10ம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூ.115 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்களில் அறிவியல் செய்முறைத் தேர்வுகள் இருந்ததால் அப்பாடப்பிரிவை எடுத்து படித்த மாணவர்களிடம் ரூ.225 தேர்வு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் நடப்பாண்டில் அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான தேர்வு எழுதவிருக்கின்றனர். இதனால் பிற மாணவர்களைப் போன்று மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூ.115 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் தேர்வுக் கட்டணத்தை அரசு ஏற்கிறது. தனியார் பள்ளிகளில் பயில்வோர், ஆங்கில வழியில் பயில்வோர் மற்றும் தனித்தேர்வர்கள் ஆகியோர் தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதி வருகின்றனர். இந்த ஆண்டு மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவ-மாணவியர் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகாமானோர் 10ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.
சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்குனர் பரிந்துரைத்திருந்தார். அவரது பரிந்துரையை ஏற்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் பிறப்பித்துள்ள அரசாணை விவரம் வருமாறு,
பத்தாம் வகுப்புத் தேர்வுக் கட்டணமாக பள்ளித் தேர்வர்களிடமிருந்து ரூ.115ம், மெட்ரிக் பள்ளித் தேர்வர்களுக்கு அறிவியல் 1 மற்றும் 2-க்கு செய்முறைத் தேர்வு இருந்ததால் ரூ.225ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
வரும் 2012 மார்ச்சில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி, அனைத்துப் பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு தேர்வுக் கட்டணத்தில் எந்தவித உயர்வும் கூடாது என்று அரசு கருதியுள்ளது.
எனவே மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கட்டணமாக ரூ.115ஐ நிர்ணயம் செய்து வழங்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கோரியுள்ளார். அதையேற்று மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.115 நிர்ணயம் செய்யப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment