கையடக்கத்தொலைபேசி சந்தையில் 1990 ஆம் ஆண்டு முதல் தனக்கென ஒரு தனியிடத்தினை பிடித்திருந்த நொக்கியா முதற்தடவையாக அப்பிளிடம் தனது இடத்தினை இழந்தது. கடந்த பல மாதங்களாக நொக்கியா தனது சந்தையினை சிறிது சிறிதாக இழந்து வந்தது.
அந்நிறுவனத்தின் அறிக்கைகளின் படி 2011 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் தனது விற்பனை 34% குறைந்துள்ளதாகவும் 16.7 மில்லியன் கையடக்கத்தொலைபேசிகளை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் அப்பிள் 20 மில்லியன் ஐ போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது நொக்கியாவிற்கு பாரிய அடியாகும்.
மேலும் தென்கொரிய நிறுவனமான செம்சுங் நொக்கியாவை முந்தும் நிலையில் உள்ளதாகவும் அதன் அறிக்கை வெளியாகும் போது அதன் நிலை இதைவிட சிக்கலாகுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் நொக்கியாவின் சந்தைப் பங்கானது 38 வீதத்திலிருந்து 28 வீதமாக வீழ்ச்சியடைந்தது.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்பிள் மற்றும் கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினைக்கொண்டியங்கும் கையடக்கத்தொலைபேசிகளும் சந்தையில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றமை பிரதான காரணமாகும்.
இதனோடு நொக்கியா இன்று வரை தனது ‘சிம்பியன்’ இயக்குதளத்தினை கொண்டியங்குவதே அதன் தோல்விக்கான மற்றுமொரு பிரதான காரணமாகும்.
இதனைத் தவிர்க்கவே நொக்கியா விண்டோஸ் உடன் கைகோர்ப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. எனினும் கையடக்கத் தொலைபேசிச் சந்தை வேகமாக வளர்ந்துவரும் நிலையில் நொக்கியா தனது இடத்தினை தொடர்ச்சியாக இழந்து வருகின்றது.
சீன நிறுவனமான ‘ZTE’ மற்றும் ‘RIM’ இன் பிளக்பெரி ஆகியவையும் குறிப்பட்ட அளவில் வளர்ச்சியடைந்து வருகின்றமை நொக்கியாவிற்கு மேலும் சவாலாளிப்பதாகவுள்ளது.
நொக்கியா வெகுவிரைவில் புதிய இயக்குதளத்தினை உபயோகிப்பதுடன் பல முன்மாதிரியான கையடக்கத்தொலைபேசிகளை தயாரிக்காவிடில் சந்தையில் காணாமல் போகும் நிலை வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி.
|
No comments:
Post a Comment