டாளர்கள் இப்படித் தவறான உரலிகளுக்குப் போக முயற்சித்து, 404 பதிலைப் பெறும் நிகழ்வு தொடர்ந்து நடப்பதால், வலைதள நிறுவனங் களுக்கு 404 பிரச்னை என்பது ஒரு கோணம் என்றால், வாய்ப்பு என்பது மற்றொருகோணம். 404 நிகழ்வை மேற்கொள்ள நிறுவனங்கள் எடுக்கும் சுவாரஸ்ய முயற்சிகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
கூகுள்: சோகமாக ஸ்க்ரூ டிரைவர் ஒன்றைக் கடித்தபடி அமர்ந்திருக்கும் கைப்புள்ள ரோபாட் ஒன்று 'இந்தப் பக்கம் இந்தக் கணினியில் இல்லை. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்!’ என்கிறது.
டிவிட்டர்: எந்தக் கோமாளித்தனமும் செய்யாமல், ‘Sorry, that page doesn’t exist!’ என்கிறது.
ஃபேஸ்புக்: கிட்டத்தட்ட டிவிட்டர் போலவே, சீரியஸான பக்கத்தையே காட்டுகிறது.
சென்ற வாரம் வாட்சனைப் பற்றி பார்க்கலாம் என்று சொன்னேன். அதற்கு முன்னால் ஜெப்பர்டி டி.வி ஷோ பற்றி தெரிந்துகொள்வோம்.
அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் மிக நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வரும் ஜெப்பர்டி, அடிப்படையில் சீரியஸான ஒரு க்விஸ் நிகழ்ச்சி. கலை, வரலாறு, இலக்கியம், உலக நடப்புகள் எனக் கலவையாகப் பலதரப்பட்ட பிரிவுகளில் போட்டியாளர்களின் அறிவைச் சோதிக்கும் இந்த நிகழ்ச்சியின், ஒரு குறிப்பிட்ட பதில், கேள்வியாகக் கொடுக்கப்பட, பதிலைக் கேள்வியாக கேட்க வேண்டும்.
உதாரணத்துக்கு, தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்து வந்த இந்த வழக்கறிஞரின் அரசியல் அடிப்படை மார்ட்டின் லூதர் கிங்கால் பின்பற்றப்பட்டது!’ என்று கேள்வி இருந்தால், பதில் 'மகாத்மா காந்தி என்பவர் யார்?’ என்று சொல்ல வேண்டும். சுளித்தும், நெளித்தும், பூடகமாகவும் கேட்கப்படும் இந்த நிகழ்ச்சியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அசாத்தியமான திறமை தேவை.
மனித அறிவுக்கு நிகராக கணினிகள் செயற்கை அறிவுத் திறனைப் பெறுவது இதுவரை மிகப் பெரிய அளவில் வளரவில்லை. குப்பை பெருக்கும் ரூம்பா முதல் (http://www.irobot.com/ ) குண்டு வைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை நுகர்ந்து கண்டுபிடிக்கிற மிலிட்டரி ரோபாட் (http://www.dailymail.co.uk/sciencetech/article-1258628/Bomb-disposal-robot-carry-rucksack.html) வரை தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், மனித அறிவுக்குச் சமமானவை அல்ல.
ஐ.பி.எம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அதீதக் கணினிதான் (supercomputer) வாட்சன். சென்ற மாதத்தில் வாட்சன் ஜெப்பர்டி நிகழ்ச்சியில் மனிதப் போட்டியாளர்களுடன், மற்றொரு போட்டியாளராகக் கலந்துகொண்டு, வெற்றியும் பெற்றது மிகப் பெரிய சாதனை. வாட்சன் போட்டியாளராகக் கலந்துகொண்ட ஒரு போட்டியின் வீடியோவைக் காண இங்கே செல்லுங்கள்: http://www.youtube.com/watch?v=7kOEmupSHB8&feature=relmfu. வாட்சனைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உதவும் ஐ.பி.எம் நிறுவனத்தின் வலைப் பக்கம் http://www-03.ibm.com/innovation/us/watson/
|
No comments:
Post a Comment