திருச்சி தொழில் அதிபரை பேஸ்புக் மூலம் காதலிப்பதாக கூறி மிரட்டிய அபிநயா இதேபோல் 3 டாக்டர்கள், ஒரு என்ஜினீயரை ஏமாற்றியதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதில் என்ஜினீயரை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டதாகவும் அபிநயா கூறியுள்ளார்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (30). இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழில் அதிபர். இவர் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அபிநயா என்கிற அனுஷ்கா (23) என்ற பெண் குறித்து திருச்சி கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில், அபிநயா என்ற பெண்ணுடன் பேஸ்புக்' மூலம் தனக்கு அறிமுகம் கிடைத்ததாகவும், இந்த அறிமுகத்தை பயன்படுத்திக்கொண்டு தன்னுடன் பேஸ்புக்' மற்றும் ஈமெயில் மூலம் அடிக்கடி பேசி தன்னை காதலித்த அபிநயா தன்னை மிரட்டுவதாக குறிப்பிட்டுருந்தார். தனது சொத்துக்களில் பாதியை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், ஈமெயில் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டியதாகவும், அந்த புகாரில் கூறி இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கோட்டை அனைத்து மகளிர் போலீசார் அபிநயாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காதல் வலை விசிய பெண்
போலீசார் அபிநயாவிடம் நடத்திய விசாரணையின்போது அவர் ஏற்கனவே இதேபோல் பலரை காதலிப்பது போல் பழகி ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.
பேஸ்புக் பழக்கத்தின் மூலம் திருச்சி தொழில் அதிபர் முருகனை காதல் வலைவீசி மிரட்டிய அபிநயாவின் காதல் வலையில் முதலில் சிக்கியவர் கடலூரை சேர்ந்த ஒரு டாக்டர் ஆவார்.
ராயப்பேட்டையில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய அந்த டாக்டரிடம் அனு என்ற பெயரில் முதலில் நோயாளி போல் சென்று பழகி இருக்கிறார். அதன்பின்னர் அவரை காதலிப்பதுபோல் நடித்து ஒரு கட்டத்தில் கேட்ட பணம் கிடைக்காததால் அவர் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்திருக்கிறார்.
இதேபோல் அரியலூரை சேர்ந்த ஒரு டாக்டர், நாமக்கல்லை சேர்ந்த இன்னொரு டாக்டர் ஆகியோரையும் பேஸ்புக் காதல் மூலம் வீழ்த்தி இருக்கிறார் இந்த அபிநயா என்கிற அனுஷ்கா.
திருமணம், விவாகரத்து
விருதுநகரை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் காவியா என்ற பெயரில் பேஸ்புக் மூலம் பழகி நட்பை ஏற்படுத்தி இருக்கிறார், அபிநயா. நாளடைவில் அந்த நட்பு காதலாக மாற அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பின் காரணமாக அவரை விவாகரத்து செய்து இருக்கிறார்.
அரியலூர் டாக்டர் மூலம் திருச்சி தொழில் அதிபர் முருகனிடம் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் அபிநயா. இந்த பழக்கம் எல்லை மீறி போய் மிரட்டலில் முடிந்தபோதுதான் தற்போது போலீஸ் பிடியில் சிக்கி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பெரிய தொழில் அதிபர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுடன் வலைத்தளத்தின் மூலம் நட்பை ஏற்படுத்திக்கொண்டு காதலிப்பதாக கூறி மிரட்டல் விடுத்து கைவரிசை காட்டிய அபிநயா தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக அபிநயாவிடம் ஏமாந்த டாக்டர்கள் என்ஜினீயர் ஆகியோரில் 2 பேரை சாட்சியாக சேர்க்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அவர்களை திருச்சிக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் போலீஸ் வட்டாரம் தெரிவித்து உள்ளது.
|
No comments:
Post a Comment