Wednesday, December 21, 2011

முல்லைப் பெரியாறு: மத்திய அரசின் முடிவுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு


முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டால், அதனை சமாளிக்க அவசர திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் நிபுணர் குழுவை அமைத்திருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாணமை ஆணையத்தின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் இந்த முடிவு கேரளாவின் நேர்மையற்ற நோக்கத்துக்கு பணிந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

நிலநடுக்கம், வெள்ளம் போன்றவை ஏற்பட்டால் முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் கீழே உள்ள பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அவசர கால திட்டம் குறித்து தயாரிப்பதற்காக உங்கள் தலைமையிலான தேசிய இயற்கை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த 12-ம் தேதி நிபுணர் குழு ஒன்றை அமைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது கேரள அரசின் நேர்மையற்ற நோக்கத்துக்கு பணிந்த செயல் மட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் அதனால் நியமிக்கப்பட்ட அதிகாரம் பெற்ற குழு ஆகியவற்றின் முன்பு ஏற்கனவே இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது தவிர வேறு அல்ல.

2006 பிப்ரவரியில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நிபுணர்களின் அறிக்கைகளை பரிசீலித்த பின்னர் அணையின் நீர்மட்டத்தை துவக்கத்தில் 142 அடி வரை உயர்த்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்ததை நீங்கள் அறிவீர்கள்.

மேலும், உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள அதிகாரமளிக்கப்பட்ட குழு அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சோதனைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் சில சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறது.

இந்தக் குழு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை அளிக்க இருக்கிறது. அப்படி இருக்கும் போது தேசிய இயற்கை பேரழிவு நிர்வாக குழுமத்தை அணுகி, உண்மையற்ற, கற்பனையாக ஆபத்து ஏற்பட்டால் ஒரு அவசர கால திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று கேட்டிருப்பது, கேரள அரசு சட்ட நடைமுறைகளை வளைப்பதாகும். இந்த அணை பாதுகாப்பற்றது என்று அதிகாரம் பெற்ற குழு அறிவிக்க வேண்டும் என்பதே கேரள அரசின் நோக்கம் போல காட்சி அளிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ரூர்கியில் உள்ள ஐஐடி பேராசிரியர் டி.கே.பவுலை ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று கோரியிருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ஆனால், உச்ச நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளவில்லை.
தற்போது மத்திய அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவின் அந்த பேராசிரியர் இடம்பெற்றுள்ளார். இது போல தேசிய இயற்கை பேரழிவு நிபுணர் குழு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்னை நிலுவையில் உள்ள நிலையில் மேலும் அதிகாரம் பெற்ற குழு அணையின் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், தேசிய இயற்கை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், நிபுணர் குழுவை நியமித்திருப்பது தேவையற்றது.

எனவே, கடந்த 12-ம் தேதி தேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment