மடிக்கணினி வைத்திருப்பவர்களுக்குப் பொதுவாக இருக்கும் கவலை, எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது என்பதால், அது திருடு போய்விடும் வாய்ப்பும் அதிகம் என்பதுதான். மடிக்கணினி தயாரிப்பு நிறுவனங்கள், திருட்டைத் தவிர்க்கப் பல முயற்சிகள் செய்தாலும், ஆண்டுக்கு 2 மில்லியன் மடிக்கணினிகள் திருடு போவதாகச் சொல்கிறது புள்ளிவிவரம். கார் திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பத்தைத் தயாரித்து விற்பதில் பிரபலமான லோஜேக் (http://www.lojack.com/pages/laptop.aspx) நிறுவனம், மடிக்கணினித் திருட்டைத் தடுப்பதற்கான தொழில்நுட்பம் ஒன்றைத் தயாரித்து விற்கத் தொடங்கியது. டெல் போன்ற மடிக்கணினி தயாரிப்பு நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை மறு விற்பனை செய்ய முன்வர, லோஜேக் வேகமாக வளர்ந்தது.
லோஜேக்கின் மென்பொருள் மடிக்கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். கணினி திருடுபோனதும், லோஜேக்கைக் கூப்பிட்டுத் தெரிவித்தால், அவர்கள் மேற்கண்ட மென்பொருள் இணையம் மூலமாகக் கொடுக்கும் தகவல்களைச் சேகரித்து அலசத் தொடங்குவார்கள். அலசலில் கிடைக்கும் தகவல்களை, குறிப்பிட்ட சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளிடம் தெரிவித்து, அவர்களிடம் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வார்கள்.
இது கேட்பதற்குப் பிரமாதமாக இருந்தாலும், நடைமுறையில் இது ஓரளவுக்கு வரம்புக்கு உட்பட்டது என்றே சொல்ல வேண்டும். ஐ.டி. தொழில்நுட்பத் தலைநகரமாக இருக்கும் சிலிக்கான் வேலியில், மடிக்கணினி திருடப் படுவது அத்தனை அசாதாரண நிகழ்வு அல்ல. ஆனால், ஒரு குறிப்பிட்ட திருட்டு, இந்த வாரத்தில் பரபரப்பான செய்தி ஆனது.
35 வயதான ஜாஷ§வா ஹாஃவ்மெனின் வீடு உடைக்கப்பட்டு, பல பொருள்கள் வீட்டில் இருந்து திருடப்பட்டன. அதில், மடிக்கணினியும் ஒன்று. இதுபற்றி போலீஸில் புகார் கொடுத்தார். அடுத்த சில வாரங்களாக காவல் நிலையத்துக்கு நேரிலும், தொலை பேசியிலும் இதைப்பற்றி தொடர்ந்து கேட்க, அவர்களிடம் இருந்து எந்த உருப்படி யான பதிலும் வரவில்லை.
முக்கியமான ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும். தனது மடிக்கணினி வாங்கிய புதிதிலேயே ஜாஷ§வா 'Hidden’ என்ற மென்பொருளைப் பதிவேற்றம் செய்திருந்தார். மடிக்கணினி காணாமல் போய்விட்டது என்று இந்த மென்பொருள் நிறுவன வலைதளத்தில் தெரிவித்தால் போதும், மேற்படி மென்பொருள் மடிக்கணினியில் இருக்கும் கேமராவை ரகசியமாக இயக்கி, மடிக்கணினியை இயக்குபவரைப் புகைப்படம் எடுத்து வலைதளத்துக்குப் பதிவேற்றிவிடும். ஒருவேளை கேமரா வேலை செய்யவில்லை என்றால், கணினி யின் திரையில் தெரியும் விவரங்களைப் புகைப்படமாக ( Screenshot ) எடுக்கும். அதோடு, மடிக்கணினி இணைந்து இருக்கும் இன்டர்நெட் இணைப்பு மூலமாக, அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் உத்தேசமாகக் கண்டுபிடித்து அறிவிக்கும்.
திருடு போன மூன்றாவது வாரத்தில் புகைப்படங்கள் வர ஆரம்பித்தன. நிம்மதி யாகத் தூங்கியபடியும், சட்டை இல்லாமல் படுக்கையில் அமர்ந்தபடியும் எனத் தெளிவான புகைப்படங்கள். இவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் காவல் நிலையம் சென்று ஜாஷ§வா பகிர்ந்துகொண்டாலும், அவர்களது விசாரிப்பில் எந்த மாற்றமும் இல்லை. வெறுத்துப்போன ஜாஷ§வா சென்ற வாரத்தில், 'இந்த ஆளிடம் எனது மடிக்கணினி இருக்கிறது’ என்ற பெயரில் (http://thisguyhasmymacbook.tumblr.com/) பதிவுத்தளம் ஒன்றைத் தொடங்கி புகைப்படங் களை வெளியிடத் தொடங்கினார்.
தளத்துக்கு வந்து படிப்பவர்கள் வெளியிடப் பட்டு இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, ஏதாவது துப்புக் கொடுக்க மாட்டார்களா என்பதுதான் இதன் நோக்கம். ஆனால், இவரது பதிவுத்தளத்தை இந்த புகைப்படங்களால் பிரபலப்படுத்த முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னால், டிவிட்டரில் தளத்தைப் பற்றிய தகவலைத் தெரிவிக்க, சில மணி நேரங்களில் பல ஆயிரம் டிவிட்டர் பயனீட்டாளர்கள் இந்தத் தகவலை ரீ-ட்வீட் செய்ய, ஜாஷ§வாவின் பதிவுத்தளம் படு பிரபலமாகியது. இதைத் தொடர்ந்து காவல் நிலையத்திடம் விளக்கம் கேட்கப்பட, சுறு சுறுப்பாக விசாரணையை முடுக்கினர். இரண்டு நாட்களுக்குள் புகைப்படத்தில் இருந்த நபரைக் கைதும் செய்துவிட்டார்கள்.
'மலிவாக யாரோ கொடுத்தார்கள் என்பதால் வாங்கினேன்; நான் திருடவில்லை’ என்று அவர் சொன்னாலும், திருடப்பட்ட பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மேல் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அது இருக்கட்டும். சென்ற வாரத்தில் கூகுளின் வாலட் ( Wallet ) தொழில்நுட்பம் பற்றி மேலும் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன். எனக்கு இந்தத் தொழில்நுட்பம் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இல்லை.
அலைபேசிகள் அருகாமைத் தொடர்பு தொழில்நுட்பத்தைக் ( Near Fields communications, சுருக்கமாக,NFC) கொண்டிருக்க வேண்டும். இப்போதைக்கு கூகுளால் தயாரிக்கப்படும் Nexus அலைபேசி மட்டுமே இந்தத் தொழில் நுட்பத்தைக்கொண்டு இருக்கிறது. ஆப்பிள் ஐ-போனின் அடுத்த மாடலில் இது பொருத் தப்படலாம் என்ற யூகம் இருந்தாலும், இதைப்பற்றி எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல், ஆப்பிள் கவனமாக மௌனம் சாதிக்கிறது.
குறிப்பிட்ட Master Card மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் அட்டையாக இப்போதைக்கு இருக்கிறது. மற்ற கடன் அட்டை மற்றும் வங்கிகளிடம் கூகுள் வர்த்தக ஒப்பந்தம் செய்தால்தான் பரவலாகப் பயனீட்டாளர்களை அடைய முடியும். டெக் இண்டஸ்ட்ரியில் தங்களுக்கு இருக்கும் பலத்தைக் காட்டி, இதை வெற்றியாக்கிக் காட்ட கூகுளால் முடியுமா என்பது விரைவில் தெரியும்.
|
No comments:
Post a Comment