ஒரு கிராமத்து வீட்டில், பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றனர் செபாஸ்டியன் அவனது மனைவி, இரண்டு குழந்தைகள், அவனது தாய் மேரி, மற்றும் தந்தை எல்லோரும். அது செபாஸ்டியன் குடும்பத்தின் வயதான பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.
பார்ட்டி ஆரம்பித்து எல்லோரும் குழுமியிருக்கையில் செபாஸ்டியனின் தந்தை அந்த மூதாட்டிக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசளிக்க, அது எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது சிறுநீர் கழித்துவிடுகிறது. உடனே அதை துடைப்பதற்காக செபாஸ்டினின் தந்தை தனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து கர்சீப் எடுத்து நீட்ட, அது ஒரு பெண்ணின் உள்ளாடை!
உடனே, சிரித்துவிடும் குடும்பத்தினர், பின்னர் சுதாரித்தாலும், செபாஸ்டியனின் அம்மா மேரி மட்டும் தனது கணவர் மீது கோபம் கொள்கிறாள்.
பார்ட்டியில் ஏற்படும் இந்த சலசலப்பால் குடும்பம் மொத்தமும் செபாஸ்டியன் அப்பாவோடு கோபித்துக்கொண்டு நகரத்தில் இருக்கும் செபாஸ்டியன் வீட்டிற்கு கிளம்பி வந்து விடுகிறது.
செபாஸ்டியன் வீட்டுக்கு வந்தும் அவனது அம்மா இந்தச் சம்பவத்தை நினைத்து ரொம்பவே வருந்துகிறாள். அம்மாவை சமாதானப்படுத்துவதற்காக அடுத்த நாள் அப்பாவை பார்க்க கிராமத்து வீட்டுக்கு வருகிறான் செபாஸ்டின். அங்கு அவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்துவிடுகிறான். உடனே கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பும் அவனிடம் அவர் சில விளக்கங்கள் கொடுத்து சமாளிக்கிறார்.
அந்தப் பெண்ணும் செபாஸ்டியனின் அப்பாவை தான் காதலிப்பதாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்கிறாள். இருந்தாலும் அப்பாவிடம் நீங்கள் அம்மாவை ஏமாற்றிவிட்டீர்கள் என கோபித்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு வந்துவிடுகிறான். வழியிலேயே தொலைபேசி வழியாக இந்த விஷயத்தை தனது மனைவியிடமும் சொல்ல அவளும் அதிர்ச்சியாகிறாள் என்றாலும் இதை சகஜமாக எடுத்துக்கொள்கிறாள்.
இதற்கிடையில் செபாஸ்டியனின் அப்பா தொலைபேசி மூலம் தனது மனைவி மேரியிடம் பார்ட்டியில் அப்படி நடந்துவிட்டதற்கு மன்னிப்பு கேட்டு, அவள் மீதான காதலை வெளிப்படுத்துகிறார். இதனால், அவர் மீதான கோபம் மறந்து ஓரளவு சமாதானத்துக்கு வருகிறாள் மேரி. இப்போது வீட்டுக்கு வரும் செபாஸ்டியன் அவளிடம் அப்பாவின் இரண்டாவது காதல் விஷயத்தை பேச முற்பட, நானும் அவரும் ஏற்கெனவே சமாதானமாகிவிட்டோம் எனக்கு அவர் மீது எந்த கோபமும் இல்லை என சொல்கிறாள். இதனால் தற்காலிகமாக அவளுக்கு தெரியவேண்டிய விஷயம் தள்ளிப்போகிறது.
மேரி கணவனோடு திரும்ப கிராமத்து வீட்டில் இருக்கும் காலகட்டத்தில் அவர்களின் கோபம் மெல்ல மறைந்து இருவரும் சமாதானமாகி நிலைமை சீராக இருக்கும்போது மேரியின் நண்பர்கள் வழி அவளது கணவன் இன்னொரு பெண்ணை காதலிப்பதாகவும், அவள் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரியவர, மீண்டும் கணவனோடு கோபித்துக்கொண்டு செபாஸ்டியன் வீட்டுக்கே வந்துவிடுகிறாள்.
செபாஸ்டியன் அப்பா காதலித்த பெண்ணுக்கும் குழந்தை பிறந்து விடுகிறது. கணவனால் ஏமாற்றப்பட்டதாக உணரும் மேரி போதை பொருட்களுக்கு பழக்கமாகிவிடுகிறாள். புதிய நண்பர்களும் கிடைக்க கவலைகளும் மறக்கிறாள். ஒரு சமயம் அவளுடைய புதிய நண்பர்களை வீட்டிற்கே அழைத்து விருந்தும் கொடுக்கிறாள். அந்த விருந்தில் செபாஸ்டியனும் அவனது மனைவியும்கூட அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு மயங்கி விடுகின்றனர்.
அடுத்த நாள் காலையில் போதை தெளிந்து எழும் செபாஸ்டியனுடைய மனைவி, மேரியோடு சண்டை போடுகிறாள். நேற்றிரவு பார்ட்டியில் குடிக்க வைத்ததற்காகவும், தங்களது சந்தோஷமான வாழ்க்கை அவளால் தொலைந்து வருவதாகவும் சத்தம்போடுகிறாள். இதனால் கோபித்துக்கொண்டு வெளியேறும் மேரி எதிர்பாராதவிதமாக விபத்தில் அடிபட்டு மீண்டும் செபாஸ்டியன் வீட்டுக்கே திரும்பிவிடுகிறாள்.
உடல் நலம் சரியானதும் மேரிக்கு புது காதலன் ஒருவரோடு பழக்கமாகிறது. மேரியும் அவளது புதுகாதலனும் செபாஸ்டியன் வீட்டிலேயே தங்குகிறார்கள். இதனால் செபாஸ்டினுக்கும் அவனது மனைவிக்கும் அடிக்கடி சண்டைகள் நடக்கிறது. அவனோடு சந்தோஷமாக இருக்க முடியவில்லை, குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்று அவள் வருத்தப்படுகிறாள். இந்த வருத்தம் அவனுக்கும் இருந்தாலும், இதற்கு விரைவிலேயே தீர்வு கிடைக்கும் என்றும் சொல்கிறான். ஒரு சமயம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மனைவியோடு உறவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது மேரி தனது காதலனோடு வீட்டுக்குள் வருகிறாள். இவர்கள் அதிர்ச்சியாகி அடுத்த அறை வழியாக சமையல் அறைக்கு சென்று பதுங்க, மேரியும் அவளது காதலனும் இவர்களின் படுக்கை அறையிலேயே உறவு கொள்ளும் சப்தம் கேட்கிறது. இப்போது கணவன் மனைவிக்கிடையில் சண்டை மேலும் வலுக்கிறது.
மேரியால் தங்களது குடும்பத்துக்குள் ஏற்படும் சிக்கல்களை செபாஸ்டின் தனது அப்பாவோடு பகிர்ந்து கொள்கிறான். அப்பாவும் அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறார். அந்த இரவு அவனும் அவனது மனைவியும் வீதியிலேயே வாகனத்தில் உறங்கிவிடுகின்றனர். தங்களது வாழ்க்கையில் குறுக்கிடுவதாக மேரியின் காதலனோடு செபாஸ்டின் பேச முற்படும் போது இருவருக்கும் சண்டையாகிவிடுகிறது.
இதனால் மேரியும் அவளது காதலனும் வீட்டைவிட்டு புறப்படுகின்றனர். செபாஸ்டினும் அவனது மனைவியும் தங்களுக்கு புது வாழ்க்கை கிடைத்தாக உணர்கிறார்கள். அந்த இரவு அவர்களுக்கு சந்தோஷமாக கழிகிறது. அடுத்த ஒரு விருந்தில் செபாஸ்டினுடைய மனைவி, குழந்தைகள், அவனுடைய அப்பா அவரது புது குழந்தை, காதலி, அந்த வயதான பாட்டி என எல்லோரும் கூடுகிறார்கள். செபாஸ்டியனுடைய அம்மா மேரி தனது புது காதலனோடு வீடியோ கான்பரன்சில் பங்கெடுத்துக்கொள்ள படம் முடிகிறது.
காதலிப்பதற்கோ, வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பதற்கோ வயது ஒரு தடையில்லை என்பதுதான் மையக்கரு. செபாஸ்டியனுடைய அப்பா அறுவது வயதில் காதலிப்பதும், குழந்தை பெற்றுக்கொள்வதும், அதை மற்றவர்கள் சகஜமாக எடுத்துக்கொள்வதும் மேற்குலகின் கலாச்சார வளர்ச்சியை சரியான வகையில் உணர்த்திவிடுகிறது.
படம் நெடுக வரும் நகைச்சுவை உணர்வுதான் பார்வையாளனை கதைக்குள் பயணிக்க வைக்கிறது என்று சொல்லலாம். படத்தின் தொடக்கத்தில் வயதான பாட்டிக்கு பரிசாக வரும் நாய்க்குட்டி படம் நெடுக எதையாவது தின்று கொண்டே இருக்கிறது. செபாஸ்டினும் அவனது மனைவியும் தனியாக இருக்கும் ஒரு காட்சியில் அந்த நாய்க்குட்டி திடீரென நடுவில் வந்து படுத்துக்கொள்கிறது.
செபாஸ்டியனுடைய அம்மாவால் அவனது குடும்ப வாழ்க்கை சிதைவதை சித்தரிக்கும் குறியீடாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஒரு காட்சியில் செபாஸ்டியனுடைய அப்பாவின் காதலி நிறைமாத கர்பிணியாக இருக்கும்போது அவளது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அவனும், அவனது மனைவி, குழந்தைகள் என எல்லோரும் அவளுடைய வயிற்றில் கையை வைத்து புது வரவுக்கு செய்திகள் சொல்கிறார்கள்.
தாய்மை எவ்வளவு கொண்டாட்டத்துக்கு உரியது என்பதை அழகாக சித்தரிக்கப்பட்ட காட்சி அது!
இந்த இடத்தில் இதே போன்றதொரு சூழ்நிலை நமது சமூகத்தில் நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஜெயகாந்தன் எழுதிய ஒரு சிறுகதையை ஒப்பிடலாம். மகன்களுக்கெல்லம் திருமணம் முடித்து மருமகள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில், அந்த வீட்டுக்கார அம்மாவும் கர்ப்பமாகிவிடுவார். மருமகள்கள் தாய்மை அடைந்திருக்கும் நேரத்தில், தனது கர்ப்பம் வெளியே தெரிந்துவிட்டால் தன்னை எல்லோரும் ஏளனமாக பார்ப்பார்கள் என்று வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுவார் அந்த அம்மா. வெளியூரிலிருந்து வந்த தனது செல்ல மகனைகூட பார்க்காமல் அறைக்குள்ளேயே முடங்கிகிடப்பார். பின்பு விஷயம் தெரிந்து மகன் தாய்மை என்பது அற்புதமானது, அது கொண்டாடப்பட வேண்டியது என்று தேற்றி அம்மாவை தன்னோடு அழைத்து செல்வார். இது எப்போதோ படித்தது சரியாக ஜாபகமில்லை என்றாலும், இப்போதும் இந்த நிலைமைதான் நமது சமூகத்தில் இருக்கிறது.
அன்பும், அனுசரணையும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக இருக்கும்போதுதான் காதல் உயர்ந்த நிலையை அடைகிறது. அதற்கு வயதும் ஒரு தடையில்லை என்பதுதான் உண்மை. என்னதான் நமது குடும்ப அமைப்பு கட்டுக்கோப்பாக இருந்தாலும், இந்த பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களில் இன்னும் நாம் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. முன்னேறிய நாடுகளின் குடும்ப அமைப்பு சிக்கல்களுக்கும் இதுவே காரணம் என்றாலும், எத்தனை வயதிலும் காதலையும், அன்பையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதை சிறப்பாக உணர்த்தியிருக்கும்படம் என்று சொல்ல முடியும்.
|
No comments:
Post a Comment