மலையாள நடிகர் மம்முட்டி திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை இனவெறிப் பிரச்சினையாக்கி விட்டனர் கேரளத்தில் உள்ள சிலர். தமிழகத்திலிருந்து எந்த வாகனம் போனாலும், யார் போனாலும் தாக்குகிறார்கள், கெட்ட வார்த்தைகளால் பேசுகிறார்கள், சபரிமலை பக்தர்களை மிகக் கேவலமாக அர்ச்சிக்கிறார்கள். இதனால் கொந்தளித்துப் போன தமிழகத்தில் உள்ள சிலர் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதை எதிர்பார்க்காத கேரள அரசு தமிழகத்தில் உள்ள மலையாளிகளை யாரும் தாக்கக் கூடாது என்று கோரி வருகிறது. ஆனால் கேரளாவில் தாக்குதலை தடுக்கவோ, நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபடுவோரைக் கைது செய்யவோ அங்குள்ள போலீஸார் சுத்தமாக முயல்வதில்லை. மாறாக அவர்களே தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதாக தாக்குதலுக்குள்ளான தமிழர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் மலையாள நடிகர் மம்முட்டி சென்னை வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கால் மணி நேரம் பேசினார். பின்னர் வெளியே வந்த மம்முட்டியிடம் முதல்வரிடம் என்ன பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு முகத்தைத் திருப்பிக் கொண்டு பதிலளிக்கக் கூட நேரமில்லாமல் விருட்டென போய் விட்டார் மம்முட்டி.
முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் உள்ள அத்தனை சினிமாக்காரர்களும் உள்ளனர். கேரள அரசுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஒரு சினிமா சங்கமும் இதுவரை கேரள அரசுக்கு எதிராக களம் இறங்கவில்லை. முதல்வர் சொல்லட்டும் பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் சார்பில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமும் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மம்முட்டி வந்து போயிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக திரைத்துறையினரை போராட விடாமல் தடுக்க தூதராக அவர் வந்து போனாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழகத் திரைத்துறையினர் இப்போதைக்கு தமிழக அரசுக்கு ஆதரவாக போராடுவதாகத் தெரியவில்லை.
|
No comments:
Post a Comment