Wednesday, December 21, 2011

கேபிளின் வரலாறு பாகம் 1

முன்னறிவிப்பு :

இது என் கதையல்ல.. ஆனால் என் கதையாகவும் இருக்கக்கூடும். வேண்டுமானால் தமிழ் வலைப்பதிவுலகில் எழுதப்படும் ஆட்டோ பிக்‌ஷனாகக்கூட இருக்ககூடும். கடந்த இருபது வருடங்களில் நம்மிடையே வாழ்வில் ஒரு அங்கமாய் போன ஒரு தொழிலை பற்றியும், அதை சார்ந்த ஒருவனின் வாழ்க்கையை பற்றியது இக்கதை. இது பல சமயங்களில் அபுனைவாகவும், புனைவாகவும் கூட இருக்கக்கூடும் என்பதை உங்களுக்கு நினைவுறுத்தவே இந்த முன்னறிவிப்பு.
கேபிளின் கதை-1 

என் கண்ட்ரோல் ரூமிலிருந்து கொத்தாய் ஒயர்கள் ஒரு பெரிய ஓட்டையின் வழியாய் வெளியேறி, இடது வலது என பார்க்காமல், ஆக்டபஸின் கைகள் போல எதிர் ப்ளாட் மொட்டைமாடிக்கும், பக்கத்து பிளாட் மாடிக்கும், பத்தடி இரும்பு போஸ்டிற்குமாய் பரந்து அங்கிருந்து மேலும் மாடிகளுக்கும், பல போஸ்ட் கம்பங்களுக்குமாய் ஆக்கிரமித்து, அடுத்த வீடு, அடுத்த திருப்பம், அடுத்த தெரு, என்று இரை தேடும் பாம்பு போல போய்க் கொண்டேயிருந்தது.
எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் இந்த இருபது வருடங்களில். மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துவிட்டு, ஒரு ஹாபியாக வீடியோ கேசட் வாடகை விட ஆரம்பிக்க, மெல்ல அத்தொழில் நிரந்தரக் கடையாய் மாறி, வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த காலத்தில் வர ஆரம்பித்த அடுத்த ஜெனரேஷன் தொழில் தான் இந்த கேபிள் டிவி. வீடியோ பார்லர் வைத்திருந்த போது கூட யாரும் செய்யாத ஒரு விஷயம், நான் கேபிள் டிவி தொழில் செய்ய ஆரம்பித்த போது, செய்தது... ஊரே சிரித்தது.

”இஞ்ஜினியரிங் படிச்சிட்டு இப்படி டெக்குல படம் போட்டு வீடு வீடா வசூல் பண்ணப் போறேன்னு சொல்றியே இது தேவையா?” என்று கேவலமாய் என்னை பார்த்த நண்பர்கள், உறவினர்கள் ஏராளம்.

நான் அப்போதெல்லாம் அவர்களிடம் சொல்லும் ஒரு விஷயம் எதிர்காலத்தில் இந்த தொழில் இன்னும் முப்பது நாற்பது வருடங்களுககு கோலோச்சப் போகிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த தொழில் செய்ய பல பெரிய தொழிலதிபர்கள் நுழைந்து உனக்கு எனக்கு என்று போட்டிப் போடப் போகிறார்கள். அன்று நான் இருப்பேனோ இல்லையோ..? நிச்சயம் இந்த தொழில் இருக்கும் என்பேன். சிரிப்பார்கள்.

சினிமா என்ற ஒரு விஷயம் தியேட்டரில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்று இருந்த காலத்தில், கருப்பு வெள்ளை டிவி, பிறகு கலர் டிவி என்று வளர்ச்சியடைந்தது. அப்படி வளர்ந்த காலத்தில் சினிமாவுக்கு எமனாய் வந்தது விடியோ எனும் ஒரு விஷயம். மெல்ல அந்த வீடியோ தொழிலை ஆக்கிரமித்து, ஒரு இடத்திலிருந்து வீடியோ டெக்கின் மூலம் படம் போட்டால் வீடுகளில் இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலம் ஆயிரம் பேரின் வீட்டிற்கு படம் காட்ட முடியும் எனும் போது வீடியோ கேசட்டின் ஆதிக்கம் ஒழிந்து, கேபிளின் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. வீட்டிலிருந்தே தினமும் காலையும் மாலையும் படம் பார்ப்பது ஆரம்ப காலத்தில் ஆடம்பர விஷயமாயத்தான் மக்கள் கருதினார்கள். ஆனால் எத்தனை நாள் தான் இப்படி தூர்தர்ஷன் காட்டும் தில்ரூபாவையே பார்த்துக் கொண்டிருப்பது என்ற விஷயம் மெல்ல கேபிளின் மேல் பார்வையை திருப்பியது.

இருபது வருடங்களுக்கு முன் அலுமினிய கம்பிகளாளான ஆண்டெனாவினால் சிக்னல் பெற்று, ரெண்டே ரெண்டு சானல்களை வைத்துக் கொண்டு, காற்றில் அரைடிகிரி திரும்பினாலும், அலையடிக்கும், மெக்கானிக்கல் ட்யூனர் கருப்பு வெள்ளை டிவியை ட்யூன் செய்து படம் பார்த்து கொண்டிருந்த மக்களுக்கு, உங்கள் தொலைக்காட்சியில் 200 சேனல்கள் வரும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருப்பார்களா என்று தெரியவில்லை. ”ஐ.த்தோடா” என்று கிண்டலடித்தார்கள்.

வயலும் வாழ்வும், ஒளியும் ஒலியும், சனிக்கிழமை திரைப்படம் என்கிற விஷயங்கள் எல்லாம் உலக அதிசயமாய் இருந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் ரூபவாஹினி தெரிகிறது என்பதற்காக, பத்தடி உயர இரும்பு கழியில் பெரிய ஆண்டனாவை வைத்து, சிக்னலை இழுக்க, மேலும் ஒரு பூஸ்டரை போட்டு, நடுநடுவே அலையடிக்கும் ரூபவாஹினியில் போடும் தமிழ் படங்களை பார்ப்பதற்கு ஆவலாய் அலைந்த காலத்தை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

தமிழ் நாட்டை பொறுத்த வரை கேபிள் டிவி தொழில் செய்பவரை ஆரம்ப காலத்தில் கேபிள் டிவிக்காரர்கள் என்று அழைத்திருந்தாலும், சாட்டிலைட் ஒளிபரப்பில் தமிழில் முன்னோடியான சன் தொலைக்காட்சி வந்ததும் தமிழ் நாடு பூராவும் கேபிள்டிவி தொழில் செய்பவர்களை சன் டிவிக்காரர்கள் என்று அழைப்பது இன்றளவும் வழக்கமாய் இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் தான் எவ்வளவு தூரம் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்னும் வளரும். வளர்ந்து கொண்டேயிருக்கும். இதற்கு முற்றுப்புள்ளி கிடையாது. இது முற்று பெறும்போது உலகமும் முற்று பெற்றுவிடுமோ என்ற அச்சம் மனதில் தோன்றியது.

இன்றைய நிலையில் தமிழ் சேனல்கள் என்று எடுத்துக் கொண்டால் சன் குழுமம், கலைஞர் டிவி குழுமம், ராஜ் டிவி குழுமம், ஜெயா டிவி குழுமம் என்று லிஸ்ட் எடுத்துக் கொண்டாலே சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட சேனல்கள் சேர்ந்துவிடும். இன்ன பிற ஒற்றை சேனல்களை கணக்கெடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ஐம்பது சேனல்கள் வரிசையில் வந்துவிடும். இதுதவிர ஒவ்வொரு ஊரிலும உள்ள லோக்கல் சேனல்கள் எனப்படும் சேனல்களை கணக்கிலெடுத்தால் நூற்றுக்கும் மேற்படும். முக்கியமாய் நம் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் சுமார் 30க்கும் மேற்பட்ட லோக்கல் சேனல் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..



இப்படி தமிழில் மட்டுமே இவ்வளவு சேனல்கள் இருக்க, ஒவ்வொரு தேசிய, மாநில மொழிகளுக்கும் டஜன் கணக்கில் கொத்து கொத்தாய் டிவிக்கள் சேனல்களால் நிரம்பி வழிகிறது. முதல் முதலாய் கேபிள் டிவி என்று எப்போது எங்கே ஆரம்பித்தார்கள்? எப்படி இதன் டெக்னாலஜி வளர்ந்தது? எப்படி இவ்வளவு சேனல்கள் நடத்த முடிகிறது? இந்த சேனல்களை எப்படி கேபிளின் வழியே ஒளிபரப்புகிறார்கள்? பே சேனல்கள் எனப்படும் கட்டண சேனல்கள் எப்படி பணம் வசூல் செய்கிறார்கள்? எவ்வளவு கோடி ரூபாய்கள் இந்த கேபிள் தொழிலில் புரள்கிறது தெரியுமா? எத்தனை பெரிய நிறுவனங்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறது? அனலாக் நெட்வொர்க், டிஜிட்டல் நெட்வொர்க் என்றால் என்ன?. கண்டிஷனல் ஆக்ஸஸ் என்றால் என்ன? செட்டாப்பாக்ஸ் முறையில் எப்படி கையாளப்படுகிறது? எம்.எஸ்.ஓ என்றால் என்ன? எம்.எஸ்.ஓ தான் எல்லாருக்கும் சிக்னல் கொடுக்கிறார்கள் என்றால் ஆப்பரேட்டர்கள் எனும் நம் ஏரியாவில் இருக்கும் ஆப்பரேட்டர்கள் என்ன செய்கிறார்கள்?

கேபிளின் ஆதிக்கத்தை டி.டி.எச் எனப்படும் வீட்டிற்கு நேரடியாய் ஒளிபரப்படும் டெக்னாலஜி வந்ததினால் கேபிள் டிவியின் நிலை என்னவாகும்? எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத ஒரு அரசியல் தமிழ் நாட்டு கேபிள் டிவி தொழிலில் இருப்பது எதனால்?. இந்த அரசியல் பின்னணியால் பாதிக்கப்ப்ட்ட ஆப்பரேட்டர்கள் கதி? இதில் புரளும் பணம் என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதிலை ஒரு கேபிள் டிவி அதிபரின் பார்வையில் ஒரு ஆட்டோ பிக்‌ஷனாக இப்புத்தகத்தின் மூலம் பார்க்கலாம்.

No comments:

Post a Comment